சுனாமியிலும் இனவாதத்தை காட்டிய சிங்களம், இன பேதமில்லாமல் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள்!

You are currently viewing சுனாமியிலும் இனவாதத்தை காட்டிய சிங்களம், இன பேதமில்லாமல் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள்!

தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களினதும் – சிறிலங்கா சனாதிபதி திருமதி சந்திரிகா அம்மையார் அவர்களினதும் தலைமைத்துவ ஆற்றல்களையும், குணவியல்புகளையும் ஒப்பிட்டு மதிப்பீடு செய்யும் ஒரு அளவுகோலாக சுனாமி அனர்த்தத்திற்குப் பின்னான அவர்களின் செயற்பாடுகளை சர்வதேச சமூகம் எடைபோட்டுப் பார்க்கின்றது.

அந்தப் பேரழிவில் சிக்கி உயிரிழந்த தமிழ் – முஸ்லிம் – சிங்கள மக்கள் அனைவர்க்கும் அனுதாபம் தெரிவித்து தலைவர் பிரபாகரன் அறிக்கை விட்டதிலிருந்து, நிவாரண உதவிகள் இன பேதமில்லாமல் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்று பாதிக்கப்பட்ட எல்லோர்க்கும் ஆதரவாக பொதுவாகக் குரல்கொடுத்து உன்னத மனிதாபிமான நிலைப்பாட்டை அவர் எடுத்திருந்தார்.

சுனாமியிலும் இனவாதத்தை காட்டிய சிங்களம், இன பேதமில்லாமல் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள்! 1

அலை அடித்து ஓய்ந்த உடனே, மிக விரைவாக, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு பொறுப்புணர்வுடன் செயற்திறமை காட்டியது, இந்தப் பிராந்தியத்திலேயே புலிகள் இயக்கம்தான் என்பது இன்று ஒரு பொதுவான கருத்தாகிவிட்டது.

சந்திரிகா அம்மையாரும், சிங்கள கட்சியினரும் இதை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அந்த உண்மை ஏகமனதாக உணரப்பட்டுள்ளது.

புலிகள் இயக்கத்தின் கடற்புலி வீரர்களை, காவல்துறை உறுப்பினர்களை, போராளிகளை மற்றும் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் உள்ளிட்ட மனிதநேய உதவி அமைப்புகளின் தொண்டர்களை உடனடியாகவே களமிறங்கி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட தலைவர் உத்தரவிட்டிருந்தார்.

சுனாமியிலும் இனவாதத்தை காட்டிய சிங்களம், இன பேதமில்லாமல் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள்! 2

விளைவு! வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களே வியந்து – பாராட்டும் அளவுக்கு ஒரு அற்புதமான இடர்கால மீட்புப்பணியை புலிகள் இயக்கம் செவ்வனே நிறைவேற்றியுள்ளது. உயிர் ஆபத்திற்குள்ளும் தங்களை மீட்கவந்த புலிவீரர்களை அந்த மக்கள் நன்றியுடன் நினைவு கூருகின்றனர்.

சுனாமி அனர்த்தத்திற்குள் சிங்கள அரசைப்போன்று இனரீதியான அரசியலைப் புகுத்தும் சிறுமைத் தனத்தை புலிகள் இயக்கம் செய்யவில்லை.

பெருந்தொகைப் படையினர் இயற்கைச் சீற்றத்தில் பலியாகியிருந்த போதும் – அதைப் பிரச்சாரப்படுத்தி குதூகலிக்கும் நாகரீகமற்ற அரசியலை புலிகள் இயக்கம் செய்யவில்லை.

அத்துடன் அழிவடைந்த பகுதிகளைப் பார்வையிடவந்த  உலகத்தலைவர்களை முல்லைத்தீவு செல்லவிடாது தடுத்து அவர்களைச் சங்கடப்படுத்திய சிங்கள அரசின் இனவாதச் செயற்பாட்டை பெரிய விடயமாக எடுத்து அந்த உலகத் தலைவர்களை மேலும் சங்கடத்துக்குள்ளாக்காமல் அரசியல் நாகரீகத்துடன் புலிகள் இயக்கம் நடந்துகொண்டது.

இதேவேளை, கடந்த வருடம் தென்னிலங்கையில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சிங்கள மக்கள் பெரும் பாதிப்படைந்தபோது அங்கே நிவாரணப் பொருட்களுடன் சென்ற புலிகள் இயக்கம் சிங்கள மக்களுக்கு உதவிய மனிதாபிமான செயற்பாட்டையும் உலகம் அவதானித்தபடியே இருந்தது.

இவ்விதமாக, தேவை ஏற்படும்போதும், தேசிய அளவில் நெருக்கடிகள் ஏற்படும்போதெல்லாம் புலிகள் இயக்கம் அரசியல் நாகரீகத்தையும் – மனிதாபிமான நிலைப்பாட்டையும் கடைப்பிடித்தபடி பண்பாக நடந்துகொண்டதை உலகசமூகம் அறியும்.

இவையெல்லாம் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அபாரமான தலைமைத்துவ ஆளுமையினதும், சீரிய உயர் பண்புகளினதும் அரசியல் வெளிப்பாடுகளே என்பதை உலக சமூகம் எடைபோட்டிருந்தன.

ஆனால், சிறிலங்கா சனாதிபதி சந்திரிகா அம்மையாரோ இதற்கு முரணானதொரு அரசியல் செயற்பாட்டையே இந்த இடர்கால நெருக்கடி வேளையிலும் நடாத்தி வருகின்றார்.

அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உடனடி மீட்பு நடவடிக்கைகளை அரசு சரியாக நடாத்தியிருக்கவில்லை என்று ஊடகங்கள் குற்றம் சாட்டியுள்ளன.

சுனாமியிலும் இனவாதத்தை காட்டிய சிங்களம், இன பேதமில்லாமல் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள்! 3

அரச தலைவியின் ஆளுமையின்மையும், அதன் விளைவான அரச இயந்திரத்தின் அசமந்தப்போக்குமே இந்த செயற்திறனின்மைக்கு முக்கிய காரணங்கள் என்பது உலக ஊடகங்களின் கருத்தாகும்.

அம்பாறை மாவட்டத்தின் அரச அதிபராக உள்ள சிங்கள அதிகாரி அனர்த்தம் நடந்தும் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கவில்லை. அம்பாறையில் சிங்கள மக்கள் பாதிக்கப்படவில்லை என்பதே அவரின் இந்த புறக்கணிப்புக்குக் காரணம். இது தொடர்பாக முஸ்லிம் அரசியல்வாதிகளின் கடுமையான அழுத்தத்தின் விளைவாக முஸ்லிம் அதிகாரி ஒருவர் அம்பாறையின் மேலதிக அரச அதிபராக நியமிக்கப்பட்டார். அவரின் தலைமையிலேயே
அம்பாறையில் அரச இயந்திரத்தின் இடர்காலப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இத்தகையதொரு தேசிய அனர்த்தவேளையிலும் ஒரு சிங்கள அதிகாரி மனிதாபிமானமில்லாமல் தனது இனவெறி உணர்வை செயலில் காட்டியிருந்தபோதும் அவருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையையும் சந்திரிகா அம்மையார் எடுக்கவில்லை. இது அம்மையாரின் இனவெறி உணர்வையே வெளிப்படுத்துகின்றது என்பதே உண்மையாகும்.

சுனாமியிலும் இனவாதத்தை காட்டிய சிங்களம், இன பேதமில்லாமல் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள்! 4

திருகோணமலை மாவட்டத்திலும் இதே நிலைமைதான் இருந்தது. அரச நிவாரணங்கள் இனரீதியாக வரையறுத்து – பாகுபாடாகவே நடந்தன. தமிழ்மக்களுக்குச் சென்ற நிவாரணப் பொருட்கள் படையினராலும் – ஜே.வி.பியினராலும் – சிங்களக் காடையர்களாலும் வழிமறிக்கப்பட்டு திசைதிருப்பப்பட்டன. இத்தகைய குற்றச் செயல்களுக்கும் எந்தவித சட்ட நடவடிக்கைகளையும் அம்மையாரின் அரசு எடுக்கவில்லை.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளை அண்மித்திருந்த சிங்கள மக்கள் இந்த மீட்பு நடவடிக்கைகளிலும் – நிவாரண முயற்சிகளிலும் மனிதாபிமானமாக நடந்துகொண்டனர் என்பதும் முக்கிய செய்திகளாகும்.

இலங்கைத்தீவை சுனாமி தாக்கியபோது தமிழர் தாயகமான வடக்கு – கிழக்கு மாநிலங்களே பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த உண்மையைக்கூட ஏற்கமறுத்த அம்மையார் தென்னிலங்கைதான் அதிகம் பாதிப்படைந்ததாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

உலகநாடுகள் வழங்கிய உதவிப் பொருட்களைக்கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமமாகப் பிரித்தளிக்க அவர் தவறிவிட்டார். இந்த இயற்கை அனர்த்தவேளையிலும் சிங்களவர் – தமிழர் என்று பிரித்துப் பார்த்து தனது இனவாதச் செயற்பாட்டையே காட்டியுள்ளார்.

முப்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருந்தும் – இலட்சக் கணக்கான மக்கள் வீடுகளை இழந்திருந்தும் – பில்லியன் ரூபா சொத்தழிவு ஏற்பட்டிருந்த இந்த துயர நேரத்திலும் அம்மையார் அவர்கள் புலிகள் இயக்கத்திற்கு ஏற்பட்ட இழப்புகளை மிகைப்படுத்தி – மகிழ்ச்சி தெரிவித்து – கருத்துக்களை கூறிக்கொண்டிருந்தார்.

தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் – கடற்புலிகள் அழிந்து விட்டனர் என்று தமது பேரினவாத ஆசைகளை வெளிப்படுத்தி – கேவலமான அரசியலையே சிங்கள அரசு நடாத்திக்கொண்டிருந்தது.

உலகநாடுகளின் நிதி உதவியுடன் 15 நகரங்களை புனரமைக்கப் போவதாக சந்திரிகா அம்மையார் அறிவித்திருந்தார். அதில் ஒன்றுகூட முல்லைத்தீவு மாவட்டத்திற்கோ – யாழ்ப்பாண மாவட்டத்திற்கோ ஒதுக்கப்படவில்லை.

மனிதாபிமானப் பயணம் மேற்கொண்ட உலகத் தலைவர்களை வன்னிப்பகுதிக்கு வரவிடாமல் தடுத்து அநாகரீக அரசியலையே அம்மையார் நடாத்தியுள்ளார்.

இவையெல்லாவற்றையும் உலகசமூகம் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கின்றது. இத்தகைய காட்டுமிராண்டி மனநிலையுடன் இருக்கும் ஒரு ஆட்சிப்பீடத்திடமிருந்து தமிழ்மக்கள் எவ்வாறு அரசியல் உரிமைகளை அமைதிவழியில் பெற முடியும்!? என்று உலகசமூகம் உணர்ந்திருக்கும்.

சுனாமியிலும் இனவாதத்தை காட்டிய சிங்களம், இன பேதமில்லாமல் செயற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள்! 5

ஒருபுறத்தில் தேசிய ஆளுமையையும் – செயல்திறமையையும் கொண்ட ஒரு தலைமை செயற்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை இன்னொரு புறத்தில் இனவெறி உணர்வையும் – சோம்பேறித் தனத்தையும் கொண்டதொரு அரைகுறைத் தலைமை இலங்கைத்தீவில் செயற்பட்டுக்கொண்டிருக்கிறது என்ற உண்மையை உலகசமூகம் அவதானித்தபடி உள்ளது.


விடுதலைப்புலிகள்  இதழ் 

பகிர்ந்துகொள்ள

Leave a Reply