யாழ்ப்பாணம்- மிருசுவிலில், 8 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான இராணுவ சார்ஜண்ட் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பு அளித்து விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக – மேலும் இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக நேற்றுமுன்தினம், சட்டத்தரணி கேசவன் சயந்தன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து, நேற்றுமுன்தினம் மாலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரான கலாநிதி அம்பிகா சற்குணநாதனும், மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
அதேவேளை, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் சார்பில், கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும், மற்றொரு மனுவை நேற்று முற்பகல் தாக்கல் செய்துள்ளார்.
இதையடுத்து மிருசுவில் படுகொலை குற்றவாளியின் விடுதலைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.