சுமந்திரன் குறித்து சம்பந்தனிடம் முறையிட்ட பங்காளிக் கட்சி தலைவர்கள்!

You are currently viewing சுமந்திரன் குறித்து சம்பந்தனிடம் முறையிட்ட பங்காளிக் கட்சி தலைவர்கள்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து, பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நேற்று இரா.சம்பந்தனிடம் முறையிட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் இல்லத்தில் நேற்று சுமார் ஒன்றரை மணிநேரம் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன், தெரிவித்தார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கான கடிதத்தை தயாரித்து அனுப்பும் விடயத்தில் இலங்கை தமிழரசு கட்சியுடன் முரண்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரொலோ மற்றும் புளொட் ஆகியன சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணியுடன் இணைந்து தயாரித்த கடிதத்தில் கையெழுத்திட்டமை சர்ச்சையை ஏற்படுத்தியது.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தக் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் கடிதமொன்றை ஐ.நாவிற்கு அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்த பின்னணியில் கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான முறுகல் மேலும் தீவிரமடைந்தது.

இதன் உச்சக்கட்டமாக ரொலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் சிறிலங்கா இராணுவத்தினருடன் இணைந்து செயற்பட்டதாகவும் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிரான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் போது அவர்களும் பொறுப்புக்கூற வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படலாம் என்ற கருத்துப்பட எம்.ஏ.சுமந்திரன் ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட நிலையில், இன்று கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து, சுமந்திரனின் செயற்பாடுகள் குறித்து முறையிட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் கட்சியின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரொலோ சார்பில் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் கோவிந்தன் கருணாகரம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply