தமிழீழத்தில் சிங்களப் பேரினவாத அரசினால் அதியுச்சமாக நிகழ்த்தப்பபட்டுக் கொண்டிருந்த தமிழின அழிப்பினை தடுத்து நிறுத்தக்கோரி ஐ. நா முன்றலில் தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்களின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவெழுச்சி நாளானது 12.02.2022 அன்று மாலை 18:30 மணியளவில் அவர் ஈகைச்சாவினைத் தழுவிய ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் அமைந்துள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நினைவுகூரப்பட்டது.
சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட இவ் நினைவெழுச்சி நாளில் ஈகைப்பேரொளி முருகதாசன், தமிழின விடுதலைக்காக தங்கள் உயிர்களை ஈகம் செய்த அனைத்து ஈகியர்கள் ஆகியோருக்கான ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன் மலர், சுடர் வணக்கம் செலுத்தப்பட்டது. கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைப் பேணி கனத்த இதயங்களுடன் கலந்து கொண்டிருந்த தமிழின உணர்வாளர்கள் குளிர் காலநிலையையும் பொருட்படுத்தாது தமது வீரவணக்கத்தினைச் செலுத்தியிருந்தனர்.

ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலில் அனைத்துலக சமூகத்திற்கு தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தக் கோரி மரண சாசனம் ஒன்றை தனது தியாகத்தின் மூலம் புரிய வைத்து புலம்பெயர் மக்களிடையே குறிப்பாக இளையோர்களிடம் தொடர்ந்து போராடுவதற்குரிய போராட்ட குணத்தை விட்டுச் சென்ற ஈகைப்பேரொளி முருகதாசன் அவர்கள் 12.02.2009 அன்று தன்னைத் தீயினில் ஆகுதியாக்கி சாவடைந்தார்.
-சுவிஸ் தமிழ் இளையோர் அமைப்பு





