கோடம்பாக்காம், ராயபுரம் உள்ளிட்ட ஒன்பது மண்டலங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. கோடம்பாக்கத்தில் ஓரே நாளில் 85 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் எண்ணிக்கை 546 ஆக அதிகரித்துள்ளது. தென் சென்னையிலும் தொற்றின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மே 7ம் தேதி உறுதி செய்யப்பட்ட 600 தொற்றுகளில், சென்னையில் 399 பேருக்கு தொற்றுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 3043 பேரில், 390 பேர் குணமடைந்துள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 62.98 சதவீதம் ஆண்கள், 36.98 சதவீதம் பெண்களும், திருநங்கை இருவரும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் இன்று அதிகபட்சமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 85 பேருக்கும், ராயபுரத்தில் 68 பேருக்கும், வளசரவாக்கத்தில் 51 பேருக்கும், அடையாறில் 33 பேருக்கும், திரு.வி.க.நகரில் 29 பேருக்கும், தேனாம்பேட்டையில் 27 பேருக்கும், அண்ணா நகரில் 27 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், தண்டையார்பேட்டையில் 23 பேருக்கும், அம்பத்தூரில் 20 பேருக்கும், பெருங்குடி, சோழிங்கநல்லூரில் தலா 10 பேருக்கும், மணலியில் 5 பேருக்கும், ஆலந்தூரில் 3 பேருக்கும், திருவொற்றியூர், மாதவரத்தில் தலா 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோயம்பேடு பரவலால் கோடம்பாக்கத்தில் கடந்த ஆறு நாட்களில் மட்டும் 430 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல், வளசரவாக்கத்தில் வேகமாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ராயபுரத்தில் தொற்று எண்ணிக்கை கட்டுப்படுத்த முடியாத நிலை தொடர்ந்து நீட்டித்து வருகிறது.
சென்னையில் கடந்த 7 நாட்களில் மட்டும் 2,589 பேருக்கு தொற்று பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னையில் மட்டும் 50.6 சதவிகிதம் பேர் பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.