சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்!

You are currently viewing சென்னையில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்!

பருவநிலை மாற்றம் காரணமாக ஆண்டு தோறும் ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சாதாரண மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவது வழக்கமான ஒன்று தான். தற்போதும் மழை, வெயில் என பருவநிலை மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் குறிப்பாக சென்னையில் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் இந்த காய்ச்சல் விட்டுவைக்கவில்லை. குறிப்பாக குழந்தைகள், முதியோர்களை இந்த காய்ச்சல் பாடாய்படுத்தி வருகிறது.

சாதாரண காய்ச்சல் என்றால் 3 நாட்களில் சரியாகிவிடும். தற்போது பரவி வரும் இந்த காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களை 5 நாட்கள் முதல் 7 நாட்கள் வரை பதம் பார்த்து விட்டுதான் செல்கிறது. அவ்வாறு 7 நாட்களில் இந்த காய்ச்சல் குணமான போதிலும் அதன்பின்பு 3 முதல் 7 நாட்கள் வரை உடல்வலி இருக்கிறது. தற்போது பரவி வரும் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 நாட்கள் ஆகியும் கடுமையான காய்ச்சல் குறையாதபட்சத்தில் ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அந்த காய்ச்சல் டெங்கு காய்ச்சலா அல்லது ப்ளூ காய்ச்சலா என கண்டறிந்து அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சென்னை மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக தமிழகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தனி வார்டு இந்த காய்ச்சல் குழந்தைகளை அதிகம் பாதிப்பதால் சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள 8 மாடி கட்டிடத்தில் காய்ச்சலுக்கென தனி வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான குழந்தைகள் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த காய்ச்சல் குறித்து சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் எழிலரசி கூறியதாவது:- தற்போது பரவி வரும் காய்ச்சல் என்பது பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் சாதாரண காய்ச்சல் தான். காய்ச்சல் பாதிப்பு வந்தால் உடனடியாக டாக்டரை அணுகி முறையாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த காய்ச்சல் 3 முதல் 4 நாட்களில் சரியாகி விடும்.

3 நாட்கள் வரை கடுமையான காய்ச்சல் நீடிக்கும்பட்சத்தில் ரத்த பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். ரத்த பரிசோதனையின் போதுதான் டெங்கு காய்ச்சலா அல்லது ப்ளூ காய்ச்சலா என்பது தெரியவரும். தமிழகத்தில் ப்ளூ காய்ச்சல் பாதிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

தற்போது ஒருவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு விட்டால் அது ப்ளூ காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சம் பலருக்கு உள்ளது. காய்ச்சல் வந்தால் பீதி அடைய தேவையில்லை. வெகு சிலர் மட்டுமே ப்ளூ காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். ப்ளூ காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டாலும் பயப்பட தேவையில்லை. முறையான சிகிச்சை மூலம் விரைவில் குணமடையலாம். ப்ளூ காய்ச்சலை குணப்படுத்துவதற்கான மருந்துகளும் தயார்நிலையில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply