பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான நீதி என்பவற்றை இலங்கை அரசாங்கத்திடம் தாம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள பிரிட்டன் வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் பாராளுமன்ற இணைச் செயலாளர் கிறிஸ் எல்மோர், செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக நம்பகமானதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்துடன் தொடர்புடைய நகர்வுகளை பிரிட்டன் உன்னிப்பாகக் கண்காணித்துவருவதாகவும், இதுபற்றி வெளிப்படைத்தன்மை வாய்ந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டியதன் அவசியம் குறித்து இலங்கை அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்திவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று இவ்விசாரணை செயன்முறையில் வலுவான தடயவியல் பாதுகாப்பு நடைமுறைகள் உள்வாங்கப்படவேண்டும் என்றும், வலிந்து காணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் ஆக்கபூர்வமான பங்கேற்பு உறுதிசெய்யப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
‘செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், அதற்கு சர்வதேச சமூகத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதற்கான சாத்தியப்பாடு குறித்துப் பரிசீலிக்குமாறு நாம் இலங்கையை ஊக்குவித்துள்ளோம்’ எனவும் பிரிட்டன் பாராளுமன்றத்தில் எழுத்துமூலம் சமர்ப்பித்த பதிலில் இணைச் செயலாளர் கிறிஸ் எல்மோர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான இணையனுசரணை நாடுகளுக்குத் தலைமை தாங்குவதன் ஊடாகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்துக்கு ஆதரவு வழங்குவதன் ஊடாகவும் இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் பிரிட்டன் உறுதியுடன் இருப்பதாக அவர் தெரிவித்தார்.






