சொகுசு கப்பலில் சிக்கி தவித்த அமெரிக்கர்கள் 300 பேர் தாயகம் திரும்பினர்!

  • Post author:
You are currently viewing சொகுசு கப்பலில் சிக்கி தவித்த அமெரிக்கர்கள் 300 பேர் தாயகம் திரும்பினர்!

ஜப்பான் கடலில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சொகுசு கப்பலில் சிக்கி தவித்த அமெரிக்கர்கள் 300 பேர் தாயகம் திரும்பினர். அங்கு அவர்கள் ராணுவ மையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற கப்பல் ஜப்பான் நாட்டில் உள்ள யோகோஹாமா துறைமுகத்தில் 10 நாட்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தி, நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பலில் இந்தியா உள்பட 50-க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 3,711 பேர் சிக்கி தவிக்கின்றனர். கப்பலில் இருக்கும் 138 இந்தியர்களில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே கப்பலில் சிக்கி இருக்கும் தங்கள் நாட்டு மக்களை மீட்டு தாயகம் அழைத்து செல்ல அந்தந்த நாடுகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் கப்பலில் இருக்கும் அமெரிக்கர்கள் சுமார் 400 பேரை மீட்க அமெரிக்கா 2 விமானங்களை ஜப்பானுக்கு அனுப்பி வைத்தது.

எனினும் கப்பலில் இருக்கும் அமெரிக்கர்கள் சிலர், தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் காலம் முழுமையாக முடிவடைந்த பின்னரே கப்பலில் இருந்து இறங்குவோம் என கூறி விட்டனர்.

அதேபோல், கொரோனா பாதிப்பு இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட அமெரிக்கர்கள் 40 பேர், ஜப்பானிலேயே சிகிச்சை பெற்று, குணமடைந்த பிறகே நாடு திரும்ப முடியும் என அமெரிக்கா கூறிவிட்டது.

இதையடுத்து, சுமார் 300 அமெரிக்கர்கள் கப்பலில் இருந்து இறக்கப்பட்டு, பஸ்கள் மூலம் தலைநகர் டோக்கியோவில் உள்ள விமான நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களை ஏற்றிக்கொண்டு 2 விமானங்களும் ஜப்பானில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்பட்டது.

இந்த இடைப்பட்ட பயணத்தின்போது ஒரு விமானத்தில் இருந்த 14 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

இது சக பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து விமான ஊழியர்கள் அந்த 14 பேரையும் மற்ற பயணிகளிடம் இருந்து தனிமைப்படுத்தி, விமானத்தின் பின்பகுதியில் அமரவைத்தனர்.

இந்த நிலையில் ஜப்பானில் இருந்து புறப்பட்ட 2 விமானங்களில் ஒன்று கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள விமானப்படை தளத்தில் தரையிறங்கியது. மற்றொரு விமானம் டெக்சாசில் உள்ள விமானப்படை தளத்தில் தரையிறங்கியது.

இதையடுத்து கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட 14 பேரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அதே சமயம் நோய் பாதிக்காத நபர்களையும் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பாமல் விமானப்படை தளங்களில் உள்ள ராணுவ மையங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர்.

அங்கு அவர்கள் அடுத்த 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு இருப்பார்கள் என்றும், அதன் பிறகு அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

பகிர்ந்துகொள்ள