ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், கூட்டணிக் கட்சி தலைவர்களே இணைத் தலைவர்களாக செயற்படுவார்கள் எனவும், நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத் தெரிவு மற்றும் யாப்பு திருத்தம் தொடர்பில், இறுதி தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காக, கட்சியின் நிறைவேற்றுக் குழு கூட்டம், நேற்று, வவுனியா, இரண்டாம் குறுக்குத் தெருவில் உள்ள விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.
இதில், ரெலோ அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், புளொட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவரும், முன்னாள் நாடளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய கட்சி தலைவர் சிறிகாந்தா, ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் உட்பட நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் 15 பேர் பங்கேற்றனர்.
இதன் போது, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் ஆகிய கட்சிகள் யோசனை முன்வைத்த போது, அதனை கடுமையாக எதிர்த்த தமிழ் தேசியக் கட்சி தலைவர் சிறிகாந்தா, தலைவர் வேண்டாம் எனவும், இணைத் தலைவர்களாக செயற்பட வேண்டும் எனவும் வாதிட்டு, தனது கருத்தை முன்வைத்தார்.
இது தொடர்பில், கட்சிப் பிரதிநிதிகளுக்கு இடையில், பல்வேறு கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்று, இறுதியில்,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், கூட்டனிக் கட்சிகளின் தலைவர்கள், கட்சியின் இணைத் தலைவர்களாக செயற்படுவர் எனவும், நிறைவேற்றுக் குழுவில், ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிறேமச்சந்திரன், சிறிகாந்தா மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன் ஆகியோர், இணைத் தலைவர்களாக செயற்படவுள்ளனர்.