ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை ரத்து செய்யுமாறும் கூட்டமைப்பு கோரிக்கை!

You are currently viewing ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை ரத்து செய்யுமாறும் கூட்டமைப்பு கோரிக்கை!

சிறுபான்மை மக்களின் நீண்டகால உரிமைகளை பெற்றுக்கொள்ளும் ரீதியில் அரசாங்கத்திற்கு அழுத்தங்கொடுக்க ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை நீக்குமாறு இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்பு குழுவிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராயும் நோக்கில் இலங்கை வந்க்துள்ள ஐவர் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய குழுவினர் நேற்று மாலை தமிழ் தேசிய கூட்டமைப்பினருடன் கலந்துரையாடியிருந்தனர் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று மாலை 5.15 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.

இந்த சந்திப்பில் தலைவர் சம்பந்தனுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன்,இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சி தலைவர்களான ரெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

சந்திப்பு குறித்து கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எ.சுமந்திரன் கூறுகையில், வருடா வருடம் அவர்களின் மீளாய்வு குழுவினர் இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கான விஜயத்தை மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்வது வழமையான ஒன்றாகும்.

அவ்வாறே இம்முறையும் அவர்களின் கண்காணிப்புக்குழு இலங்கை வந்துள்ளதுடன் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்ற விதத்தில் எம்முடனும் அவர்கள் கலந்துரையாடி தமிழர் தரப்பின் பிரச்சினைகள் மற்றும் நிகழ்கால அரசியல் செயற்பாடுகள், வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்தும், தற்போது நாட்டில் காணப்படும் மனித உரிமை செயற்பாடுகள், நல்லிணக்க முயற்சிகள், ஜனநாயகத்திற்கு எவ்வாறான சவால்கள் ஏற்பட்டுள்ளன, சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் நெருக்கடி நிலைமைகள் குறித்து ஒவ்வொன்றாக எம்மிடம் கேட்டறிந்து கொண்டனர், இதே வேளையில் பயங்கரவாத பயங்கரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டியதன் தேவை குறித்து நாம் எடுத்துக் கூறினோம். குறிப்பாக தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடை சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், அதேபோல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சகலரும் விடுவிக்கப்பட வேண்டும்.

நீண்ட காலமாக இவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அண்மைய கால செயற்பாடுகளின் போதும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பல கைதுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றையெல்லாம் நாம் அவர்களிடத்தில் எடுத்துக் கூறியுள்ளோம், தேசிய பாதுகாப்பு விடயங்களை போலவே ஜனநாயகமும் பாதிக்கப்படக்கூடாது என்பது கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயமாகும்.

அவ்வாறு இருக்கையில் அப்பாவி பொதுமக்கள் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவது மிக மோசமான செயற்பாடு என்பதை நாமும் எடுத்துக்கூறினோம் மேலும் நாட்டில் இடம்பெறும் நில ஆக்கிமிப்பு செயற்பாடுகள் குறித்தும் இராணுவத்தின் மூலமாக மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பு செயற்பாடுகள் குறித்தும் எடுத்துக்கூறினோம்.

வடக்கு கிழக்கில் இதுவரை இடம்பெற்றுள்ள ஆகிரமிப்பு செயற்பாடுகள், தமிழ் பேசும் மக்களின் காணிகள் எவ்வாறு எப்போது ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது என்ற ஆதாரங்களுடன் நாம் உரிய காரணிகளை எடுத்துக்கூறியுள்ளோம்.

நீண்டகால அரசியல் தீர்வு விடயங்களில் எமது எதிர்பார்ப்பு என்னவென்பதை கூறியுள்ளோம், தமிழ் மக்க்களின் நீண்டகால அபிலாசைகள் ,சுய உரிமைகளை, கௌரவத்தை உறுதிபடுத்தும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

இதுவரை காலமாக எமக்கான சம உரிமைகள் நிராகரிக்கப்பட்டதன் விளைவாக தமிழ் மக்கள் பலவற்றை இழந்துள்ளோம். அதற்கான நியாயம் கேட்டு இன்று நாம் போராடிக்கொண்டு உள்ளோம்.

தேசிய ரீதியிலான எந்தவித முன்னேற்றகரமான நகர்வுகளும் அவதானிக்க முடியாத காரணத்தினால் தான் நாம் சர்வதேச தரப்பை நம்பி செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுளோம். ஆகவே தமிழ் மக்களின் உரிமைகள், சுய கௌரவம், சமத்துவம் மொழி உரிமைகள் உறுதிப்படுத்தும் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்தியதுடன், சர்வதேச ரீதியில் அவர்களின் ஒத்துபைப்பையும் நாம் கேட்டுக்கொண்டும்.

மேலும், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை குறித்து கலந்துரையாடப்பட்டது. இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இல்லாமால் போனால் நாடாக சகலருக்கும் அதில் பாதிப்பு ஏற்படும். ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதரத்தைத்தையும் அது பாதிக்கும்.

ஆகவே அதற்கு நாம் விரும்பாது போனாலும் கூட, எமது மக்களுக்கான உரிமைகளை, அந்தஸ்தை பெற்றுக்கொள்ளவும், நீண்டகால முரண்பாடுகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ளவும் எந்த வகையிலேனும் அழுத்தங்களை பிரயோகித்து எமது இலக்கை அடைய வேண்டியுள்ளது என்பது வெளிப்படையாகவே நாம் தெரிவித்துள்ளோம்.

ஆகவே நாட்டில் இல்லாது போயுள்ள மனித உரிமைகளை பெற்றுக்கொள்ளவும், சிறுபான்மை மக்களை இலக்குவைத்து பாயும் சட்டங்களிய நீக்கிக்கொள்ளவும் அதற்கான வழியில் அரசாங்கத்தை இயங்க வைக்கும் நோக்கத்தில் ஜி.எஸ்,பி பிளஸ் சலுகையை ரத்து செய்யுமாறும் நாம் ஐரோப்பிய ஒன்றிய விசேட குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளோம்.

தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள், மற்றும் அண்மைக்கால மனித உரிமை மீறகள் குறித்து அவர்கள் அறிந்திருந்த விடயங்களை ஒவ்வொன்றாக அவர்கள் எம்மிடம் கேட்டறிந்துகொண்டனர்.

சுமார் ஒரு மணிநேரம் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது. ஏனைய எதிர்க்கட்சி தரப்பினருடனும் அவர்கள் காலையில் இருந்து பேச்சுவாரத்தைகளை முன்னெடுத்துள்ள நிலையில் சகல தரப்பின் காரணிகளையும் அவர்கள் கருத்தில் கொண்டுள்ளனர்.

நாளைய தினம் (இன்று) அரசாங்கத்துடன் அவர்கள் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ள நிலையில் நாம் முன்வைத்துள்ள சகல காரணிகளையும் அரச தரப்பிடம் கூறி அதன் பின்னர் அவர்களின் நிலைப்பாட்டையும், தாம் சேகரித்துள்ள காரணிகளையும் தமது அறிக்கையில் முன்வைப்பதாகவும் நாம் கூறியுள்ள காரணிகளையும் குறித்த அறிக்கையில் இணைப்பதாகவும் கூறியுள்ளனர் என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments