ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாடு வெளியானது!

You are currently viewing ஜெனிவாவில் இந்தியாவின் நிலைப்பாடு வெளியானது!

தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவது இலங்கையின் நலன்களுக்குச் சிறந்தது என்பதை இந்தியா பரிந்துரைக்கிறது. இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது உள்ளிட்ட அபிலாஷைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கையை கேட்டுக்கொள்கிறோம் என ஜெனிவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி இந்திரா மணி பாண்டே தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கை தொடர்பான உயர் ஸ்தானிகர் அறிக்கை மற்றும் அவரது உரையின் போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது.

இலங்கையுடன் நெருங்கிய நட்பு நாடென்ற வகையிலும் அயலான் என்ற நோக்குடனும் இந்தியா தொடர்ந்தும் உறுதிப்பாடுடன் இலங்கை விடயத்தில் முன்னின்று செயற்படுகின்றது.

எவ்வாறாயினும் இலங்கை தொடர்பான இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடானது முக்கிய இரு தூண்களில் உள்ளது.

இலங்கையின் ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான ஆதரவு சமத்துவம், நீதி, அமைதி, கௌரவத்திற்கான இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளுக்கு உறுதியளித்தல் ஆகிய இரு பிராதன தூண்களை மையப்படுத்தியதாகவே எமது நிலைப்பாடுள்ளது. இவை தவிர வேறு தேர்வுகள் இல்லை.

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு உட்பட தமிழ் சமூகத்தின் உரிமைகளை மதிப்பது, இலங்கை ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என்பதை உறுதியாக நம்புகிறோம்.

எனவே, தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலன்களுக்கானது என்பதையே இந்தியா பரிந்துரைக்கிறது.

நல்லிணக்க செயல்முறை மற்றும் இலங்கை அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது உள்ளிட்ட இத்தகைய அபிலாஷைகளுக்கு தீர்வு காண தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கையை கேட்டுக்கொள்கிறோம். என்றார்

பகிர்ந்துகொள்ள