கிளிநொச்சியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகள் காயமடைந்துள்ளார்.
பூநகரியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது, கிளிநொச்சியில் இருந்து யாழ்பபாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த கிளிநொச்சி செய்திநகர் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் அன்னலட்சுமி (64-வயது) என்ற பெண் உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை செலுத்திய மகள் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த டிப்பர் வாகனம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதியைக் கைது செய்துள்ள கிளிநொச்சி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.