டியூப் தமிழ் இணைய ஊடகத்தின் பணிப்பாளர் டிவினியா நிலுசினியின் தடுப்புக்காவல் தொடர்பில் விளக்கமளிக்க எதிர்வரும் 13 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு சி.ரி.ஐ.டி. எனும் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். டென்மார்கை தலைமையகமாக கொண்டு யாழ்பாணத்தில் இயங்கும் யூ டியூப் அலைவரிசையான டியூப் டமில் இணைய ஊடகத்தின் பணிப்பாளர் டிவினியா நிலுசினியினை கைது செய்து பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் தடுப்புக்காவலில் வைத்துள்ளமை சட்டரீதியற்றதென நேற்று மாலை, நகர்த்தல் பத்திரம் ஒன்றூடாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா விஷேட வாதம் ஒன்றினை முன்வைத்தார். அதனை ஆராய்ந்தே கொழும்பு மேலதிக நீதிவான் சந்திம லியனகே இந்த அழைப்பாணையை பிறப்பித்தார்.
இந்த கைது தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு பொலிசார் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி டியூப் தமிழ் பணிப்பாளர் டிவினியா நிலுசினியும் தமிழ் கொடியின் பணிப்பாளர் விமல் ராஜ் என்பவரும் யாழ்ப்பணத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பின்னர் கொழும்பு பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வு தலைமையகத்திற்கு கொண்டு வரப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்த்துறை தரப்பால் கூறப்பட்டது.
இந்நிலையிலேயே நேற்று,
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள டிவினியா நிலுசினி சார்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றில் விஷேட வாதங்கள் ஜனாதிபதி சட்டத்தரணி மகே.வி. தவராசாவால் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடதக்கது.