டென்மார்க்கில் தியாக தீபம் லெப். கேணல் திலீபன் அவர்களின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல்.
டென்மார்கில் கோர்சன்ஸ் மற்றும் கொல்பேக் நகரங்களில் எழுச்சியுடன் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து தியாக தீபம் திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச் சுடறேற்றி மலர்வணக்கம் செலுத்தியதோடு அனைத்து மாவீரர்களையும் படுகொலை செய்யப்பட்ட மக்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்களையும் நினைவேந்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து கோர்சன்ஸில் நடைபெற்ற தியாக தீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வில் கோர்சன்ஸ், ஒப்ன்றோ, கேணீங், ஓகுஸ், ஸ்கேயான் நகர மாலதி தமிழ்க் கலைக்கூட மாணவர்களின் பாட்டுகள், கவிதைகள், பேச்சுக்கள், நடனம் என்பனவற்றுடன் கணேச நாட்டிய ஷேத்திர மாணவிகள் வழங்கிய எழுச்சி நடனமும் இடம்பெற்றன.
இவற்றினை தொடர்ந்து நிகழ்வில் சிறப்புரை இடம்பெற்றது. அவ் உரையை டெனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் சுகுணன் மார்க்கண்டு அவர்கள் வழங்கியிருந்தார். அவர் தனது உரையில் லெப். கேணல். தியாக தீபம் திலீபன் அவர்களின் தியாகப்பயணம் என்பது வரலாற்றில் அதி உயர்வானது, அளப்பரியது. அவர் தனது உயிரை தன் இன வாழ்வுக்காக கொடை தந்தவர். 15 செப்டம்பர் 1987 தொடக்கம் 26 செப்டம்பர் 1987 வரை நீர்கூட அருந்தாமல் தமிழர் உரிமைக்காக 5 அம்ச கோரிக்கையயை இந்திய அரசிடம் முன்வைத்து 12 நாட்கள் உண்ணா நிலையிருந்து வீர மரணமடைந்த மாவீரர். எனவே தியாக தீபம் திலீபன் அவர்களை நினைவேந்துவது என்பது தமிழர் எமது கடமையும், உரிமையும் என்பதை மானுடத்தை நேசிக்கும் மனித நேயம் உள்ளவர்கள் எவரும் மறுக்கமாட்டார்கள். இவ்வாறான நிலையில் தியாக தீபத்தின் 36ஆவது நினைவு ஆண்டை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்தை தாங்கிய ஊர்திப் பயணம் தென் தமிழீழம் பொத்துவிலில் இருந்து வட தமிழீழம் நல்லூர் வரையான பயணமாக தொடங்கி பயணித்த நிலையில் 18.09.2023 திங்களன்று தமிழீழத் தலைநகர் திருகோணமலை ஊடாக ஊர்தியானது பயணித்த வேளை நன்கு திட்டமிடப்பட்டு சிறிலங்காவின், அரச புலனாய்வுப் பிரிவினரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அதில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் செல்வராசா உட்பட ஏனைய தமிழ் மக்களும் திட்டமிட்ட வகையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள், இந் நிலையானது சிறிலங்காவின் ஒற்றை ஆட்சிக்குள் தமிழினத்தின் வாழ்தல் என்பது சாத்தியமில்லை என்பதை மீண்டும் நிருபணமாக்குகிறது என்பதில் ஐயமில்லை. எனவே அனைத்துலகம் சிறிலங்காவின் இவ்வாறான இன வெறுப்பின் அசிங்கத்தை வண்மையாக கண்டிப்பதோடு, மானுட சமுகத்தில் தமிழீழத் தமிழரும் ஒரு அங்கம் என்பதை ஏற்று எமக்கான நீதிக்கு உதவுமாறு கேட்டு கொண்டு இனி வரும் காலங்களில் இவ்வாறான அநாகரிகச் செயலுக்கு இடம் தரக்கூடாது என்பதனையும் மனவருத்தத்துடன் பதிவு செய்தார்.
இறுதியாக “நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்” என்ற பாடல் இசைக்கப்பட்டு அதன்பின் “தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்” என்ற தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவு பெற்றது.