டெல்லி வன்முறையில் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து உள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்ட ஆதரவு – எதிர்ப்பு போராட்டக்காரர்களால் ஜாப்ராபாத்,மாஜ்பூர் உள்ளிட்ட டெல்லியின் வடகிழக்கு பகுதியில் ஞாயிறு வெடித்த வன்முறை அடுத்த 3 தினங்களில் தீவிரமடைந்தது. இந்த கலவரங்களில் 38 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இன்று ஒருவர் ஜி.டி.பி மருத்துவமனையில் பலியானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை 39 ஆக உயர்ந்து உள்ளது. லோக் நாயக் மருத்துவமனையில் இதுவரை மூன்று இறப்புகள் பதிவாகியுள்ளன, ஜக் பிரகாஷ் மருத்துவமனையில் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.
கலவரத்தை நடத்தியவர்கள் மற்றும் அதைத் தூண்டியவர்கள் என சந்தேகிக்கப்படும் 514 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமது துறைச் செயலர் அஜய் குமார் பல்லா, டெல்லி காவல் துறை ஆணையர் அமுல்யா பட்நாயக் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், நிலைமை கட்டுக்குள் வந்து விட்டதாகவும் கடந்த 36 மணி நேரத்தில் வன்முறை சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள 203 காவல் நிலையங்களில் 12 நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே கலவரம் வெடித்ததாக அந்த அறிக்கை தெரிவித்துள்ளது. இயல்பு நிலையை மீட்கும் வகையில் ஆங்காங்கு அமைதி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.
அதே சமயம் கலவரங்களில் 500 க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டதாக டெல்லி தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று ஊரடங்கு உத்தரவு 10 மணி நேரம் தளர்த்தப்பட்டுள்ளது.
மசூதிகளில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனை செய்வதைக் கருத்தில் கொண்டு வடகிழக்கு டெல்லியில் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் கடுமையான விழிப்புணர்வைக் கடைபிடித்து வருகின்றனர்.
நம்பிக்கையை வளர்ப்பதற்கான நடவடிக்கைகளாக பாதிக்கப்பட்ட பகுதிகளின் சுற்றுப்புறங்களில் வழக்கமான கொடி அணிவகுப்புகள் நடந்தன.
வடகிழக்கு டெல்லியின் சில பகுதிகளில், கடைகள் திறந்திருந்தன இதன் மூலம் இயல்பு வாழ்க்கையின் அறிகுறிகள் காணப்பட்டன. வன்முறை பாதிப்புக்குள்ளான பகுதிகளிலும், தெருக்களிலும் கடைகள் திறந்திருந்தன.
வடகிழக்கு டெல்லியில் அண்மையில் நடந்த வன்முறையின் போது பெண்கள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டதா அது தொடர்பான வழக்குகள் குறித்து விசாரிக்க தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் ரேகா சர்மா இன்று வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, டெல்லி கலவரம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அங்கு அமைதி திரும்ப வேண்டும் என்ற பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஆமோதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. டுவிட்டரில் இதை குறிப்பிட்டுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை உயர் அதிகாரி ஆலிஸ் வெல்ஸ், கலவரங்களில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்கா தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார். வன்முறையை கைவிட்டு சமாதானத்தின் பக்கம் திரும்புமாறு டெல்லி மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.