டொரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் விருது பெற்ற பொய்யாவிளக்கு!!

You are currently viewing டொரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் விருது பெற்ற பொய்யாவிளக்கு!!

தனேஷ் இயக்கிய “பொய்யாவிளக்கு” (The Lamp of Truth) திரைப்படம் டொரோண்டோ உலக தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவண திரைப்பட விருதை பெற்றுள்ளது. ஈழ வைத்தியர் வரதராசாவின் உண்மைக்கதையை தழுவிய இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய பரிணாமம் என பலரது பாராட்டை பெற்றது. ஆங்கில மொழிபெயர்ப்புடன் The Lamp of Truth என அழைக்கப்படும் இத்திரைப்படம் பதினைந்திற்கும் மேற்பட்ட சர்வதேச விருதுகளையும் இந்த ஆண்டிற்கான நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த ஆவண திரைப்பட விருதையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

டொரோண்டோ உலக திரைப்பட விழா தேர்ந்தெடுக்கும் குழுவில் தமிழ்நாடு திரைப்பட ஜாம்பவான்களான நாசர், இயக்குனர் வெற்றி மாறன், ராம் போன்றவர்களுடன் உலக சினிமா வல்லுனர்களும் இருப்பது குறிப்பிட தக்கது. தமிழ்நாடு திரைத்துறை இயக்குனர் பார்த்திபன் இயக்கிய ஒத்தை செருப்பு எனும்திரைப்படமும் இந்த விழாவில் விருதுகளை வென்றிருந்தது. தமிழ் திரைப்படங்களை அதிகம் புலம் பெயர் தமிழர்கள் வசிக்கும் டொரோண்டோ நகரில் உலக சினிமாவின் கதவுகளை திறக்கும் ஒரு வாயிலாக டொரோண்டோ தமிழ் திரைப்பட விழா விளங்குகிறது.

பொய்யாவிளக்கு திரைப்படம் ஒன்றரை மணிநேரம் விறுவிறுப்பாக சர்வதேச தரத்தில் பயணிக்கும் ஈழ தமிழர் வலிதாங்கிய ஆவண திரைப்படம். சர்வதேச திரைதளத்தில் இரண்டாம் உலக போரின் யூத இனமக்களின் கதைகள் பல ஹொலிவூட் திரைப்படங்களாக வந்திருந்தன. தமிழர் தரப்பிலிருந்து இத்தகைய படைப்பு வரவேண்டும் என பல தமிழ் ஆர்வலர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிய வெண்சங்கு கலைக்கூடத்தின் முதலாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விருது அவர்களுக்கு ஒரு பெரும் ஊக்கமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பொய்யாவிளக்கு முதல் பாதியில் ஆங்கில படங்கள் போல் அமெரிக்க நகரின் வாழ்வில் தொடங்கும் காட்சிகள், பதினைந்து நிமிடத்தில் வேகமெடுத்து சிறிலங்காவின் சித்திரவதை முகாமான நாலாம் மாடியில் வேகமெடுக்கிறது. பின் கதைகளும் பின்னோக்கி நகர்ந்து தமிழீழ வன்னியில் நிலை கொள்கிறது. இரண்டாம் பாகம் சிறிலங்காவின் தமிழின அழிப்பில் வைத்தியரின் வாழக்கையை திரையில் விறுவிறுப்பாக கொண்டு வருகிறது. பின் செய்தியாளர் மாநாட்டின் பின்புலத்தை விறுவிறுப்பான திரைக்கதை பார்ப்பவர்களை இருக்கைநுனியில் அசையாமல் இருத்திவிடுகிறது. மிக கடினமான தமிழர்களின் வலிகள் நிறைந்த ஒரு கதையை அதன் உண்மைத்தன்மை கெடாமல் அதே நேரம் அகோரமான காட்சிகளை தவிர்த்து மாணவர்களும் பார்க்கும் விதத்தில் கொடுத்தது இயக்குனர் தனேசின் லாவகமாகதிரைப்பட இயக்கத்திற்கு சான்று.

Note:
பொய்யாவிளக்கு திரைப்படத்தின் செய்தித்தாள் படங்களை கீழுள்ள இணையத்தில் பெறலாம்.
https://whiteconchstudios.com/promotion-materials/

பகிர்ந்துகொள்ள