தமிழகத்தில் முதன்முறையாக நாள் தோறும் கொரோனா தொற்றைக் கண்டறியும் பரிசோதனையின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ள, 13 தனியார் ஆய்வகங்கள் உட்பட 47 ஆய்வகங்கள் உள்ளன.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 2757 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சென்னையில் மட்டும் இதுவரை 1257 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய காலகட்டத்தில் கொரோனா பரிசோதனைகள் போதுமான அளவில் மேற்கொள்ளப்படவில்லை எனவும், அதற்கான போதிய கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நோய் பரவல் ஏற்பட தொடங்கியது. பின்னர் ஏப்ரல் மாத தொடக்கத்தில் தமிழகத்தில் பரிசோதனைகள் சற்று அதிகப்படுத்தபட்டன. ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 6000 மாதிரிகள் செய்யப்பட்டன. பின்னர் ஏப்ரல் இறுதி வாரத்தில் நாளொன்றுக்கு 8000-9000 வரை மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று முதல்முறையாக தமிழகத்தில் 10000க்கும் அதிகமான மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை 1,39,490 கொரோனா மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் மே 2ம் தேதி 10,127 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது
இந்தியாவில் அதிக பாதிப்புகளை கொண்ட மாநிலமான மகாராட்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்திய அளவில், இதுவரை 9.02 லட்சம் மக்களுக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தின் பரிசோதனை சதவீதம் மட்டும் 14 சதவீதம் ஆகும்.இந்திய அளவில் ஒரு லட்சம் பேரில் 85 பேருக்கு கொரோனா நோய் தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் 1 லட்சம் பேரில் 165 பேருக்கும், சென்னை மாநகராட்சி பகுதியில் 1 லட்சம் பேரில், 480 பேருக்கும் நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.