தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் அதிக முதியவர்கள் வாழும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். கொரோனா தொற்று முதியவர்களை அதிகம் பாதிக்கக்கூடியதாக உள்ளதால், அவர்கள் மிக கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றால் ஏற்படும் ஒட்டுமொத்த உயிரிழப்பு அளவு 0.8 விழுக்காடாக இருக்கின்றது. ஆனால் 60 வயதுக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு அளவு என்பது 4.72 விழுக்காடாக உள்ளது.
தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றது.
தமிழ்நாட்டில் நேற்றுவரை ( ஜூன் 02) கொரோனா தொற்றால் 197 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 105 பேர் ஆவர். அதாவது மொத்த உயிரிழப்புகளில் 53.2 விழுக்காடு உயிரிழப்பு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் ஆகும்.
தமிழகத்தில் ஜுன் 2-ம் தேதி வரை 24,586 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 2351 ஆகும். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் ஏறக்குறைய 10 விழுக்காடு பேர் 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஆவர். குறிப்பிட்ட 2,351 பேரில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் மற்ற வயதினரை விட கொரோனா தொற்றால் முதியவர்கள் உயிரிழப்பு என்பது அதிகளவில் உள்ளது. ஒட்டுமொத்த பாதிப்புடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு விகிதம் என்பது 0.80 விழுக்காடாக உள்ளது. ஆனால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கும் மேற்பட்டோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் உயிரிழப்பு அளவு என்பது 4.72 விழுக்காடாக உள்ளது. அதாவது 60 வயதுக்கும் அதிகமானவர்களில் 100 பேர் பாதிக்கப்பட்டால் அதில் 5 பேர் உயிரிழக்கின்றனர்.
60 வயதுக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்குள்ளாகும் போது, உடல்நிலை மோசமடைவதோடு அதிகளவில் உயிரிழப்புகளையும் சந்திக்க நேரிடுகிறது. முதியோர் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டிய காலமிது என்று கூறப்பட்டுள்ளது.