தமிழ்நாட்டின் திருச்சியில் உள்ள சிறப்பு முகாம் எனும் வதைமுகாமில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள், தங்களை விடுதலை செய்யக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அடிக்கடி போராட்டம் நடப்பது ஏன்? இது குறித்து என்ன சொல்கிறார்கள்?
தமிழ்நாட்டில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்படுகின்றனர்.
இதன்படி, ஈழத் தமிழர்கள் 104 பேர் மற்றும் நைஜீரியா, பல்கேரியா, வங்கதேசம், இந்தோனீசியா உட்பட வெளி நாட்டினர் என மொத்தம் 145 பேர் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர்.
இவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்து, விடுதலை செய்யப்பட்டும் வரை சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்படுகிறார்கள். தங்களை விடுதலை செய்து, குடும்பத்தினருடன் வாழ வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இவர்களில் பலர் உண்ணாவிரதம், தற்கொலை முயற்சி என பல வடிவங்களில் அடிக்கடி போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
மீண்டும் போராட்டம்
இந்நிலையில், திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள், தங்களை விடுதலை செய்யக் கோரி கடந்த மே மாதம் 20ஆம் திகதி மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். ஈழத் தமிழர்கள் டிளச்சன், கபிலன், எப்சிபான், தினேஷ் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினால், உடல் நலம் பாதிக்கப்பட்ட 4 பேர் திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையடுத்து, மேலும் 5 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இவர்கள் 9 பேரும் மருத்துவர்களின் அறிவுறுத்தலாம், உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டனர். ஆனாலும், சிறப்பு முகாமில் உள்ள மற்ற ஈழத் தமிழர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர்.
இதையடுத்து, தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்ட மகேந்திரன், மயூரதன் ஆகிய இருவரும் தற்போது, திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நான்கு பேர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் 60 பேர் காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளதாக ஈழத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
கோரிக்கைகள் என்ன
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெர்ணாண்டோ பிபிசி தமிழிடம் கூறுகையில், ‘விசா காலம் முடிந்து தங்கியிருந்ததாகவும் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாகவும் கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி கைது செய்யப்பட்டேன். வழக்கு முடிந்து 3 மாதங்களாகியும் என்னை விடுதலை செய்யவில்லை.
சிறப்பு முகாமில் இருக்கும் காலத்தை வழக்கின் தண்டனைக் காலமாக கருத வேண்டும். வழக்கு முடிந்தவர்களை விடுதலை செய்து, வழக்கமான முகாம், வெளிப்பதிவு, இலங்கைக்கு என அவர்கள் விரும்பும் இடத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்திதான் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறோம்.”என்றார்.
மேலும், ”பலர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு முடிந்து ஆண்டுக் கணக்கில் இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர் போராட்டங்களை நடத்தி வந்தாலும் காவல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை.
உயிருக்கு ஆபத்த நிலை ஏற்பட்ட பிறகே மருத்துவ வசதி கூட கிடைக்கிறது. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தலையிட்டு எங்களுக்கு உதவ வேண்டும்,” என்றார்.
‘மனித உரிமை மீறல்‘ – ஈழத் தமிழர்
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மகேந்திரன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ” கடந்த 2014ஆம் ஆண்டு சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டேன். என் மீதான வழக்கு முடிந்தும் விடுதலை செய்யவில்லை.
இதனால் 8 ஆண்டுகளாக சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி சிறப்பு முகாமிலேயே அடைத்து வைத்துள்ளனர். உறவினர், குடும்பத்தினரை காண முடியாமல் தவித்து வருகிறேன். அதிகாரிகளே நீதிமன்றத்தை அவமதிக்கிறார்கள். மனித உரிமை மீறலை செய்கிறார்கள்.
பல முறை அறவழிப் போராட்டங்களை நடத்தியும் பயன் இல்லை. அதிகாரிகளும் கண்டு கொள்வதேயில்லை. சிறப்பு முகாமில் உள்ளவர்களை விடுதலை செய்வதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஆகையால்தான் மீண்டும் மீண்டும் போராட்டங்களை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது,” என்றார்.
மேலும், “தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு பொய் என்று நான் நிருபித்துள்ளேன். இதனால், என்னை பழிவாங்க வேண்டும் என்று, பொய்யான காரணங்களை சொல்லி என்னை சிறப்பு முகாமிலேயே முடக்கி வைத்துள்ளனர்.
எட்டாண்டுகளாக சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதற்கு என்ன இழப்பீடு கொடுக்கப் போகிறார்கள்? என் இளமையே தொலைந்து போனாலும், பல்லாயிரம் மரக்கன்றுகளை வளர்த்து விநியோகித்து வருகிறேன். அவைகளாவது சுதந்திர காற்றை சுவாசிக்கட்டும்,” என்கிறார் மகேந்திரன்.
– நன்றி பிபிசி