சிங்கள இராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 121 படகுகள் இலங்கை அரசால் அழிக்கப்படுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
தமிழக மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 121 படகுகளை அழிக்க அந்நாட்டு நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்பரப்பைக் கொண்ட தமிழ்நாட்டின் 13 கடலோர மாவட்டங்களில் வாழும் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்தையும், தமிழர்கள் மீதுள்ள தீராத வன்மத்தையும் கொண்ட இந்நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. வங்கக்கடலில் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக வீண்பழி சுமத்தி, கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை அத்துமீறி பறிமுதல் செய்யப்பட்ட 94 படகுகள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும், 37 படகுகள் மன்னார் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டிலும் வைக்கப்பட்டிருந்தன. அப்படகுகளை மீட்டுத் தரக்கோரி தமிழக மீனவர்கள் பன்னெடுங்காலமாகக் கோரிக்கை வைத்துப் போராடி வரும் நிலையில், தற்போது அவற்றை அழித்துத் தகர்க்கிற வேலைகளில் இலங்கை அரசு ஈடுபட்டிருப்பது தமிழக மீனவர்களைப் பெரும் கலக்கத்திற்குள் ஆழ்த்தியிருக்கிறது.
தமிழக மீனவர்களைத் தாக்குவதும், அவர்களது உடைமைகளைப் பறிப்பதும், அதனைச் சேதப்படுத்துவதுமான சிங்களப் பேரினவாத அரசின் அட்டூழியங்கள் இன்று நேற்றல்ல 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்தேறி வருகிறது. இதுவரை 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை நடுக்கடலிலேயே படுகொலை செய்திருக்கிறது. பல ஆயிரக்கணக்கான மீனவர்களைத் தாக்கி உடல் உறுப்புகளை இழக்கச் செய்திருக்கிறது. முடமாக்கியிருக்கிறது. பெரும்பாட்டன் சேதுபதி மன்னருடைய சொந்த நிலமான கச்சத்தீவை சிங்களர்களுக்குத் தாரைவார்த்ததன் விளைவாக இன்றைக்கு மீன்பிடி உரிமையையே முற்றாக இழந்து, நாள்தோறும் இன்னலுக்கு உள்ளாகி வருகிறார்கள் தமிழக மீனவச்சொந்தங்கள். இந்திய அரசும், எல்லைத் தாண்டி வந்தால் சுடுவேன் என்று சொல்கிற இலங்கையை வெட்கமின்றி நட்பு நாடு எனச் சொந்தம் கொண்டாடுகிறது. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிகள் மாறினாலும் எம் மீனவச்சொந்தங்களின் அவல நிலை இன்றுவரை மாறவேயில்லை என்பது தாங்கொணாத் துயரமாகும். இந்திய வல்லாதிக்கத்தின் காலடியில் இலங்கை உள்ளது. இருந்தும், இந்திய நாட்டின் குடிமக்களான தமிழக மீனவர்களின் துயர்மிகு நிலையைத் துடைத்தெறிய இந்தியாவை ஆளும் ஆட்சியாளர்கள் இதுவரை முன்வரவில்லை.
இன்றைக்கு இலங்கையின் நீதிமன்ற பரிபாலன அமைப்புகளும், ஆளும் அரசுகளும் தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 121 படகுகளை அழிக்க ஆணையிட்டிருப்பது தமிழ்த்தேசிய இனத்தின் மீது சிங்களப் பேரினவாத அரசு கொண்டிருக்கிற கொடும் வன்மத்தின் வெளிப்பாடாகும். இந்நடவடிக்கைகள் தேவையற்றவை; தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக்கூடியவை. இப்போது அழிக்க ஆணையிடப்பட்டுள்ள படகுகள் எந்த வழக்கிலும் சம்பந்தப்பட்டவை அல்ல. அவை, ஏற்கனவே தமிழக மீனவர்களிடம் ஒப்படைப்பதற்காக விடுவிக்கப்பட்டவை. அவற்றை அழிக்க நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது வீண் சிக்கலை உருவாக்கும். இதனை இந்தியாவை ஆளும் அரசு, கண்டிக்காது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் செய்யும் பச்சைத்துரோகமாகும். பல நெருக்கடிகளுக்கிடையில் வங்கியில் கடன்பெற்று
உருவாக்கப்பட்ட பல கோடி பணமதிப்புள்ள தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 121 படகுகளை அழிக்க சிங்கள அரசின் நீதிமன்றங்கள் ஆணையிட்டிருப்பது கொடுங்கோல் போக்காகும். இது இந்தியாவின் இறையாண்மையையே அவமதிக்கும் கொடுஞ்செயலாகும்.
ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரச்சிக்கலை மனதில் கொண்டு, இலங்கை அரசை கடுமையாகக் கண்டிப்பதுடன் இனிமேலும் காலம் தாழ்த்தாது தமிழக மீனவர்களின் 121 படகுகளையும் மீட்டுவர உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன். அதற்கு தமிழக அரசு உரிய அழுத்தமும், அரசியல் நெருக்கடியும் கொடுத்து தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டெடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.