இலங்கையை சேர்ந்தவர்களால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், “தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை நாட்டினரின் தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், ஆகஸ்ட் 21 ஆம் தேதி மட்டும் ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளது கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் மீனவர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்துவதோடு, அவர்களின் வாழ்வாதாரத்தைக் கடுமையாக பாதிக்கிறது.” “இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள், உடல் ரீதியாக பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதோடு, மீனவர்களிடமிருந்த பொருட்களையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பாதிக்கப்பட்ட மீனவர்கள் ஆதரவற்ற நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
தாக்குதல் சம்பவங்களால் காயமடைந்த மீனவர்கள், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.” “இந்திய மீனவர்களின் வாழ்வாதாரம் கடற்பகுதியைச் சார்ந்துள்ள நிலையில், இத்தகைய தொடர்ச்சியான வன்முறைச் செயல்கள், அவர்களின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குவதுடன், அவர்களின் குடும்பங்களையும் சமூகங்களையும் பாதிக்கின்றன.
இந்த சூழ்நிலையில், ஒன்றிய அரசு உடனடியாகத் தலையிட்டு, இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டவர்களைக் கண்டறிந்து, சட்டத்தின் முன் நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். உரிய தூதரக வழிமுறைகளை பயன்படுத்தி இலங்கை அரசுடன் தொடர்புகொண்டு, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்,” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.