முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழர்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களை சத்தம் சந்தடியில்லாமல் பௌத்தமயமாக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மணலாற்றின் கற்தூண், அக்கரைவெளி, வண்ணாமடு, மணற்கேணி ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு திரைமறைவில் பௌத்தமயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்தப்பகுதித் தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
தமிழர்களின் பூர்வீகமான மணலாற்றின் கற்தூண்பகுதியை மகாப்பிட்டிய என்னும் பெயரிலும், வண்ணாமடு பகுதியை வண்ணாமடுவ என்னும் பெயரிலும், அக்கரைவெளி பகுதியை அக்கரவெலிய என்னும் பெயரிலும், மணற்கேணிப் பகுதியையும் அதேபெயரிலும் பௌத்த பிரதேசமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
1984ஆம் ஆண்டு தமிழ் மக்கள் குறித்த பகுதிகளிலிருந்து இடம்பெயர்வதற்கு முன்பு கற்தூண்பகுதியில் வைரவர் ஆலயம் இருந்ததாகவும், அக்கரைவெளியில் முனியப்பர் ஆலயமொன்று இருந்ததாகவும், அவ்வாறு இருந்த கோயில்களை உடைத்தழித்து தற்போது அந்த இடங்களை பௌத்த பகுதிகளாக மாற்றுவதற்கு முயற்சிகள் இடம்பெறுவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது அக்கரைவெளிப் பகுதியில் கொக்கிளாய் பகுதியிலுள்ள தமிழ் மக்களும், கற்தூண் பகுதியில் கொக்குத்தொடுவாய் பகுதித் தமிழ் மக்களும், மணற்கேணி மற்றும், வண்ணாமடுப் பகுதிகளில் கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணித் தமிழ் மக்களும் விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மைக்காலமாக அந்தப் பகுதிகளுக்கு தேரர்கள் உள்ளிட்ட குழுவினர் அதிகளவில் வந்து செல்வதாகவும், பௌத்த மயமாக்கல் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தமிழ்மக்கள் தெரிவிக்கின்றனர்.
அத்தோடு ஏற்கனவே தமிழர்களின் பூர்வீக மணலாற்றுப்பகுதியின் பிரதான இடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வெலிஓயாவாக மாற்றப்பட்டுள்ளதுடன், தமது நீர்ப்பாசனக்குளங்களும் அதன்கீழான வயல் நிலங்களும் அபகரிக்கப்பட்டதைப்போன்று, அவற்றை அண்டிய மானாவாரி விவசாய நிலங்களையும் ஆக்கிரமிப்பதற்கான அபாயம் இந்த பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் மூலம் ஏற்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.