தமிழர்களை இனியும் மடையர்களாக்க முயலாதீர்! – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

You are currently viewing தமிழர்களை இனியும் மடையர்களாக்க முயலாதீர்! – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

“இந்தியா இருக்கின்றது; எமக்குத் தீர்வைத் தரும் என்று தமிழ் மக்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றி வருகின்றது. அதன் வெளிப்பாடாகத்தான் மீண்டும் புதுடில்லிக்குச் செல்ல கூட்டமைப்பின் தலைவர்கள் முயல்கின்றனர். தமிழ் மக்களை இனியும் மடையர்களாக்க முயல வேண்டாம் என்று அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.”

– இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகள் மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் இந்தியா செல்லவுள்ளது என வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் மீண்டும் கொரோனாவின் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு வந்துள்ளன. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கொரோனாவுக்கு மத்தியிலும் தமது ஏமாற்று அரசியலை நடத்துகின்றனர்.

எந்த நாட்டுக்குச் சென்றாலும் தமிழ் மக்களுக்கு இலங்கை அரசுதான் தீர்வை வழங்கும்.

எந்த நாட்டின் அழுத்தங்களுக்கும் இலங்கை அடிபணியாது” – என்றார்.

அதேபோல் சர்வதேச நாடுகளை நாடுவதால் தீர்வு கிடைக்குமா? – கூட்டமைப்பிடம் தினேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்

தேசிய இனப்பிரச்சினைக்கு புதிய அரசமைப்பின் ஊடாக அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்பதே எமது அரசின் திட்டம். அதைவிடுத்து அமெரிக்காவையும், இந்தியாவையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடுவதால் தீர்வு கிடைக்கப்போவதில்லை.”

– இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் இந்தியா செல்லவுள்ளது என வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை ஒரு ஜனநாயக நாடு. இங்கு மக்கள் ஆணையின் பிரகாரம் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி இருக்கின்றார்; பிரதமர் இருக்கின்றார். அதுமட்டுமன்றி மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடனான அரசு உள்ளது. இந்த மூன்று தரப்பினரும் தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளனர்.

ஆனால், தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தாம் நினைத்த மாதிரிச் செயற்படுகின்றனர்.

அவர்கள் வெளியகத் தீர்வை விரும்புகின்றனர். அதனால்தான் அவர்கள் அமெரிக்காவுக்கும், கனடாவுக்கும், பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் ஓடித் திரிகின்றனர்.

உள்நாட்டுப் பிரச்சினைக்கு உள்ளகத் தீர்வே அவசியம். அதைவிடுத்து வெளியகத் தீர்வைப் பெற முயற்சிப்பதால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்றார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments