தமிழர்களை சிங்கள அரசின் ஆயுள் அடிமைகளாக்க முனையும் அடிவருடி அரசியல்!

You are currently viewing தமிழர்களை சிங்கள அரசின் ஆயுள் அடிமைகளாக்க முனையும் அடிவருடி அரசியல்!

“தமிழ்மக்களும், புலிகளும், மாவீரர்களும் எந்த தமிழ்தேசியத்துக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்தார்களோ, அந்த தியாகங்களை கொச்சைப்படுத்திடும் விதத்தில், அம்மாவீரர்கள் எந்த அடக்கு முறைகளை எதிர்த்து போராடி தியாகங்கள் புரிந்தார்களோ, அதே அடக்குமுறைகளை தமிழர் தேசத்தில் நடைமுறைப்படுத்துங்கள் என்று, இனவழிப்பு போரில் பெரும்பங்காற்றிய இன்றைய அரசை கேட்கிறார்கள் தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும்…”

“ஏக்க ராஜ்ய” ஒற்றையாட்சி வரைபை நடைமுறைப்படுத்தவும், ஒற்றையாட்சி அமைப்புக்கு உட்படக்கூடிய 13 ஆவது திருத்தச்சட்டத்தின் மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்தவும் அரசுக்கு வேண்டுகோள் வைப்பதற்காக, ஜனநாயக தமிழ்தேசியக்கூட்டமைப்போடு இணக்கப்பாடு கண்டுள்ளோம் என்கிறார் சுமந்திரன்…
இதே ஜனநாயக தமிழ்தேசியக்கூட்டமைப்பு, சுமந்திரன் கூறும் அதே “ஏக்ய ராஜ்ய” ஒற்றையாட்சி வரைபை, தமிழர் தேசமாக ஒன்றிணைத்து எதிர்ப்போம் என்றும், 13 ஆவது திருத்தச்சட்டம் தமிழர்களுக்கான தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியாகக்கூட கொள்ளமுடியாது எனவும் தமிழ்தேசியப்பேரவையோடு எழுத்துமூல உடன்பாடு கண்டிருந்தது. அந்த எழுத்துமூல இணக்கப்பாடு இன்றுவரை நடைமுறையிலும் இருக்கிறது…
என்றாலும், உத்தியோக பூர்வமாக இந்த இணைக்கப்பாட்டில் இருந்து விலகியதாக அறிவிக்காமலேயே தமிழரசுக்கட்சியின் அழைப்பை ஏற்று, ஜனநாயக தமிழ்தேசியக்கூட்டமைப்பு தமிழரசுக்கட்சியை சந்தித்திருக்கிறது…
அதுவும் குறிப்பாக, எந்த ஒற்றையாட்சியை தேசமாக இணைந்து எதிர்ப்போம் என்றும், எந்த 13 ஆவது திருத்த சட்டத்தை தமிழருக்கான தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியாகக்கூட ஏற்க இயலாது என்றும் தமிழ்த்தேசிய பேரவையோடு எழுத்துமூல இணக்கப்பாடு கண்டார்களோ, அதே ஒற்றையாட்சி வரைபையும், அதே 13 ஆவது திருத்தச்சட்டம் கொடுக்கக்கூடிய மாகாண சபை முறைமையையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுப்பதற்கான இணக்கப்பாட்டுக்கான சந்திப்பில் இரட்டை நிலைப்பாட்டோடு கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும்…
இதுதான், இன்று தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் கண்டுள்ள தமிழ்தேசியத்திற்கான ஒன்றிணைவு என்று இரு தரப்பும் அபத்தமாக கொண்டாடுகின்றன…
தமிழ்த்தேசியத்தின் அடிப்படைக்கொள்கை என்ன என்பதும், அந்த கொள்கையின் அடிப்படையில் நிகழ்ந்த எமது தேச விடிவுக்கான தேசிய விடுதலைப்போராட்டமும், தேசப்புதல்வர்களின் தியாகங்களும் இந்த இருதரப்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன என்பதே இந்த இணைவிலிருந்து நாம் இலகுவாக புரிந்துகொள்ள முடிகிறது…
தமிழர் தேசத்திற்கான அங்கீகாரம், தனித்தேசிய இனமான தமிழினத்தின் பூரணமான சுதந்திரத்திற்கான உரிமைகள் போன்றவற்றை பறிக்கும் உள்நோக்கத்தோடும், இலங்கைத்தீவின் பூர்வீக குடிகளான தமிழினத்தை, இனவாத / மதவாத ஒற்றையாட்சி முறைமைக்குள் கட்டுப்படுத்தி வைத்து, இரண்டாம் தர குடிமக்களாகவே நிரந்தர அடிமைத்துவத்துக்குள் உள்ளிழுத்துக்கொள்ளும் நீண்டகால கபட நோக்கத்தோடும் கொண்டுவரப்பட்ட 13 ஆவது திருத்தச்சட்டத்தினூடான மாகாண சபை முறைமை, அது கொண்டுவரப்பட்ட காலத்திலேயே தமிழ்மக்களாலும், தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்த புலிகளாலும் முற்றாக எதிர்க்கப்பட்டது…
தமிழ்மக்களோ அல்லது அவர்களின் ஏக பிரதிநிதிகளாக இருந்த புலிகளோ ஒரு தரப்பினராக அனுமதிக்கப்படாமல், வெறுமனே சிக்கல்களுக்கு காரணமான ஸ்ரீலங்கா அரசும், இந்திய வல்லாதிக்க ஒன்றிய அரசும் இணைந்து இந்த சட்ட மூலத்தை கொண்டுவந்ததில் இருந்தே, இச்சட்ட மூலம் யாருக்கு சாதகமானது என்பதை உணர்ந்து கொள்ளலாம்…
13 ஆவது திருத்தச்சட்டம் கொடுவரப்படுவதற்கு ஆதாரமாக இருந்த இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று, அன்றைய தமிழ்த்தலைவராக அறியப்பட்ட அமிர்தலிங்கம் அன்றைய இந்திய வல்லாதிக்க ஒன்றிய அரசின் பிரதமர் ராஜிவ் காந்திக்கு கடிதமும் அனுப்பியிருந்தது வரலாறு…
தமிழ்தேசியக்கூட்டமைப்பு புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட போது, கூட்டமைப்பில் அங்கம் வகித்த அத்தனை பங்காளர்களும் தமிழ்த்தேசியம் என்ற பதத்திற்கான சித்தாந்த கொள்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டு பயணிப்போம் என்றே புலிகள் முன்னால் உறுதியெடுத்துக்கொண்டனர்…
தமிழ்த்தேசியத்தின் மீது அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழி, தொடர்ந்து வந்த தேர்தலில் பெரும் வெற்றியை தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு பெற்றுக்கொடுத்திருந்தது…
இந்த வெற்றியானது, தாயகம், தன்னாட்சி, தனியுரிமை என்ற கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வதோடு, தமிழர் தேசத்துக்கான தேசிய விடுதலைப்போராட்டதையும் அங்கீகரிப்பதாகவும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டமையால் மாத்திரமே சாத்தியமானது…
2009 இனவழிப்பின் பின்னான காலங்களில் புலிகளின் இருப்பு மவுனிக்கப்பட்டதும், ஸ்ரீலங்கா அரச சக்திகளுக்கும், பிராந்திய வல்லரசின் ஆதிக்கத்துக்குள்ளும் தமிழ்தேசியக்கூட்டமைப்பு வீழ்ந்து போனதால், தமிழருக்கான அரசியல் வெற்றிடம் உருவாக, அதைத்தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் வியாபாரங்கள், தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குள் தோன்றிய பதவிப்போட்டிகள் உள்ளிட்ட காரணிகள், கூட்டமைப்பின் அரசியல் பாதையை மாற்றிவிட, தொடர்ந்து வந்த காலங்களில் தமிழ்த்தேசிய கொள்கைக்காக அரசியல் ரீதியில் பாடுபடுவேன் என உறுதியெடுத்துக்கொண்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பு அந்த கொள்கையிலிருந்து விலகி, துண்டு துண்டாக உடைந்து, தமிழர்களின் அரசியல் பலம் தேய்ந்து, தமிழ்மக்களின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டது…
காலத்தின் தேவையறிந்து செயலாற்றுவதே அரசியல் என்பதன் அடிப்படையில், சிறுபான்மையான பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்தாலும், அரசியல், கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, தமிழ்த்தேசிய கொள்கைக்காகவும், தமிழர் தேசத்தை இல்லாதொழிக்கும் ஒற்றையாட்சி வரைபை தமிழர் தேசமாக ஒன்றிணைந்து எதிர்ப்பதற்காகவும் ஒன்றிணைய வேண்டும் என தமிழ்தேசியப்பேரவையால் விடுக்கப்பட்ட கோரிக்கை தமிழரசுக்கட்சியால் உதாசீனம் செய்யப்பட்டது…
இக்கோரிக்கைக்கு இணங்குவதுபோல் அப்போது நடித்த ஜனநாயக தமிழ்தேசியக்கூட்டமைப்பு, தமிழ்தேசியப்பேரவையின் தமிழ்தேசியக்கொள்கையோடு இணங்குகிறோம் என எழுத்து மூல ஒப்புதல் அளித்துவிட்டு, இப்போது, தமிழ்த்தேசிய கொள்ளகையின் அடிப்படையையே தலைகீழாக புரட்டிவிட்டு, தமிழர் தேசத்தை ஒற்றையாட்சி வரைபுக்குள் முடக்கிவிடும்படி அரசை கோரும் தமிழரசுக்கட்சியோடு இணைந்து, ஒற்றையாட்சி வரைபையும், ஒற்றையாட்சி தத்துவத்தை வலியுறுத்தும் மாகாண சபை முறைமையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கொள்கையில் இணங்கியிருக்கிறார்கள்…
தமிழ் மக்களும், புலிகளும், மாவீரர்களும் எந்த தமிழ்தேசியத்துக்காக போராடி தமது உயிர்களை தியாகம் செய்தார்களோ, அந்த தியாகங்களை கொச்சைப்படுத்திடும் விதத்தில், அம்மாவீரர்கள் எந்த அடக்கு முறைகளை எதிர்த்து போராடி தியாகங்கள் புரிந்தார்களோ, அதே அடக்குமுறைகளை தமிழர் தேசத்தில் நடைமுறைப்படுத்துங்கள் என்று, இனவழிப்பு போரில் பெரும்பங்காற்றிய இன்றைய அரசை கேட்கிறார்கள் தமிழரசுக்கட்சியும், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரும்…
இதில் தமிழ்தேசியத்திற்கான இணைவு எங்கே இருக்கிறது என்பது, இந்த கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொருவரினதும் சட்டைகளை பிடித்து தமிழ் மக்கள் கேட்கவேண்டிய கேள்வி இன்று அவசியமானது…
குகன் யோகராஜா
09.12.2025
பகிர்ந்துகொள்ள

Leave a Reply