தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி செய்ய முற்படும் அரசியல் நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
அருட்தந்தை மா.சக்திவேல் இன்று செவ்வாய்க்கிழமை (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரச பயங்கரவாதம் தமிழர் தரப்பில் பேரினவாதத்தின் கைக்கூலிகளாக செயற்பட்டோரை தவிர ஏனைய அனைத்து தமிழர்களையும் தொடர்ந்து பயங்கரவாதிகளாகவே பார்க்கிறது என்பதை எழுத்தாளரும் கவிஞருமான தீபச்செல்வனை அண்மையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைத்து நடத்திய நீண்ட விசாரணை மூலம் புலப்படுத்துகின்றது.
ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வினை தலைமை தாங்கியமையை காரணம் காட்டி விசாரணை என அழைத்து குறித்த நூல் புலிகளின் மீளுருவாக்கம் தொடர்பில் கருத்துள்ளனவா?என கேட்டு விசாரணை நடத்தியமை தமிழர் தாயகத்தின் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என்போரின் கருத்து சுதந்திரம் எழுத்து சுதந்திரம் என்பவற்றுக்கு எதிரான அச்சுறுத்தல் மட்டுமல்ல அடிப்படை உரிமை மீறலுமாகும்.
இத்தகைய அச்சுறுத்தல் உளவியல் தாக்குதலை வன்மையாக கண்டிப்பதோடு இத்தகைய தாக்குதலுக்கு எதிராக இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என்போர் ஜனநாயகத்தின் வழியில் எழுதுகோலினை(பேனை) கையில் எடுத்து தமது எதிர்ப்பினை வெளியிடுதல் வேண்டும்.
கருத்து சுதந்திரம் கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் என்பவற்றை நசுக்குவதற்காக நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ள ஆட்சியாளர்கள் தமிழக தாயகத்தில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மூலம் போர்க்கால நிகழ்வுகளை வெளிக்கொண்டுவரும் இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் என்பவரை இலக்கு வைத்து அவர்களின் கழுத்தை நெரிக்க முற்படுவது ஜனநாயத்திற்கு எதிரான அராஜகமே.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நடாத்தியுள்ள இத்தகைய விசாரணை மூலம் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என்பவரை மன உளைச்சலுக்குள் தள்ளுவதோடு அவர்களின் குடும்ப உறவுகளையும் அச்சுறுத்தல் உளவியல் தாக்குதலுக்குள் உட்படுத்தி தாம் பாதுகாப்பில்லா சூழலிலா வாழ்கிறோம் எனும் மனநிலைக்குள் தள்ள வைப்பது பயங்கரவாத தடுப்பு பிரிவினரின் நோக்கமாகவும் இருக்கலாம்.
இராணுவத்தினரை பயன்படுத்தி மாவீரர் துயிலும் இல்லங்களை அழித்து அதன்மூலம் தியாக வரலாற்றை அழிக்க நினைத்து அது கை கூடாத நிலையில் நினைவேந்தலை தடுக்க சட்டம் கொண்டுவர உள்ளனர். இன்னொரு பக்கம் தொல்லியல் திணைக்களம் மூலம் தமிழர்களின் வரலாற்று தொன்மையை சிங்கள பௌத்தமாக்கி ஆக்கிரமித்துக் கொண்டு இப்போது போர்கால வரலாற்றினை அடுத்த சாந்ததியினருக்கு கடத்தும் இலக்கியவாதிகள் எழுத்தாளர்கள் என்போரை அச்சுறுத்தி அடக்கு முறையை பிரயோகிக்க நினைப்பது அரச பயங்கரவாதத்தின் அரசியல் கோழைத்தனமே அன்றி வேறில்லை.
போர்க்கால அனுபவங்கள், போரின் வலிகள் அதனை சுமந்து நிற்கும் ஒவ்வொருவர் உள்ளத்திலும் தேங்கிக்கிடக்கின்றது.அதனை இலக்கிய வடிவில் வெளியில் கொண்டு வருவதும் அதனை தமது வாழ்வு பயணத்தோடு சேமித்து கடப்பதும் உளவியல் சுகமாகும். அத்தோடு வரலாற்றையும் சேமிக்கும் செயற்பாடுமாகும். இதனை பயங்கரவாதமாக்குவது பயங்கரவாத சிந்தனை உளவியலாகும். இதுவே பயங்கரவாதம். இத்தகைய பயங்கரவாதத்திற்கு ஆட்சியாளர் முற்றுப்புள்ளி வைத்தல் வேண்டும். இல்லையேல் எதிர்காலம் இன்னும் பயங்கரமாகவே இருக்கும்.
பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தீபச்செல்வனை விசாரணைக்கு உட்படுத்தியதன் மூலம் அவர்கள் நோக்கத்தை அடைய முடியாது.எந்த நூல் தொடர்பாக அவர் விசாரணைக்கு அழைகப்பட்டாரோ அந்த நூலான 30 நாட்களை நீந்தி கடந்த நெருப்பாறு எனும் மூத்த எழுத்தாளர் நா. யோகேந்திரநாதன் அவர்களின் நோக்கம் மிக மிக வேகமாக மக்களை சென்றடையும். அத்தோடு தீபச்செல்வன் அவர்கள் எழுத்தின் வீச்சும் மேலும் விரிவடையும். இதற்கு தேசிய பற்றாளர்கள் தமது ஆதரவினையும் வழங்குவர்.
தமிழர்களின் தேசியம் தொடர்பான சிந்தனையை 2009 இனப்படுகொலையோடு முடிவுக்கு வந்துவிட்டோம் என ஆட்சியாளர் நினைக்கும் போது அது ஜனநாயக வடிவில் மீண்டும் மக்கள் மயமாகி உயிர்ப்பு பெற்று வருகின்றது. தற்போது பேரினவாதத்தின் அடக்குமுறை, ஆக்கிரமிப்பு என்பவற்றை யுத்தமற்ற சூழ்நிலையிலும் நேரடியாக காண்பவர்கள் ஆங்காங்கே ஜனநாயக வடிவில் தமது தேசிய சிந்தனையை மீளுருவாக்கம் செய்து வருகின்றனர். இதற்கு பயங்கரவாதம் சாயம் பூசுவதற்கு எடுத்தாளர்களை விளக்க வைக்கின்றனர்.
பேரினவாதிகள் தமிழர்களை தொடர்ந்தும் பயங்கரவாதிகள் என அடையாளப்படுத்தி செய்ய முற்படும் அரசியல் நாட்டின் எதிர்காலத்தை மேலும் அழிவுக்குள்ளேயே தள்ளும். அழிவுகளை அரசியலாக்குவது நீடிக்க முடியாது என்பதை தற்போதைய சூழ்நிலை உணர்த்துகின்ற போது அதனை ஏற்றுக் கொள்ளாது வேறு திசையில் மக்களை திருப்பம் அடைவது வெட்கக்கேடு.