வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் உரிமைகளை அழிப்பதற்காக அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை கொண்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துங்கள் என குறிப்பிட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தற்போதைய நிலையில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் சிங்கள மக்கள் ரணில்,ராஜபக்ஷர்களை முழுமையாக புறக்கணிப்பார்கள்,ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம்பெற்ற சர்வஜன வாக்குரிமை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாட்டில் மக்களாணை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது, ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும். தேர்தலை நடத்த நிதி இல்லை என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் உரிமைகளை திட்டமிட்டு அழித்து சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்காக செயற்படும் இராணுவம்,தொல்பொருள் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகிய தரப்பிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியை தேர்தலுக்கு ஒதுக்கி உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகிறோம்.
தற்போதைய சூழலில் தேர்தல் ஒன்று இடம்பெற்றால் ரணில்,ராஜபக்ஷர்கள் படுதோல்வி அடைவார்கள் சிங்கள மக்களே அவர்களை முழுமையாக புறக்கணிப்பார்கள். ஆகவே உள்ளுராட்சிமன்றத் தேர்தல் நிச்சயம் நடத்தப்பட வேண்டும் என்பதில் நாங்களும் உறுதியாக உள்ளோம். சர்வதேசத்தையும்,சர்வதேச சமூகத்தையும் ஏமாற்றும் வகையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அப்பட்டமான முறையில் பொய்யான அறிக்கையினை ஜனாதிபதிக்கு சமர்ப்பித்துள்ளது.
காணாமல் போனோரின் உறவுகள் உள்ளக பொறிமுறையான விசாரணைக்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளமை முற்றிலும் பொய்யானது,இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த பொய்யான செயற்பாட்டுக்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் கட்டளைக்கு அமைய இலங்கை இராணுவம் தமிழ் மக்கள் மீது மேற்கொண்ட இன படுகொலைக்கு பக்கச்சார்பற்ற வகையிலான சர்வதேச நீதிபொறிமுறையிலான விசாரணையை கோருகிறோம்,சர்வதேச தலையீடு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும்.
மட்டக்களப்பு பகுதியில் மயிலத்தமடு மாதுறு ஓயா திட்டத்தின் ஊடாக சிங்கள குடியேற்றத்தை அமைப்பதற்கு தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான மரபுரிமை சின்னங்களும்,உரிமைகளும் அரச அதிகாரிகளினாலும்,படையினராலும் அழிக்கப்படுகிறது. இதனையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
வடக்கு மாகாணத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட இந்திய மீனவர்களுக்கு இடமளிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இலங்கை -இந்திய மீனவர்களுக்கு இடையிலான தொழில்சார் முரண்பாட்டை தீவிரப்படுத்தும் வகையில் கடற்றொழில் அமைச்சர் செயற்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றார்.