தமிழர் பூர்வீக காணிகளை அபகரிக்கும் அரச திணைக்களம்! காப்பாற்ற போராடும் மக்கள்!

You are currently viewing தமிழர் பூர்வீக காணிகளை அபகரிக்கும் அரச திணைக்களம்! காப்பாற்ற போராடும் மக்கள்!

வவுனியா மாவட்டத்தின் வவுனியா – வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மருதோடை கிராம அலுவலக பிரிவில் அமைந்துள்ள காஞ்சூரமோட்டை கிராம காணிகளை கையகப்படுத்தும் செயற்பாட்டை வனவளத் திணைக்களம் பல வழிகளில் முன்னெடுத்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதேவேளை தமது கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை என்றும் இந்த மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வவுனியா – வடக்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மருதோடை கிராம அலுவலக பிரிவில் அமைந்துள்ள காஞ்சூரமோட்டை கிராமத்தில் 22 குடும்பங்கள் தற்காலிக வீடுகளில் வசித்து வருகின்றனர்.

பாரம்பரியமாக தமது முன்னோர்கள் வாழ்ந்த இடம் அழிவடைந்துவிட கூடாது என்பதற்காக இந்த 22 குடும்பங்களும் 2018 முதல் பல்வேறு சிரமங்களுக்கு மதியில் வாழ்வதாக தெரிவிக்கின்றனர். காஞ்சூரமோட்டை கிராமம் தமது முன்னோர்களின் கிராமம் என தெரிவிக்கும் தியாfராஜா, இந்த கிராமத்தை வனவள திணைக்களத்தினரிடம் இருந்து முழுமையாக மீட்டுத்தருமாறும் கோரினார்.

இந்த கிராமத்தில் பொதுமக்கள் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் இன்றும் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார். காஞ்சிரமோட்டை கிராமத்தில் இருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் சிங்கள மக்களை குடியமர்த்தியுள்ள அரசாங்கம் அங்கு அனைத்து வசதிகளையும் மேற்கொண்டுள்ள போதிலும் பூர்வீகமாக தமது முன்னோர் வாழ்ந்து இன்று தாம் வாழும் கிராமம் தொடர்பாக அரசாங்கம் பாராபட்சம் காட்டுவதாகவும் தெரிவிக்கினறனர்.

பகிர்ந்துகொள்ள