“தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம்” – ஆளுநரின் ஒப்புதலுடன் ஒன்ராறியோவில் சட்டமானது!

You are currently viewing “தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம்” – ஆளுநரின் ஒப்புதலுடன் ஒன்ராறியோவில் சட்டமானது!

கனடா – ஒன்ராறியோ மாகாணத்தில் தமிழினப் படுகொலை அறிவூட்டல் வாரம் ஆளுநரின் ஒப்புதலுடன் உத்தியோகபூர்வ சட்டமாக ஏற்று அங்கீகரிக்கப்பட்டது.

இதன்மூலம் மே-18 ஆம் திகதியுடன் முடிவடையும் 7 நாட்கள் ஒன்ராறியோவில் ஆண்டுதோரும் தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக கடைப்பிடிப்பதற்கான சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அத்துடன், தமிழினப் படுகொலை குற்றச்சாட்டை வெளிநாடொன்றின் மாகாணம் சட்டரீதியாக ஏற்று அங்கீகரித்த முதல் சந்தர்ப்பமாக இது அமைந்துள்ளது.

தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரம் முன்மொழிவு (Bill 104) மூன்றாவது வாசிப்பு மே 06ஆம் திகதி ஒன்ராறியோ மாகாணச் சட்டமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து மாகாண ஆளுநர் ஒப்புதலுக்காக இது அனுப்பப்பட்டது. இந்நிலையில் முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை வாரம் ஆரம்பமான முதல்நாளான நேற்று இந்த சட்டமூலத்துக்கு ஒப்புதல் அளித்து மாகாண ஆளுநர் கையெழுத்திட்டார்.

இதனையடுத்து தமிழினப்படுகொலை அறிவூட்டல் வாரச் சட்டம் ஒன்ராறியோவில் உத்தியாகபூா்வமாக நடைமுறைக்கு வந்தது. ஒன்ராறியோ சட்டமன்ற தமிழ் உறுப்பினர் விஜய் தணிகாலம் தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் என்ற தனிநபர் பிரேரணையை 2019ஆம் ஆண்டு சமர்பித்தார்.

இந்த தனிநபர் பிரேரணை மீதான மூன்றாம் வாசிப்பு கடந்த 6-ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உட்பட ஆளும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த மாகாணசபை உறுப்பினர்கள் தமிழர்கள் மீதான இனப்படுகொலை குறித்தும், தமிழர்கள் தொடர்ந்து எதிர் கொள்ளும் உரிமை மறுப்புகள் குறித்தும் பேசினர்.

தொடர்ந்து ஒளுநரின் ஒப்புதல் பெற Bill 104 என்ற இந்தத் சட்டத் திருத்தம் அனுப்பப்பட்டது. இந்நிலையிலேயே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வார ஆரம்ப நாளில் இதனை அங்கீகரித்து ஆளுநர் கையெடுத்திட்டார்.

ஒன்ராறியோ சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘தமிழ் இனப்படுகொலைக் அறிவூட்டல் வாரம்’ (சட்டமூலம் 104) ஆளுநரின் அங்காரத்தை பெற்று சட்டமாவதைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் இலங்கை அரசாங்கம் மிகத் தீவிரமாகச் செயற்பட்டு வந்தபோதும் அந்த முயற்சி கைகூடவில்லை.

இலங்கைக்கான கனேடிய தூதுவர் டேவிட் மெக்கின்னனை வெளிவிவகார அமைச்சில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து அமைச்சர் தினேஷ் குணவர்தன இந்த விடயம் குறித்துப் பேசினார்.

‘தமிழ் இனப்படுகொலைக் அறிவூட்டல் வாரம்’ தொடர்பில் ஒன்ராறியோ சட்டமன்றத்தால் 2021 மே 06ஆம் திகதி தனிநபர் உறுப்பினர் சட்டமூலம் 104 ஐ நிறைவேற்றப்பட்டமை குறித்து இலங்கை அரசாங்கத்தின் ஆழ்ந்த கவலைகளை அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் இனப்படுகொலை நடந்திருக்கின்றமை கண்டறியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திய கனடா அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டிற்கு முரணாக இலங்கையில் ‘இனப்படுகொலை’ நடந்திருப்பதை ஒன்ராறியோ சட்டமன்றம் கண்டறிந்திப்பதாக அமைச்சர் தினேஸ் குணவர்த்தன கனேடிய தூதுவருக்கு விளக்கியதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

கனேடிய அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு இந்தச் சட்டமூலத்துக்கு ஆளுநரின் அங்கீகாரம் கிடைக்காமல் தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் கனேடியத் தூவரிடம் இலங்கை அரசு கோரிக்கை விடுத்திருந்தது எனினும் இலங்கையின் கடும் எதிர்ப்புக்களையும் மீறி தமிழின படுகொலை அறிவூட்டவார சட்டம் ஆளுநர் ஒப்புதலோடு நிறைவேறியது.

இதன்மூலம் உலக நாடொன்றின் மாகாண அரசொன்று தமிழினப் படுகொலையை ஏற்று அதன் பின்னணி குறித்து விளிப்பூட்ட அங்கீகாரம் அளித்துள்ளமையானது புலம்பெயம்வாழ் தமிழர்களின் நீதி கோரும் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் இந்தத் தீா்மானத்தை முன்வைத்து நிறைவேற்றியமைக்காக நான் பெருமையடைகிறேன் எனவும் விஜய் தணிகாசலம் கூறினார்.

இந்தத் தீா்மானத்தின் மூலம் மே 12 – மே 18 வரையான காலப்பகுதி ஒன்ராறியோவில் இலங்கை தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரமாக பிரகடணப்படுத்தப்படுகிறது. தமிழ் இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான பிற குற்றங்கள் குறித்து பொதுமக்களை தெளிவுபடுத்த இதன்மூலம் சட்டரீதியான அங்கீகாரம் கிடைத்துள்ளது என அவர் கூறினார்.

இனப்படுகொலை அறிவூட்டல் வாரம் குறித்த தீா்மானத்தை நிறைவேற்ற ஒன்ராறியோ தமிழ் சமூகத்துடன் ஒன்றிணைந்து நின்றமைக்காக மாகாண முதல்வர் டக் போர்ட், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து ஒன்ராறியர்களுக்கும் நன்றி கூறுகிறேன் எனவும் விஜய் தணிகாசலம் தெரிவித்தார்.

இழந்த உயிர்களை நாம் மீண்டும் கொண்டுவர முடியாது என்றாலும் இவ்வாறான ஆதரவு மூலம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் அவர்களது சமூகங்களின் வலியைக் குணப்படுத்த முடியும்.

இந்தத் தீா்மானத்தின் மூலம் 146,000 க்கும் அதிகமானவர்களின் இழப்பையும் ஒப்புக்கொண்டு தமிழ் சமூகம் குணமடைய இடமளிக்கிறோம். ஜனநாயகத்தின் உண்மையான முன்மாதிரியாக நாங்கள் ஒன்றாக நிற்கிறோம்.

இந்த பிரேரணையை ஆதரித்து, நிறைவேற அயராமல் ஒத்துழைத்த அனைவருக்கு இதயத்தின் ஆழத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

பாரி, சட்பரி, வின்ட்சர், வாட்டர்லூ, ஹாமில்டன் மற்றும் கிரேட்டர் ரொரண்மோ முழுவதும் இருந்தும் ஒட்டாவா வரையிலும் இந்த இலங்கை தமிழர் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை அங்கீகரிக்குமாறு கோரி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கடிதங்களை எழுதியுள்ளனர்.

ஒன்ராறியோவில் ஏராளமான தமிழ் இளைஞர்கள் உள்ளனர், நான் அவர்களில் ஒருவனான அவர்களின் வலி மற்றும் துன்பங்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்ள முன்வந்தேன்.

இந்தத் தீா்மானத்தை நிறைவேற்ற தொடர்ச்சியாக முன்னின்று ஆதரவளித்த கனேடிய தமிழர் தேசிய அவை, கனேடிய தமிழ் இளையோர் அமைப்பு போன்றவற்றுக்குள் நன்றி கூறுகிறேன். இந்த அமைப்புக்கள் மற்றும் ஒன்ராறியோ சமூகங்களின் ஆதரவில்லாமல் நாங்கள் இந்த இலக்கை அடைந்திருக்க முடியாது எனவும் ஒன்ராறியோ சட்டமன்ற உறுப்பினர் விஜய் தணிகாசலம் தெரிவித்தார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply