முள்ளிவாய்க்கால் நினைவாலயம் இடித்தழிக்கப்பட்டது நாகரீகமற்ற செயல் – தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம்!

You are currently viewing முள்ளிவாய்க்கால் நினைவாலயம் இடித்தழிக்கப்பட்டது நாகரீகமற்ற செயல் – தமிழ் தேசிய கூட்டமைப்பு கண்டனம்!

முள்ளிவாய்காலை சுற்றி இராணுவமும் பொலிஸூம் குவிக்கப்பட்டிருக்க முள்ளிவாய்க்கால் நினைவுச்சின்னங்கள் இரவோடிரவாய் அழிக்கப்பட்டிருப்பது நாகரீகமற்ற செயல் எனத் தெரிவித்துள்ள தமிழரசுக் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணைத் தலைவருமான மாவை சோனாாதிராஜா, இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என கூறியுள்ளார். இது தொடர்பில் அவா் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இன்று காலையில் மேலும் ஒரு நெஞ்சை உலுக்கும் செய்தி கிடைத்தது. மே-18 முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நிலைநட்டுள்ள சின்னங்கள் சிதைக்கப்பட்டுள்ளமையும், நிலைநாட்டவெனவிருந்த நினைவுக்கல்லும் காணாமல்ஆக்கப்பட்டுவிட்டமையும் எம் நெஞ்சை உலுக்கும் கொந்தளிக்க வைக்கும் நடவடிக்கைகளும் ஆகும்.

நேற்று இரவோடிரவாய் முள்ளிவாய்க்கால் முற்றத்தைச் சுற்றி இராணுவம் குவிக்கப்பட்ட நிலையில் இக்கொடிய நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்நாகரிகமற்ற எம்இனத்தின் ஆன்மத்தையே அழிக்கும் செயலை அனைவரும் நாகரிகமுள்ள உலகமும் கண்டித்தே ஆகவேண்டும். இதற்கான பொறுப்பை அரசு ஏற்றுப் பதிலளிக்க வேண்டும்.

இந்நாட்டில் தமிழினப் பிரச்சனை தீர்க்கப்படாமையினால் இடம்பெற்ற நீதிக்கான 70 ஆண்டுகள் போராட்டத்தின் உச்சநிலையில் இலட்சக்கணக்கான உயிர்கள், மனித குலம் அழிக்கப்பட்டமையை நினைவுகூரும் பண்பாடு, நாகரிகம், அந்த உறவுகளுக்கும் நீதிக்காய்ப் போராடும் திடசங்கற்பங் கொண்ட மக்களுக்கும் உள்ள உரிமையையும் அழிக்க எடுக்கும் இத்தகைய நடவடிக்கைகளை நாம் அனைவரும் எதிர்த்தேயாக வேண்டும்.

முள்ளிவாய்க்கால் மே-18 நினைவுகூரும் அதேவேளை கொரோனா வைரஸ்-19 தீவிரமடைந்துவரும் நிலையில் சுகாதார விதிமுறைகளை ஏற்று பழியஞ்சி அமைதி வழியில் மக்கள், உறவுகள் வாழும் இடங்களில் நினைவுகூருவதற்கே அறிவித்தல் கொடுக்க எண்ணியிருந்தோம். கிருத்துவ மத ஆயர்களும் அவ்வாறானதொரு ஆனால் காத்திரமான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளனர். எவ்வாறாயினும் இனவிடுதலைப் போரில் அழிக்கப்பட்ட எம்மினத்தின் உறவுகள் தம் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவும் கண்ணீர் விட்டழுது ஆறுதல் பெறவும் உயிர்நீத்த உறவுகள் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதற்கும் உள்ள மனிதகுல நாகரிகத்தை உரிமையை நாமுள்ளவரை நிலைநாட்டவும் திடசங்கற்பம் கொள்வோம்.

அரசு அதன் இராணுவம், பௌத்தர்களும் நேற்று முன்தினம் முல்லைத்தீவில் குருந்தூர் மலைப்பிரதேசத்தில் சைவ மக்கள் வழிபாட்டுத்தலத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளையும் மீறி ஒன்று கூடி பௌத்த சிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளிலும், வழிபாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஆனால் இனவிடுதலைப் போரில் உயிர்களைப் பலிகொடுத்த உறவுகள் அந்த இன மக்கள் அவ்வுறவுகளை நினைவுகூரும் உரிமை பௌத்த சிங்கள அரசுகளினால் மறுக்கப்படுவது மட்டுமல்ல அந்த நினைவுகூரும் மையங்கள் நினைவிடங்களும் அழிக்கப்படுகின்றன.

நாம் இந்நாளில் தொடர்ந்தும் மனித குலத்தின் தமிழ் மக்களின் பண்பாடு, நாகரிகத்தை நிலைநாட்டுவோம் எனவும், அழிக்கப்பட்ட நினைவிடத்தை நினைவுச் சின்னங்களை மீளஅமைப்போம் எனவும், இனவிடுதலையை நிலைநாட்டுவோம் எனவும் திடசங்கற்பம் கொள்வோம் என்றுள்ளது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments