தமிழ்த் தேசிய இனப்படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் நினைவேந்தல் இன்று யாழ். வடமராட்சிக் கிழக்கு நாகர்கோவில் மகா வித்தியாலய முன்றலில் காலை 9:30 மணிக்கு இடம்பெற்றது.

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோயில் பாடசாலை மாணவர்கள் 39பேர் படுகொலை செய்யப்பட்ட நினைவு தினம் இன்றாகும். 1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகர்கோயில் மத்திய பாடசாலையில் சிறிலங்கா விமானப் படையினரின் குண்டுவீச்சில் 39 மாணவர்கள் உயிரிழந்த 21ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று நினைவுகூறப்படுகிறது.
1995 செப்டெம்பர் 22 ஆம் திகதி, அன்று பகல் 12:30 மணியளவில் மதியநேர இடைவேளைக்கு மணியடித்த போது பிள்ளைகள் வெளியில் வந்து விளையாடிக் கொண்டிருந்தனர். பகல் 12.50 மணிக்கு சிறிலங்கா விமானப் படைகளின் ‘புக்காரா’ விமானங்கள் குண்டுகளை கண்மூடித்தனமாக வீசின.
எதுவும் அறியாத மாணவர்கள் மரமொன்றின் கீழே பதுங்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதல்களால் மரத்தின் கீழே நின்ற 25 சிறார்கள் உடல்சிதறி அநியாயமாக கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலின்போது மொத்தம் 39 பேர் ஒட்டுமொத்தமாக ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டனர். 200 பேர் வரையில் படுகாயமடைந்தனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 6 வயது குழந்தை முதல் 16 வயது சிறுவன் வரை அடங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.