தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க பத்திரிகையாளர் மாநாடு! (முழு காணொளி)

You are currently viewing தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க பத்திரிகையாளர் மாநாடு! (முழு காணொளி)
தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க பத்திரிகையாளர் மாநாடு! (முழு காணொளி) 1

2002 ஏப்ரல் மாதத்தின் 10ம் நாள் சிங்களதேசத்தின் ஊடகங்கள் அனைத்தும், இந்தியாவின் அச்சு, ஓலி,ஒளி, இலத்திரனியல் ஊடகங்கள் முழுதும், சர்வதேசத்தின் மிக முக்கியமான ஊடக நிறுவனங்கள் எல்லாம் கிளிநொச்சியில் குழுமி இருந்தனர்.

தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க பத்திரிகையாளர் மாநாடு! (முழு காணொளி) 2

தமிழர்களின் வரலாற்றில் ஒரு தமிழனின் செய்திக்காக அவர் சொல்லப்போகும் பதில்களுக்காக ஒரே நேரத்தில் இவ்வளவு பத்திரிகையாளர்களும் ஊடகங்களும் குழுமியது வரலாற்றில் முதலானது. அதனைவிட சிங்களதேசத்தின் அதிபர்கள் நடாத்திய எந்தவொரு ஊடகவியலாளர் சந்திப்பிலும் அதுவரை இவ்வளவு பெருந்திரளாக வந்ததே இல்லையென்றே சிங்கள ஊடகங்கள் கூட வர்ணித்திருந்தன அந்த சந்திப்பை. இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு தேதி குறித்த பின்னர் இது நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் வடக்கையும் சிங்களதேசத்தையும் இணைக்கும் ஏ9 பாதை திறந்துவிடப்பட்டது. தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றில் இந்த நாள் மிக முக்கியமான நாளாகும்.

தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க பத்திரிகையாளர் மாநாடு! (முழு காணொளி) 3

தமிழீழ விடுதலையின் மூலஇயக்கு சக்தியான தேசியத்தலைவர் இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு ஊடகவியலாளர்களுக்கு பேட்டிகள் வழங்கி இருந்தாலும் 2002 ஏப்ரல் 10ம்நாள்தான் விடுதலைப்புலிகள் தமது தலைவருடன் உலக பத்திரிகையாளர்கள் அனைவரும் சந்திக்கும் ஒரு பெரும் அழைப்பை விடுத்திருந்தனர். உலக ஊடகங்களுக்கும் இது வித்தியாசமான ஒரு அனுபவமாகவே அவர்கள் பதிந்தார்கள். அதுநாள் வரைக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொள்கைப் பிரகடனமாக, வேலைத்திட்ட அறிவிப்பாக, உலகத்துக்கு செய்தியாக உலகம் கணித்து வந்தது ஒவ்வொரு மாவீரர் நாளிலும் தேசியத்தலைவரின் குரலில் வெளிவரும் மாவீரர் உரையை வைத்துதான்.

தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க பத்திரிகையாளர் மாநாடு! (முழு காணொளி) 4

முதல்முறையாக தமது சந்தேகங்களை தமது கேள்விகளை தேசியத்தலைவரிடம் நேரடியாக கேட்பதற்கு கிடைத்த இந்த சந்தர்ப்பம் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டது. இது ஒரு புறம்இருக்க, இந்த சந்திப்பை சிங்களதேசத்தின் ஆளும்தரப்பு அவ்வளவாக மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டதாக இல்லை.தேசியத்தலைவரின் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நேரடியாக சிங்களதேசத்தின் தேசிய தொலைக்காட்சியாக கருதப்பட்ட ரூபவாகினியில் நேரடியாக ஒளிபரப்பியே தீரவேண்டிய தவிர்க்கமுடியாத நிர்ப்பந்தமும் சிங்களத்துக்கு ஏற்பட்டது.

தமிழீழத் தேசியத் தலைவரின் வரலாற்று சிறப்புமிக்க பத்திரிகையாளர் மாநாடு! (முழு காணொளி) 5

விடுதலைப்புலிகளை சுற்றி மர்மங்களையும் விடைகள் இல்லாத கேள்விகளையும் தொடர்ச்சியாக இருக்கவைப்பதன் மூலமே விடுதலைப்புலிகளை ஒரு பயங்கர சக்தியாக உலகின் கண்களுக்குள் தக்க வைக்கமுடியும் என்பதே சிங்களத்தின் எண்ணம். இத்தகைய மர்மங்கள் நீங்குவதிலோ,உலகின் கேள்விகளுக்கு விடுதலைப்புலிகளின் அதிஉச்சமான தலைவரே நேரடியாக பதில் வழங்குவதோ சிங்கள ஆட்சியாளர்களுக்கு பிடிப்பதமானதாக இருந்திருக்கவே முடியாது.

ஆனாலும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை,போர் நிறுத்தம்,மற்றும் முக்கியமாக மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் என்ற நாடகத்தில் இத்தகைய அடுத்த தரப்பினரின் இத்தகைய ஊடக சந்திப்புகளை மறுப்பதோ தடை செய்வதோ முடியாது என்பதால்தான் சிங்களமும் இதற்கு ஒப்புகொள்வதாக சொல்லவேண்டி வந்தது. ஆயுதந்தாங்கிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் ஒரு அமைப்பு என்ற முறையில் மாறிவரும் உலக நிலைமைகளில் தமது நிலைப்பாட்டை வெளிஉலகத்துக்கு பகிரங்கமாக அதே நேரம் முடிவுகளை எடுக்கும் ஆற்றல்மிக்க ஒரே சக்தியான தேசியத்தலைவரின் குரலில் சொல்வதற்கான சந்தர்ப்பாக இதனை கணித்திருந்தார்கள்.

அதிலும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடப்பதற்கு சரியாக ஏழு மாதத்துக்கு முன்னர் உலகின் அனைத்து சமநிலைகளையும் ஆயுதந்தாங்கிய போராட்டங்கள் பற்றிய கணிப்புகளையும் தலைகீழாக மாற்றிய இரட்டை கோபுரச் சம்பவம் 2001 செப்படம்பர் 11ல் நிகழ்ந்தேறி இருந்தது. (இந்த கேள்வியும் தலைவரின் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது). இராணுவ பல சமநிலையில் ஏறத்தாழ சிங்கள தேசத்துக்கு ஒப்பானதாக விடுதலைப்புலிகள் அந்நேரம் பலத்துடன் இருந்தாலும் செப்டம்பர் 11க்கு பின்னான உலகின் கேள்விகள் வித்தியாசமானதாக இருந்ததால், அதற்கு தேசிய தலைவர்தான் பதில் அளிப்பது காத்திரமானதாக இருக்கும் என்பதாலும் நடாத்தப்பட்டது. இந்த பத்திரிகையாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் அதற்கான தேசியத்தலைவரின் பதில்களுக்கும் அப்பால் தேசியத்தலைவர் தன்னை நோக்கி கேட்கப்பட்ட கேள்விகளை உள்வாங்கும் முறைமையும் எந்தவொரு கட்டத்திலும் உணர்ச்சி வசப்படாமல் ஒரு மிகத்தேர்ந்த தலைவனுக்கு உரிய அணுமுறையை கையாண்டதாகவே, ஒரு பழுத்த இராஜதந்திரிக்கே உரிய வார்த்தை பிரயோகங்களை வெளிப்படுத்தியதாகவுமே ஆச்சரியத்துடன் உலக ஊடகங்கள் எழுதின. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு பற்றி அதில் கலந்துகொண்ட சிங்கள ஊடகவியலாளரான ரஞ்சன் பெரேரா கூறுகையில் “பிரபாகரனின் செய்தியாளர் மாநாடு வரலாறு காணாத நிகழ்வாகும்.

300க்கும் மேற்பட்ட உள்நாட்டு-வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மிகுந்த சிரமத்துடன் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டனர். இந்த மாநாடு மூலம் உலகில் விடுதலைப்புலிகளுக்கு இருந்த முக்கியத்துவத்தை உணரமுடிந்தது. பிரபாகரனை பற்றிய எவ்வளவோ கதைகளும் கற்பனைகளும் பரவி இருந்தவேளையில் செய்தியாளர்கள் மாநாட்டில் மிகச் சாதாரணமாக காட்சியளித்தார். அவரது ஒவ்வொரு சொல்லும் அவரைப் பற்றிய தவறான கருத்துகளை போக்கின என்றோ சொல்ல வேண்டும்” என்று சொன்னார். இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தலைவர் கொடுத்த பதில்கள் வெறுமனே அந்த ஊடகம் கேட்ட கேள்விக்கான பதில் என்பதாக மட்டும் இல்லாமல் அதனை பார்க்கும், கேட்கும், வாசிக்கும் உலக அரங்கிற்கு சொல்லப்பட்ட பதில்களாகவே மிகவும் அற்புதமாக அமைந்திருந்தன. என்றுமே சிங்கள பேரிவாதம் அதன் அடக்குமுறை முகத்தை மாற்றிக்கொள்ளாது என்று வரலாற்று அனுபவங்கள் மூலம் தெரிந்து கொண்டிருந்தாலும் பிரிந்துசெல்லும் முடிவை மாற்றுவதற்கான அணுகுமுறை சிங்களத்தின் நடைமுறையில்தான் இருக்கின்றது என சொல்லி இருந்தார்.

மீண்டும் ஆயுதந்தாங்கி போராட விடுதலைப்புலிகள் போகபோகிறார்கள் என்ற கருத்தை தேசியதலைவரின் வாயால் சொல்ல வைப்பதற்காக “பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால்.?” என்று கேட்கப்பட்டபோது மிகவும் இலாவகமாக வார்த்தையை தெரிவுசெய்து “பேச்சுவார்த்தை தோல்வியடைந்தாலும் தொடர்ந்து சமாதான முயற்சிகளை மேற்கொள்வோம்” என்று சொன்னதும், “பேச்சுவார்த்தையில் அதிபர் சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நினைக்கிறீர்களா”? என்று கேட்கப்பட்டபோது சிங்களதேசத்தின் ஒரு அதிபர் தமிழ் மக்களுக்கு உரிமை கொடுப்பதற்கு எத்தகைய தடங்கல்களை கொடுப்பார் என்று தெரிந்திருந்தும் “சந்திரிகா குழப்பம் ஏற்படுத்துவார் என்று நாங்கள் நினைக்கவில்லை.” என்பதுடன் நின்றுவிடாமல் “அவர் அப்படி ஏதும் செய்தால் அதை பார்த்து கொள்வது ரணிலின் பொறுப்பு” என்று சொன்னதன் மூலம் பதிலிலேயே ரணிலுக்கான செய்தியையும் சொல்லி இருந்தது இன்றும் ஆச்சர்யத்துடன் நோக்கப்படுகிறது.

ஏறத்தாழ இதே மாதிரியான கேள்வி ஒன்று இந்த ஊடகவியலாளர் சந்திப்புக்கு பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் 1984ம் ஆண்டு மார்ச் மாதம் ‘சண்டே’ இதழுக்காக அனிதா பிரதாப்பால் கேட்கப்பட்டபோது “ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஒரு உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால் நான் ஆயுதம் ஏந்தி இருந்திருக்க மாட்டேன்” என்று கூறியிருந்ததும் தலைவர் சிங்களதேச அதிபர்களை  எப்படி பார்க்கிறார் என்று காட்டியிருந்தது. என்னை பொறுத்தவரையில் இந்த இனத்துக்கென்று தனியான ஏதும் கைகாட்டிநூலோ,வழிகாட்டி புத்தகமோ தேவையில்லை. தேசியத்தலைவரின் அனைத்து பேட்டிகளையும் அவரது அனைத்து மாவீரர் உரைகளையும் தொகுத்தாலே அதற்குள் இந்த இனம் இப்போது செல்லவேண்டிய திசையும் பாதையும் அதற்கான பக்குவமான முறைகளும் பொதிந்து கிடக்கும். இருள்நிறைந்த இந்நேரத்தில் அவைகளே பாதை வெளிச்சங்களாக ஒளிதரக் கூடியவை. 

https://www.youtube.com/watch?time_continue=1&v=3_UUBKUgx4E&feature=emb_logo
பகிர்ந்துகொள்ள