தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2026 – அனைத்துலகத் தொடர்பக மாவீரர் பணிமனையின் வேண்டுகோள்.
மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
18.11.2026.
தலைமுறைகள் தாண்டியும் மாவீரர் ஈகத்தை நினைவில் ஏந்துவோம்!
தலைமுறைகள் தாண்டியும் மாவீரர் ஈகத்தை நினைவில் ஏந்துவோம்!
தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காகவும் கெளரவத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்கள், காலங்காலமாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.
-தமிழீழத் தேசியத்தலைவர்,மேதகு.வே.பிரபாகரன் அவர்கள்.
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!
தாய்மண்ணின் விடுதலைக்காகவும் தமிழ் மக்கள் தமிழீழ மண்ணில் உரிமையுடனும் தன்மானத்துடனும் அச்சமின்றியும் வாழ வேண்டும் என்ற உயரிய கனவிற்காக, தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது தலைமையையும் வழிகாட்டலையும் ஏற்றுநின்று வீரத்தோடு களமாடி வீரச்சாவடைந்த ஆயிரமாயிரம் மாவீரர்களை ஒருசேர நெஞ்சில் நிறுத்தி, மலர்தூவி, சுடரேற்றி நினைவேந்தும் புனித நாளான நவம்பர் 27 இனை எதிர்கொள்ள ஆயத்தமாகிவருகிறோம்.
இவ்வாண்டும் தமிழீழத்திலும் அனைத்துலக நாடுகளிலும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரும் நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எம் தேசக் காவலர்களை நினைவேந்துவதென்பது வெறுமனே கடந்த காலத்தை நினைவுகூரும் ஒரு நிகழ்வன்று. இது எம் இனத்தின் வரலாற்றை நினைவில் மீட்டெடுக்கும் வேளை. எம் மண்ணின் வீரத்தையும் ஈகத்தையும் வலிகளையும் இழப்புகளையும் உரிமையோடு உணர்ந்து, தம் வாழ்வைத் தாய்த்தேசத்தின் கனவிற்காக ஈந்தவர்களின் ஈகத்தைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் வரலாற்றுக் கடமைதனை நிறைவேற்றத் துடிக்கும் உன்னத தருணத்திற்காக காத்திருக்கிறோம்.
தம் இளமைப் பருவத்தையும் குடும்ப உறவுகளையும் எதிர்கால வாழ்வின் இனிய கனவுகளையும் துறந்து, தழிழீழ விடுதலைக்காகத் தம்மையே ஈகம் செய்தவர்கள் எம் தேசத்தின் காவல் தெய்வங்கள்.
எம் அன்பிற்குரிய தாயக உறவுகளே!
எம் மண்ணின் விடுதலைத் தாகத்தோடு களமாடித் தம் இன்னுயிரையே ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் நவம்பர் 27 இல் மாவீரர்கள் துயில்கொள்ளும் துயிலுமில்லங்களிற்குப் பேரெழுச்சியோடு சென்று, உணர்வேந்தி, உங்களுடைய உரிமைமிகு கடமையாக நினைவேந்தல்களில் பங்கேற்குமாறு அன்போடும் உரிமையோடும் அழைக்கின்றோம்.
தம் உயிர்களை ஈந்தவர்களின் நினைவுகளை எம் வாழ்வில் நிலைநிறுத்தியபடி அவர்களின் ஈகத்தை மறவாமல், எம் வரலாற்றைத் தலைமுறைகளுக்குக் கடத்துவதோடு, தமிழீழ தேசமெங்கிலும் அரச பயங்கரவாத அடக்குமுறையின் பிடிக்குள்ளே வாழ்ந்தபடி, தன்னெழுச்சி கொண்டு உணர்வலைகளாக மேலெழும் மக்களின் திரட்சியையும் பன்னாடுகளின் திசையெங்கிலுமாக வழிபாட்டுக்குத் தயாராகிவரும் எமது மக்களின் திட்டமிடல்கள் கண்டு, அவற்றினை எவ்வாறாகினும் முடக்கிவிட எத்தனிக்கும் எதிரியின் சூழ்ச்சிகளையெல்லாம் முறியடித்து எமக்காய் உயிர்கொடுத்த உன்னதர்களை நினைவுகூர்வோமாக!
மாவீரர்களின் ஈகத்திற்கு நாம் தலைவணங்குவது போலவே,அவர்களின் பெற்றோர்களையும் உரித்துடையோர்களையும் இப்புனித நாளில் மதிப்பளித்து, அவர்களின் உயர்மிகு கொடைகளுக்கு எம் நெஞ்சார்ந்த நன்றிப்பகிர்வை ஆற்றிடத் தயாராகுவோம்.
எம் மண்ணின் வீர வரலாற்றினை தம் குருதியால் வரைந்து எம் வணக்கத்திற்கும் உயர்ந்த மதிப்பிற்குமுரிய மாவீரர்களின் வணக்கத் தளங்களிலே அனைவரும் ஓரணியாகநினைவேந்தலில் ஒன்றுகூடுவோம்!மாவீரர்களின் நினைவுகளை நெஞ்சிலேந்தி உணர்வுகொள்வோம்.
நன்றி
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
மாவீரர் பணிமனை,
அனைத்துலகத் தொடர்பகம்.
தமிழீழ விடுதலைப்புலிகள்.







