தமிழீழத்தின் பல எழிச்சி மிகு தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர் சங்கீத கலா பூஷணம் குமாரசாமி அவர்கள் நேற்று (16.08.2023) புதன்கிழமை இயற்கை எய்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட கலாபூஷணம் குமாரசாமி அவர்கள் தாயக விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பகாலம் தொட்டு தனது இறுதிக்காலம் வரை தணியாத தாயகப்பற்றோடு வாழ்ந்துவந்த ஓர் இலட்சிய மனிதராவார்.
இவர் தமிழீழத்தேசியத் தலைவர் மீதும் போராட்டத்தின் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்டு வாழ்ந்ததுடன் தாயகத்தில் மட்டுமன்றி தமிழர் வாழும் தேசமெங்கும் ஒலித்த மிகவும் உணர்ச்சியும் எழுச்சியும் மிக்க தாயகப் பாடல்களைப் பாடிய பெருமைக்குரியவராவார்.
தாயகத்தின் முன்னணி இசை அமைப்பாளர்களின்இசையில் இவர் பாடிய பல பாடல்கள் காலத்தால் அழியாதவையாகும் குறிப்பாக
பிஞ்சுமனம் என்ற தாயகத் திரைப் படத்தில் இடம்பெற்ற பூத்தகொடி பூக்கள் இன்றித் தவிக்கின்றது என்ற பாடலும்,
கரும்புலிகள்பாகம்-(01)என்ற பாடல் இறுவெட்டில் இடம்பெற்ற போரம்மா உனையன்றி யாரம்மா,என்றபாடலும்,
கடலோரக் காற்று திரைப்படத்தில் இடம்பெற்ற கடலோரக்கரை மீது காவல் என்ன தோணிக்காரா என்ற பாடலும்,
திசைகள் வெளிக்கும் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற கண்ணகி வீட்டில் யன்னலைக் கேட்டு உண்மையைத் தேடுங்கள் என்ற பாடலும் இவர் தேசத்தின் மீது கொண்ட பற்ருறுதியை எடுத்துக்காட்டி நிற்கின்றன.