தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் பாலா அண்ணா பேசுகிறார்!

You are currently viewing தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் பாலா அண்ணா பேசுகிறார்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் பாலா அண்ணா பேசுகிறார்.

தொடர்ச்சி பின்பு எம்மிடம், ஒரு சுங்க அதிகாரியின் பெயரைக் குறித்துத் தந்து, அவரைச் சந்தித்தால் காரியம் சாத்தியமாகும் என்றார் முதலமைச்சர். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு நாம் மகிழ்வுடன் வீடு திரும்பினோம்.

சென்னைத் துறைமுகத்திலிருந்து ஆயுதக் கொள்கலனை மீட்டு வரும் பொறுப்பைக் கேணல் சங்கரிடம் கையளித்தார் பிரபாகரன். ஒரு சில தினங்களுக்குப் பின்னர் ஒரு நாள் இரவு தமிழ்நாட்டுக் காவற்துறையினரின் பாதுகாப்புடன் பாரம் தூக்கி பொருத்திய கனரக வாகனத்தில் எமது ஆயுதக் கொள்கலன் சென்னை நகரம் ஊடாகப் பவனி வந்து நாம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இறக்கப்பட்டது. அதில் ஒரு தொகுதி ஆயுதங்கள் திருவான்மையூரில் நாம் வசித்த வீட்டில் குவிக்கப்பட்டன. ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கிகள், ரவைப் பெட்டிகள், கைக்குண்டுகளாக வீடு நிறைந்திருந்தது. அவை வீட்டிலிருந்து அகற்றப்படும் வரை என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.

எந்தப் பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக ஆயுதங்களைப் பெற்றுத் தந்ததற்காக எம்.ஜி.ஆருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் பிரபாகரன். அந்தப் பேருதவியின் நினைவுச் சின்னமாக இறக்கப்பட்ட ஆயுதங்களிலிருந்து ஒரு புதிய ஏ.கே-47 ரக தானியங்கித் துப்பாக்கியை எம்.ஜி.ஆரிடம் கையளித்தார் பிரபா. அந்தத் துப்பாக்கியை கழற்றிப் பூட்டி அதன் செயற்பாட்டு இயக்கத்தையும் விளங்கப்படுத்தினார். எம்.ஜி.ஆருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து நீண்ட கால இடைவெளியின் பின்னர் ஒரு தடவை சுகவீனமுற்றிருந்த முதலமைச்சரை நான் சந்திக்கச் சென்றேன். பிரபாகரனைச் சுகம் விசாரித்தார். தமிழீழத்தில் சௌக்கியமாக இருக்கிறார் என்றேன். அப்பொழுது தனது படுக்கையில் தலையணிகளின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஒரு ஏ.கே-47 துப்பாக்கியை எடுத்துக் காண்பித்து, “இது பிரபாகரன் தந்த நினைவுப் பரிசு.” என்று பெருமிதத்துடன் சொன்னார்.

எமக்குத் தேவை ஏற்பட்ட வேளைகளில் எம்.ஜி.ஆர் அளித்த நிதி உதவிகளை ஆதாரமாகக் கொண்டே இயக்கம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு தடவை எமக்குப் பெருமளவில் நிதி தேவைப்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்கள் என்னை எம்.ஜி.ஆரிடம் தூது அனுப்பினார். நான் எம்.ஜி.ஆரைச் சந்தித்த பொழுது முதல்வருடன் அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரனும் இருந்தார்.

“இராணுவ – அரசியல் ரீதியாக எமது விடுதலை இயக்கம் பெருமளவில் வளர்ச்சி கண்டுவிட்டது. பல்வேறு வேலைத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டி இருக்கிறது. இம்முறை பெரிய தொகையில் பணம் தேவைப்படுகிறது. தம்பி பிரபாகரன் உங்களைத் தான் நம்பியிருக்கிறார்” என்றேன்.

“பெரிய தொகையா? எவ்வளவு தேவைப்படுகிறது?” என்றார் முதல்வர்.

“ஐந்து கோடிவரை தேவைப்படுகிறது” என்றேன்.

எம்.ஜி.ஆர் அவர்கள் திரு.பண்டுருட்டி இராமச்சந்திரனைப் பார்த்து, “மாநில அரசு மூலமாக ஏதாவது செய்யலாமா?” என்று கேட்டார்.

அமைச்சர் சில வினாடிகள் வரை சிந்தித்து விட்டு, “போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்து மக்களுக்கென தமிழ்நாட்டு அரசால் திரட்டப்பட்ட நிதி இருக்கிறது. நான்கு கோடிக்கு மேல் வரும். அந்த நிதியை இவர்களுக்குக் கொடுக்கலாமே? ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு இந்நிதி வழங்கப்படுவதில் தப்பில்லை அல்லவா?” என்றார்.

“அப்படியே செய்யுங்கள். இந்த விடயத்தை உங்கள் பொறுப்பில் விடுகிறேன்.” என்றார் எம்.ஜி.ஆர்.

இதனையடுத்து அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரன் அவர்களின் இல்லத்திற்கு இரவு பகலாக அலைய வேண்டியிருந்தது. “தமிழ்நாட்டு அரசின் பொறுப்பிலுள்ள நிதி என்பதால், ஒழுங்கான முறையில் செய்ய வேண்டும். உங்களது தமிழர் புனர்வாழ்வு அமைப்பின் வாயிலாக அதிகாரபூர்வமான வேலைத்திட்டம் (project) ஒன்று தயாரித்துத் தாருங்கள். இத் திட்டம் நான்கு கோடி ரூபா வரையிலான செலவீனங்களைக் கொண்டிருக்க வேண்டும்.” என்றார் அமைச்சர். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு மருத்துவமனை நிர்மாணத்திற்கான வேலைத்திட்டத்தைத் தயாரித்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சார்பில் அமைச்சரிடம் கையளித்தேன். இறுதியாக ஒரு அரச செயலகத்தில் வைத்து நான்கு கோடி ரூபாவுக்கான காசோலை எனக்குக் கையளிக்கப்பட்டது. இந்நிதி விவகாரத்தில் அரச அதிகாரிகள் பலர் ஈடுபட்டதால், தமிழ்நாட்டு ஊடகங்களுக்குச் செய்தி கசிந்து விட்டது. மறுநாள் காலை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கிலப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக இவ்விவகாரமும் அம்பலமாகியதும் அது ஒரு அரசியற் பூகம்பத்தைக் கிளப்பியது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு அரசு நிதியுதவி செய்வதாகவும் தமிழக முதலமைச்சர் இலங்கையின் இறைமையை மீறுவதாகவும் ஜனாதிபதி ஜெயவர்த்தனா இந்தியப் பிரதமர் திரு.ரஜீவ் காந்தியிடம் கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தார். ரஜீவ் காந்தி உடனடியாகவே எம்.ஜி.ஆரிடம் தொடர்பு கொண்டு தமது ஆட்சேபத்தைத் தெரிவித்தார். அன்று மாலை தன்னை அவசரமாக சந்திக்குமாறு எம்.ஜி.ஆர் எனக்கு அழைப்பு விடுத்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கவலையோடு நான் முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு முதல்வருடன் அமைச்சர் பண்டுருட்டி இராமச்சந்திரனும் இருந்தார்.

ஆத்திரத்துடன் காணப்பட்டார் எம்.ஜி.ஆர். ஜெயவர்த்தனா ரஜீவிற்கு முறையிட்டதையும் ரஜீவ் தனக்கு ஆட்சேபனை தெரிவித்ததையும் விபரமாகச் சொன்னார். சிங்கள வெறியன் என்றும், ஈழத் தமிழர்களுக்குக் கொடுமை இழைப்பவன் என்றும் முதலில் ஜெயவர்த்தனாவைத் திட்டித் தீர்த்தார். ரஜீவையும் விட்டு வைக்கவில்லை. துணிவில்லாதவர் என்றும் பயந்த பேர்வழி என்றும் ரஜீவிற்கும் திட்டு விழுந்தது. “ஈழத் தமிழர்களுக்கு திரட்டிய நிதியை அந்த மக்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலை இயக்கத்திற்கு கொடுப்பதில் என்ன தவறு? இதனைப் பிரதம மந்திரி புரிந்து கொள்கிறார் இல்லையே.” என்று ஆதங்கப்பட்டார் முதல்வர்.

“அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லை அல்லவா?” என்று கேட்டார்.

“அந்தக் காசோலை என்னிடம் தான் இருக்கிறது” என்றேன். அதனை அமைச்சரிடம் திருப்பிக் கொடுக்கும்படி சொன்னார்.

“நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள். எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி தருகிறேன்.” என்றார். போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் எம்.ஜி.ஆருக்கும் அமைச்சர் பண்டுருட்டிக்கும் நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். வீடு திரும்பியதும், நடந்ததை எல்லாம் பிரபாகரனுக்கு எடுத்துச் சொன்னேன். முதல்வரின் பெருந்தன்மையைப் பாராட்டினார் பிரபாகரன். மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் பாதாளப் பண அறையிலிருந்து நான்கு கோடி ரூபா புலிகளின் கைக்குக் கிட்டியது.

விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் மத்தியில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்கள் கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது. தமிழ் நாட்டில் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் எமது போராளிகள் நல்லொழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பேணிவந்தனர். இவ்விடயத்தில் திரு.பிரபாகரன் மிகவும் கண்டிப்பாக இருந்தார். ஆயினும் தமிழ்நாட்டில் செயற்பட்டு வந்த ஏனைய அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் எவ்வித ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் பேணவில்லை. தமிழ் நாட்டில் இவர்களது குற்றச் செயல்களும், வன்முறைச் சம்பவங்களும், சமூக விரோதச் செயற்பாடுகளும் தலைவிரித்தாடின. இதனால் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் பொதுவாக ஈழப் போராளிகள் மீது வெறுப்புணர்வு வளரத் தொடங்கியது. பல்வேறான ஈழப் போராளி அமைப்புகள் பற்றியும் அவர்கள் மத்தியில் நிலவிய வேறுபாடுகளையும் புரிந்து கொள்ளத் தவறிய தமிழகப் பத்திரிகைகள் எல்லோரையுமே ‘ஈழத்துப் புலிகள்’ என்றும், ‘ஈழத்துத் தீவிரவாதிகள்’ என்றும் பொதுவாகக் கண்டனக் குரல் எழுப்பின. இதனால் எமது அமைப்பிற்குச் சிக்கல் எழுந்தது. பத்திரிகைகள் மட்டுமன்றித் தமிழகக் காவல்துறையினரும் இக் குழப்பத்திற்குள் சிக்கி எமக்கு விரோதமாகத் திரும்பினர். வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து தமிழ் நாட்டில் சட்டமும் ஒழுங்கும் பாதிக்கப்பட்ட பொழுது முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இதுவொரு சவாலாக எழுந்தது.

ஏனைய அமைப்புகளின் வன்முறைச் சம்பவங்கள் தமிழ் நாட்டை ஆட்டிப் படைத்தன. உதாரணமாக 1984 ஆகஸ்ட் மாதம் தமிழீழ இராணுவம் என்ற குழுவின் தலைவர் தம்பாப்பிள்ளை மகேஸ்வரன், சிறீலங்கா எயர்லைன் விமானத்திற்கு குறிவைத்த வெடிகுண்டு, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தவறுதலாக வெடித்ததில் 30 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 50 பேர் வரை படுகாயமடைந்தனர். இந்த வன்முறைச் சம்பவம் தமிழ்நாட்டை மட்டுமன்றி முழு இந்தியாவையுமே உலுப்பிவிட்டது. விடுதலைப் புலிகளைத் தவிர ஏனைய அமைப்புகள் இந்தியாவில் பயிற்சி எடுத்த போராளிகளை உடனடியாகத் தமிழீழக் களத்திற்கு அனுப்ப முடியவில்லை. அதற்கான போரியல் திட்டங்களும் அவர்களிடம் இருக்கவில்லை. அத்துடன் பெருந்தொகையான போராளிகளைப் பராமரிக்க அவர்களிடம் பண பலமும் இருக்கவில்லை. இதனால் சில அமைப்புகளின் கட்டுப்பாடு உடைந்தது. ஒழுங்கீனமும் சீர்கேடும் தலைதூக்கியது. இலக்கின்றி அலைந்த ஈழத்து இளைஞர்கள் சமூக விரோதச் செயல்களில் இறங்கினர். தமிழ்நாட்டுக் கிராமப் புறங்களிலுள்ள உள்ளூர் மக்கள் சிலர் கொல்லப்பட்டனர். வீடுகள் சூறையாடப்பட்டன. 1985 டிசம்பரில் வேதாரணியத்தில் ஆயுதம் தரித்த புளொட் உறுப்பினர்கள் உள்ளூர் விவசாயிகள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் ஒருவர் கொல்லப்பட்டும் பலர் படுகாயமடைந்தனர். எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தது போன்று 1986ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதலாம் திகதி, தீபாவளித் தினத்தன்று சென்னை நகரின் மையத்தில் அமைந்திருக்கும் சூளைமேட்டில் ஒரு வன்முறைச் சம்பவம் நிகழ்ந்தது. இந்த வன்முறைச் சம்பவத்தின் கதாநாயகராக விளங்கியவர் டக்ளஸ் தேவானந்தா. இப்பொழுது சனநாயகவாதியாக வேடம்பூண்டு ஈ.பி.டி.பி இன் தலைவராக விளங்கும் இவர் அப்பொழுது ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் இராணுவப் பிரிவில் பணிபுரிந்தவர். தொடரும்…….

பகிர்ந்துகொள்ள

Leave a Reply