தமிழ்த் தேசியக் கட்சிகள் ஐந்து இணைந்து மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்!

You are currently viewing தமிழ்த் தேசியக் கட்சிகள் ஐந்து இணைந்து மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம்!

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 பிரேரணைக்குப் பின்னரும் அரசாங்கம் தமிழர் தாயகப் பரப்பில் கட்டவிழ்த்துவிட்ட தமிழ் இனத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து விளக்கி தமிழ்த் தேசிய கட்சிகள் கூட்டிணைந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.

அதில் 46/1 பிரேரணைக்குப் பின்னராகத் தமிழர் தாயகத்தில் இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தமிழினத்துக்கு எதிரான விடயங்களான காணி அபகரிப்பு, தொல்லியல் சார்ந்த நடவடிக்கைகள், நினைவேந்தல்களுக்கான தடைகள், பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையிலான கைதுகள், சட்ட நடவடிக்கைகள், தடுத்து வைத்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகங்களில் இராணுவ அதிகாரிகளை நியமித்தல், காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேட வேண்டிய அவசியம் இல்லை என்ற அரசாங்கத்தினுடைய நிலைப்பாடு, பொத்துவில் இருந்து பொலிகண்டி வரையிலான மக்கள் பேரெழுச்சி பயணத்தின் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள், கைதுகள், அண்மையில் அரசினால் அறிவிக்கப்பட்ட அவசரக்கால சட்டத்தினால் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அபாய நிலைகள் என்ற விடயங்களை உள்ளடக்கப்பட்டுள்ளன.

இக்கடிதத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.

இதற்கிடையில் தமிழரசுக் கட்சி தனியாகக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. தமிழரசுக் கட்சி வரைந்த கடிதத்தில் உள்ளடங்கம் தொடர்பில் அதிருப்தி தெரிவித்து அதில் கையெழுத்திட கூட்டமைப்பு எம்.பிக்கள் மற்றும் கட்சிகள் மறுத்துவிட்ட நிலையிலேயே ஏனைய கட்சிகள் இணைந்து தனித்து கடிதம் அனுப்பியுள்ளன.

இம்மாதம் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் முதல் நாளிலேயே இலங்கை விவகாரம் தொடர்பில் மனித உரிமை ஆணையாளரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளார்.

முக்கியமாக ஆதாரங்களைத் திரட்டுவதற்கான அதிகாரத்தை மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்துக்குக் கடந்த கூட்டத் தொடரில் மனித உரிமை பேரவை வழங்கியிருந்தது.

இதற்கான நிதி ஒதுக்கீடு இடம்பெற்று அலுவலர்கள் நியமிக்கப்பட்ட நிலையிலே ஆதாரங்களைத் திரட்டுவதற்கு மனித உரிமை ஆணையம் தயாராகி உள்ளமையைத் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இம்மாதம் ஆரம்பமாகும் ஐ.நா. மனித உரிமைக் பேரவைக் கூட்டத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply