தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வலுக்கிறது எதிர்ப்பு! அரச அதிகாரிகள் எதிர்த்து வாக்களிப்பு!!

You are currently viewing தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வலுக்கிறது எதிர்ப்பு! அரச அதிகாரிகள் எதிர்த்து வாக்களிப்பு!!

இதுவரை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் அது கூட்டமைப்பாகிய பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் வாக்களித்த கல்வி அதிகாரி ஒருவர் இந்த தடவை நாடாளுமன்ற தேர்தலில் அந்த கட்சிக்கு வாக்களிக்காமல் (தமிழ்த் தேசியத்தில் பயணிக்கும்) வேறு கட்சிக்கு வாக்களிக்கப்போவதாக பகிரங்கமாக அறிவித்திருக்கின்றார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தற்போது ‘தமிழ்த்தேசிய அரங்க நீக்கமும் – புலியெதிர்ப்பும்’ என்ற கொள்கையில் பயணிப்பதே தமது மாற்றத்திற்கான முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இது தொடர்பாக வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் அந்த கல்வி அதிகாரி தமது முகநூலில் நேற்று (13) தரவேற்றிய பதிவு வருமாறு,

இந்த தேர்தலுக்காக நான் நாளை வாக்களிக்கவிருக்கிறேன்.

வாக்குரிமை தரப்பட்ட தினத்திலிருந்து நடைபெற்ற தேர்தல்கள் யாவற்றிலும் ஒரு பொதுமைப்பாட்டுடன் (குறிப்பாக ஒரே சின்னத்துக்கு அல்லது அந்த அமைப்பு, கை காட்டிய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு) வாக்களித்து வந்திருந்த பழக்க – வழக்கத்தை நாளைய தினம் மிகச் சொற்பளவிலான மனச் சஞ்சலத்துடன், ஆனால் மிகுந்த மனத்திருப்தியுடன் மாற்றிக் கொள்ளவிருக்கிறேன்!

நம்மில் பெரும்பாலானவர்களை போல எனக்கும் – என் தந்தையே பலவிதங்களிலும் மானசீகமான முதற் கதாநாயகன். வீட்டிலிருந்து எனக்கு அறிவிக்கப்பட்ட அரசியற்கலாச்சாரத்திலும் என் தந்தையாரின் செல்வாக்கு மிகப் பெரும் தாக்கமுடையது.

திராவிடர் கழகத்தின் தமிழக அரசியல் மாற்றங்களினால் மனங்கவரப்பட்ட என் தந்தையாரின் தாய்மாமன் – வீரகேசரி செல்லத்துரை அவர்கள் தனது ஈழஅரசியல் ஆதரவு தளத்தினை தந்தையாரின் அரசியல் நிலைப்பாட்டிற்கு பலம் சேர்த்து சென்றிருந்தார்.

தி.மு.க வின் இலங்கை செயலாளராக பதவியிலிருந்த அந்த பழம்பெரும் ஊடகவியலாளர், ஈழஅரசியலில் தமிழரசின் அறிமுகத்துக்காக அக்கால தலைவர்களினால் மேடைகளில் பகிரங்கமாக புகழப்பட்ட பெருமைக்குரியவர் என தந்தை சொல்லக்கேட்டிருக்கின்றேன்.

பிறகு தமிழ்த் தேசிய கட்டுருவாக்க காலத்தில் ஆயுதப் போராட்ட இலக்குகளை அரசியல் இலக்குகளாக வரிந்து கொண்ட கட்சியாக தந்தையிடமிருந்து எனக்கு அறிவிக்கப்பட்ட – மூன்று தலைமுறை பாரம்பரியமுடைய ஆதரவுத் தளத்தினை அக்கட்சியின் உருவாக்கத்திற்கு பிறகு என் நேரடித் தலைமுறையினரின் விருப்புக்கு மாறாக முதல் முறையாக உடைத்து வெளியேற வேண்டியிருப்பது, எஞ்சியிருக்கும் சொற்ப மனச் சஞ்சலத்திற்கான காரணமாயிருக்கிறது?

ஆனால் அயோக்கியர்களாகிவிட்ட – இனத்தை கருவறுக்க துணிந்து விட்டவர்கள், குடும்பக்கட்சியினராக இருந்த போதும் – மாவீரத் தெய்வர்கள் பின்பற்றிய சத்திய உறுதியின் ஒரு பங்கினையாவது பின்பற்றி இந்த வெகுசன விரோதிகளை தூக்கியெறிவது என்ற முடிவை முழுமையான தற்றுணிபின் அடிப்படையிலேயே கையிலெடுத்தேன்.

நீட்டி முழக்காமல் இந்த நம்பிக்கைத்துரோகிகள் மீதிருக்கும் எனது குற்றச்சாட்டின் சுருக்கம்: ‘தமிழ்த்தேசிய அரங்க நீக்கமும் – புலியெதிர்ப்பும்’

தமிழ்த்தேசிய அரசியல் எதிர்காலத்தின் பேண்தகு நிலைத்திருப்புக்கு உருப்படியாக எதையும் செய்ய முடியாமலும்- இன்னமும் அல்லலுறுகிற ஈழத்தின் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு குறைந்த பட்ச நிவாரணத்தையோ தீர்வையோ மனதளவிலேனும் விரும்பாத, தேட முயற்சிக்காத அரசியல் மிருகர்களிடமிருந்து வெளியேறுவது மற்றும் இவர்களுக்கு வாக்களிக்காமல் தவிர்த்துக் கொள்வது, என்ற நாளைக்கான முடிவை எனது தனிப்பட்ட அனுபவங்களிலிருந்தே ஆரம்பித்தேன்.

2017 ஜனவரியில் கேப்பாபிலவின் பிலக்குடியிருப்பு என்ற சிறு கிராமத்தில் தனித்து நின்று போராடிய சிறு மக்கள் குழு – என்னிடமும் தமது ஓர்மத்தின் ஒரு விதையினையாவது விதைத்திருந்தனர்.

தொடர்ந்து ; கிளிநொச்சி, முல்லைத்தீவு, செம்மலை, மயிலிட்டி, மாவிட்டபுரம், காங்கேசன்துறை, கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், அளம்பில், வெடுக்குநாறிமலை, பாம் குடியிருப்புக்கள், கூழாமுறிப்பு, கன்னியா, வட்டுவாகல், காட்டுப்புலம், திருவடிநிலை, கேப்பாபுலவு என்று பரந்த பயணங்களில் சந்தித்த மக்கள் அவலங்களின் நேரடி அனுபவங்கள் – நண்பர்களோடு இணைந்திருந்த சிறு சிறு முன்னெடுப்புக்களில் கிடைத்த களத்தின் கதைகள், அதே மக்கள் தெரிவு செய்த மக்கள் பிரதிநிதிகள் மீதான கோபத்தினை அதிகரித்திருந்தது.

யாருக்கும் வாக்கிறைஞ்ச முடியாத மட்டுப்பட்ட அரசியலுரிமைகளுடன் என்னால் இயற்றக் கூடிய ஆகக் கூடிய பங்களிப்பு – எனது வாக்கினை ஆயுதமாக்குவது மட்டுமே!
மக்களுக்காக எதையுமே செய்ய முயற்சிக்காதவர்கள், வெகுசன விரோதத்திலிருந்து ஏதேனும் ஒன்றையாவது சூடு போட்டுக் கொள்ள விரும்பியே அவர்களுக்கு வாக்களிப்பதிலிருந்து விலகிக் கொள்கின்றேன்.

என்னுடைய ஒற்றை வாக்குச்சீட்டு, இவர்களை தண்டிக்கும் என்ற நம்பிக்கையில்லாதபோதும் நாளை வாக்களிப்பின் பிறகு மனநிம்மதியான உறக்கத்திற்கு செல்ல வேண்டின், இனம் சார்ந்த மக்களின் மனச்சாட்சி என் தலையணையை உறுத்தக் கூடாதென்கிற அமைதிக்காக இதை எனக்குள் அனுமதிக்கின்றேன்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உங்களுக்கும் சொல்லியிருக்கிறேன்.

முடியட்டும்! விடியட்டும் !!

பகிர்ந்துகொள்ள