
சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் தீவிர பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தமிழர் தாயகம் எங்கும் தேர்தல் களத்தில் குதித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இம்முறை மக்கள் ஆதரவு அதிகமாக உள்ளதை உணர முடிகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அனுசரணையில் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த 2005 ஆம் ஆண்டு தேர்தலில் குதித்தபோது அதில் தமிழீழ விடுலைப் புலிகளின் பிரதிநிதிகளாக புலிகளால் நியமிக்கப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் போன்றோரை யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஓரம்கட்டத் தொடங்கியது.

இதனால் அவர்கள் பிரிந்து சென்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கி 2010 ஆம் ஆண்டு தேர்தல் களத்தில் குதித்தனர். எனினும் அப்போது எந்தவொரு ஆசனத்தையும் பெற முடியவில்லை. தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டனர். அதிலும் எந்தவொரு ஆசனத்தையும் பெற முடியவில்லை.

எனினும், 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வடக்கு – கிழக்கில் 81 உறுப்பினர்களை வென்றெடுத்தனர். இது அக்கட்சிக்கான மக்கள் அங்கீகாரமாக அமைந்தது.

இப்போது 2020 ஆம் ஆண்டு, எதிர்வரும் ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் மக்களின் அங்கீகாரம் கிடைக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. தாயகம் எங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் தொண்டர்கள் தீவிர களப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.

முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மற்றும் முக்கிய உறுப்பினர்களான விஸ்வலிங்கம் மணிவண்ணன், கனகரத்தினம் சுகாஸ், திருமதி வாசுகி சுதாகரன், காண்டீபன், தவபாலன் போன்ற பல உறுப்பினர்களும் நேரடியாக களத்திற்கு சென்று மக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிங்கள ஆதரவுப் போக்கினால் மனம் உடைந்து போயுள்ள தமிழ் மக்கள் தமிழீழ தேசியத் தலைவரின் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகளின் சிந்தனைகளைத் தாங்கி நிற்கின்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆதரிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் முன்னணிக்கு ஆகக் குறைந்தது மூன்று ஆசனங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வதேச ரீதியாக தமிழர்களின் விடுதலைக்கு குரல்கொடுக்கக்கூடிய அங்கீகாரம் இதன் மூலம் முன்னணிக்கு கிடைக்கும் என்பது தமிழ்த் தேசிய செயற்பாட்டார்களின் நம்பிக்கையாக உள்ளது.