தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் பணிபுரிபவர்களில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, அங்கு பணிபுரியும் மற்றவர்களையும் பயத்தில் ஆழ்த்தியுள்ளது.
தலைமைச் செயலகத்தில் மொத்தமாக சுமார் 6 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரியும் சூழலில் தற்போது கொரோனா தொற்று காரணமாக 50% அதாவது 3000 பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரு வாரங்களில் மட்டும் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் 8 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மற்ற பணியாளர்களிடையே மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற காலங்களில் சமூக இடைவெளியின்றி பணியாற்றுவது நோய் தொற்றை பரப்பும் என்பதால் 50% பணியாளர்களை 33% பணியாளர்களாக குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
அதே போல மத்திய அரசு அனுமதித்துள்ளதை போல 55 வயதை கடந்த நலமற்ற பணியாளர்கள், கருவுற்ற தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், ஆகியோர்களுக்கு பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு தலைமைச் செயலக பணியாளர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.