தமிழ்ப்புத்தாண்டே வருக..
செக்க சிவந்த வானம்
செங்கம்பளம் விரிக்க!
திக்கெட்டும் திசைகள்
தங்கமாய் மிளிர!
கத்தும் கடலலைகள்
மல்லிகையாய் மலர!
சுற்றும் காற்று
சுகமாய் தொட்டணைக்க!
சிற்றிடை மேனி அழகாய்
நெற்கதிர் மணிகள்
நடனமாடி மகிழ!
பட்சிகள் பாட்டிசைத்து
பரவசமூட்ட!
பகலவன் மெல்லென
தன் கரங்களை நீட்ட!
புத்தாடை எழில் கொஞ்சி
தமிழ் பண்பாட்டை மீட்ட!
வெடியோசைகள் இடியும் மின்னலுமாய் துலங்க!
சூரியப்பொங்கல் புன்னகை சிந்தி புது மணம் நிரப்ப!
தமிழர் புத்தாண்டு
பிறந்ததம்மா!
தமிழ் மனங்களெல்லாம்
நிறைந்தம்மா!
மன இருளில் தீ கொழுத்தி!
இன விடியலில் ஒளியேற்றி!
தன் மான உணர்வுகளை
பறை தட்டி!
மண் மானம் காத்திட உணர்வுகளை ஊட்டி!
விண்ணின் மலர்வாய்
புதுவிடியல் புலரட்டும்!
நான் நீயெனும் பாகுபாடு கலைந்து
தேன் சுவையாய் நா சுழல
கவரி மான்களின் கனவு
மெய்ப்பட
முகாரி இசைத்தவனின்
அகம் கிழிய
எல்லா மூலதனங்களையும் ஒன்றாக்கி
வல்லவர் வழிநின்று
வையக வாசல் திறந்திட
தாள் நிலை அகற்றி
ஓர்நிலையில் ஒலிக்கட்டும் உரிமைக்குரல்!
தை ஒன்றில் நெஞ்சில்
தைக்கட்டும் தமிழர் நிலை!
விதை ஒன்றின் கனவை
விதைக்கட்டும்
மூளை!
பிறமொழியில்
மறைமலையின்
அறைகூவல்
உறைநிலையாய்
உறங்காது
அழகு மொழிக்கான
புத்தாண்டை
அறத்தோடு
அடையாளத்தை
வரவழைப்போம்!
மொழி அழிப்பானின்
குழியகழியில் கூனி வீழாது
இழிநிலையில் இன்னும்
பழிச்சொல்லை வாங்காது
தாய்மொழியின் ஆண்டினை
கூர்மையோடு
குதூகலிப்போம்!
வாழிய வாழிய எங்கள்
தமிழ் மொழி வாழிய
வையகம் எங்கும்
தாள் நீங்கி வாழிய!
✍️தூயவன்