தமிழர்களுக்கான தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு, அனைத்து தமிழ்த்தரப்புக்களும் ஒன்றாக வரவேண்டுமென, ஶ்ரீலங்கா அதிபர் திரு. ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தமை தொடர்பாக, “ரணிலுக்கு தமிழ்க்கட்சிகள் எவ்வாறு பதிலளிக்க வேண்டும்” என்ற தலைப்பில், ஈழாநாடு பத்திரிகையின் 06.07.23 அன்றைய பதிப்பில் ஒரு கட்டுரை வரைந்திருந்தார், யதீந்திரா.
கோவில்களுக்கு வேள்விக்கிடாய்கள் நேர்ந்து விடப்படுவது போல, 13 ஆவது திருத்தத்தை எப்படியாவது தமிழ் மக்கள் ஏற்கும்படி செய்யவேண்டும் என்கிற கைங்கரியத்தில் குத்தி முறிவதற்காக பிராந்திய தரப்பால் தேர்ந்து, நேர்ந்து விடப்பட்டவர்களில் யதீந்திராவும் ஒருவரென்பது, யதீந்திராவின் கடந்தகால எழுத்துகளை தொடர்ச்சியாக அவதானித்து வருபவர்களுக்கு நன்றாகப்புரியும்.
எனவே, மேற்கூறப்பட்ட அவரது கட்டுரையில் 13 ஐ விட்டால் தமிழர்களுக்கு வேறேதும் கிடைக்க வாய்ப்பில்லை என்ற கடைந்த அயோக்கியத்தனத்தையே திரும்பத்திரும்ப கடைந்திருக்கிறார். அதில் ஆச்சரிமும் இல்லை; அவருக்கு கொடுக்கப்பட்ட “அஸைன்மென்ட்” அதுதானே…
தீர்வுக்கான பேச்சு வார்த்தைக்கு ஒன்றாக அனைத்து தமிழ்த்தரப்புகளும் போவது என்பது சாத்தியமில்லை என்பது யதீந்திராவுக்கும் புரியாமலில்லை. ஏனெனில், 75 ஆண்டுகாலங்களுக்கும் மேலாக புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சனைக்கு நிலையான தீர்வு காணப்படும்போது, இனப்பிரச்சனையின் நீட்சியான இனவழிப்பு / காணாமலாக்கப்பட்டமை மற்றும் உயிரிழப்புக்களுக்கு பொறுப்புக்கூறலுடன் கூடிய நியாயம் வழங்கப்படவேண்டும் என்பன போன்ற முக்கிய விடயங்களை சுலபமாக ஒதுக்கிவிட்டு கடந்து செல்ல முடியாது.
இவை முறையாக, சரியாக நடக்கவேண்டுமெனில், ஶ்ரீலங்கா ஆளுந்தரப்பு, நம்பிக்கையான சமிக்ஞைகளை தரவேண்டும். தந்தை செல்வா காலத்திலிருந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு காலம் வரை, கடந்தகால வரலாறுகள் தந்த அனுபவங்களின் அடிப்படையிலேயே, இந்த நம்பிக்கை சமிக்ஞைகள் அவசியமாகின்றன.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் நீட்சியான 13 ஆவது திருத்தச்சட்டம், அது ஒருதலைப்பட்சமாக உருவாக்கப்பட்ட 1987 /1988 ஆம் ஆண்டுகாலப்பகுதியிலேயே ஒட்டுமொத்த தமிழ் மக்களாலும், தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாகவிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளாலும் அன்றே நிராகரிக்கப்பட்டிருந்த வரலாறு இன்றும் தமிழ்மக்களிடையே உயிர்ப்புடனேயே இருக்கிறது.
13 ஆவது திருத்த சட்டத்தை வைத்து, தமிழ்மக்களின் ஆகக் குறைந்த அரசியல் தீர்வுக்காகவேனும் ஒரு துரும்பைக்கூட நகர்த்த முடியாது என்ற பட்டறிவின் தீர்க்கதரிசனம், 1988 இல், இதே 13 ஆவது திருத்தத்தின் முறைப்படி எதையும் சாதிக்க முடியாது என்று, ஶ்ரீலங்கா – இந்திய பேரினவாத சக்திகளால் வடக்கு – கிழக்கு முதலமைச்சராக்கப்பட்ட திரு.வரதராஜப்பெருமாளே தன்னிலைவிளக்கம் கொடுத்துவிட்டு, பதவி துறந்து இந்தியாவுக்கு தப்பிச்சென்ற வரலாறு முன்மொழிய, தொடர்ச்சியாக 5 வருடங்கள் வடமாகாண முதலமைச்சராக பதவி சுகத்தை அனுபவித்து ஓய்ந்த திரு. விக்னேஸ்வரன் வழிமொழிய, இன்றும் நிலையாக தொடர்கிறது.
ஆக, தமிழ்மக்களும், புலிகளும் நிராகரித்த 13 ஆவது திருத்தச்சட்டம் என்பதை பேசு பொருளாகவே எடுக்கவேண்டியதில்லை; மாறாக, சமஷ்டி முறையிலான, திரும்பப்பெறப்பட முடியாத, நியாயமான அதிகாரப்பகிர்வின் அடிப்படையிலேயே பேச்சுக்கள் நடைபெற வேண்டும் என்பதே நியாயமானதும், சரியானதுமாக இருக்க முடியும். இதனடிப்படையில் முன்னெடுக்கப்படும் பேச்சுக்களே பெறுமானமுள்ளவையாக இருக்க முடியும்; இதுவே தமிழர் தரப்புக்களில், 13 ஐ நிராகரிக்கும் ஒரே தரப்பான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடாகவும் இருக்கிறது.
தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும், கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது, சமஷ்டிக்கு வாக்களியுங்கள் என்றுதான் மக்களிடம் வாக்கு சேகரித்தது. ஆனாலும், இடைநடுவில் சமஷ்டியை மறந்து, ஒற்றையாட்சி, சிங்களம் முதன்மை மொழி, பெளத்தமே முதன்மை மதம் என்றெல்லாம் திசைமாறியது. இடைக்கிடை 13 இன் மீது தீராக்காதல் என்றது. கூட்டமைப்பிலிருந்து பிரிந்த தரப்புக்களும், விக்னேஸ்வரன் – மணி அணியினரும், 13 தான் வேண்டுமென்று அணிவகுப்பதோடு, இல்லாவிட்டால் தீக்குளிப்போம் என்கிற அளவுக்கு நகர்கின்றனர்.
இந்நிலையில், கூட்டமைப்பும், முன்னணியும், ஏனைய உதிரிகளும் ஒன்றாக பேச்சுவார்த்தைகளுக்கு போவது என்பது, கருத்தியல் அடிப்படையொன்று இல்லாமல் சாத்தியாமாகாதென்ற யதார்த்தத்தை சீர்தூக்கிப்பார்க்க யதீந்திராவின் இந்திய விசுவாசம் இடங்கொடுக்க மறுக்கிறது போலும்.
தமிழ்மக்களும், புலிகளும் அடியோடு நிராகரித்த 13 இனடிப்படையில் பேசவே முடியாது என்கிறது முன்னணி. 13 இற்கு அப்பால் போகவேண்டும் என்கிறார், கூட்டமைப்பின் பேச்சாளர் திரு. சுமந்திரன். 13 மட்டுமே தீர்வு என்கின்றன ஏனைய உதிரிகள். இந்த நிலையில், தமிழ்மக்களும், புலிகளும் அடியோடு நிராகரித்த 13 ஐ பெறுவதற்கு பேசவேண்டுமா அல்லது, தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய, திரும்பப்பெறப்பட முடியாத நியாயமான அதிகாரப்பகிர்வுடன் கூடிய சமஷ்டி அடிப்படையிலான தீர்வு பற்றி பேச வேண்டுமா என்பதில் ஒரு தெளிவான கருத்தியல் ஒற்றுமை வேண்டும்.
அந்த கருத்தியல் ஒற்றுமை, தமிழ்மக்களும், புலிகளும் அடியோடு நிராகரித்த 13 இன் அடிப்படையில் உருவாகாது; அதற்கு தமிழ்மக்களின் ஒப்புதல் எக்காலத்திலும் இருக்காது என்கிற உண்மை உறைப்பதால்தான், 13 இற்கு ஆதரவாக பரப்புரைகளை மேற்கொள்ளும் “வேலைத்திட்டங்கள்” வழங்கப்பட்டு களமிறக்கிவிடப்படும் யதீந்திரா போன்ற ஆய்வாளர்கள் / பத்தி எழுத்தாளர்கள் / கருத்துரையாளர்கள் என தம்மை அழைத்துக்கொள்வோரின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
கடந்தவாரம், சக்தி தொலைக்காட்சியின் “மின்னல்” நிகழ்ச்சியில் கலந்துகொண்ட, கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திரு. சுமந்திரன், முக்கியமான விடயமொன்றை ஒப்புக்கொண்டிருந்தார்.
கூட்டமைப்பு உட்பட, 6 தமிழ்த்தரப்புக்கள் கூட்டாக இணைந்து, கடந்த வருடம் இந்திய பிரதமருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில், 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஶ்ரீலங்கா அரசுக்கு அழுத்தங்களை கொடுக்க வேண்டுமென்ற வேண்டுகோள் முன்வைக்கப்பட்டிருந்தது. இக்கடிதத்தில் கூட்டமைப்பின் தலைவரான திரு. சம்பந்தன் மற்றும் தமிழரசுக்கட்சியின் தலைவரான திரு. மாவை சேனாதிராஜா உள்ளிட்டோரும் கையொப்பமிட்டிருந்ததாகவும், இதில் தனக்கு உடன்பாடில்லை எனவும் திரு. சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
கூடவே, இக்கடிதம் அனுப்பப்பட்டதால், மஹிந்த ராஜபக்ஷ தனக்கு உறுதியளி்த்த “13 இற்கும் அப்பால் செல்லுதல்” (13 இற்கும் அப்பால் செல்லுதல் என்பது சமஷ்டியாகவும் இருக்கலாமென திரு. சுமந்திரன் முன்னர் சொன்னதாக ஞாபகம்…) என்பது அடிபட்டுப்போனதோடு, 13 ஐ தவிர்த்து வேறெதையும் இந்தியாவோடு பேசமுடியாத ஆபத்தான நிலையை கூட்டமைப்பு உட்பட, தமிழ்த்தரப்புக்களே உண்டாக்கியிருக்கின்றன என ஒப்புக்கொண்டுள்ளதையும் இவ்விடத்தில் குறிப்பிட வேண்டும்.
திரு. சுமந்திரனின் இவ்வொப்புதல் வாக்குமூலம், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய தமிழர் தரப்புக்கள், தாமாகவே போய் “13” என்னும் பொறியில் மாட்டியிருக்கின்றன என்பதையே வழிமொழிகிறது எனக்கொள்ளலாம். இந்த நிலை வந்துவிடக்கூடாது என்றுதான் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடர்ச்சியான எச்சரிக்கைகளை விடுத்து வந்திருந்ததோடு, சமஷ்டி என்பதன் அடிப்படையில், திரும்பப்பெறப்பட முடியாத நியாயமான அதிகாரப்பகிர்வுகள் உள்ளடக்கியதாக தமிழர்களுக்கான தீர்வு அமையவேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தது. இதுவே, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்மக்கள் வாக்களித்ததன் அடிப்படையாகவும் அமைந்திருந்தது. அதனால், மேற்படி அடிப்படையில் அமையாத எவ்விதமான பேச்சுவார்த்தைகளிலும் முன்னணி கலந்துகொள்ளாமல் தவிர்த்து வந்திருந்தது.
ஆனாலும், மஹிந்த, மைத்திரி, கோட்டாபய, ரணில் என்று, யார் கூப்பிட்டாலும் ஓடிப்போய் முன்னால் அமர்ந்துவிட்டு, “நம்பிப்போனோம்; ஏமாற்றிவிட்டார்கள்” என்று ஒப்பாரி வைக்கிறது கூட்டமைப்பு. ஆளும்தரப்பால் நியாயமான தீர்வொன்றை தரமுடியாதென நன்கு தெரிந்தாலும், ஆளுந்தரப்பு அழைக்கும்போது போகாமல் விடும் நிலையில், அவர்கள் அழைக்கும்போது நீங்கள் போகவில்லையே என கேள்வி வரக்கூடாது என்பதாலேயே, ஆளுந்தரப்பு அழைக்கும்போதெல்லாம் நம்பிக்கை இல்லாமலேயே போய், வழமை போல வெறுங்கையோடு திரும்பி வருகிறோம் எனச்சொல்கிறார், கூட்டமைப்பின் பேச்சாளர் திரு. சுமந்திரன்.
“ரணிலுக்கு தமிழ்க்கட்சிகள் எவ்வாறு பதிலளிக்கவேண்டும்” என்ற தலைப்பில் யதீந்தி்ரா ஓட்டிய பிலிம்ஸின் இறுதிக்காட்சி கீழ்வருமாறு அமைகிறது.
“13வது திருத்தச்சட்டத்தை அமுல்ப்படுத்தும் விடயத்தில் நாம் உறுதியான நிலைப்பாட்டை கொண்டிருக்கிறோம். பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்தின் போது சுட்டிக்காட்டிய, ஒத்துழைப்புடன் கூடிய சமஷ்டிதான் எங்களின் நிலைப்பாடு. எனினும், 13வது திருத்தச் சட்டதை முழுமையாக அமுல்படுத்துவதையே இன்றைய சூழலில் ஒரேயொரு சாத்தியமான தீர்வாக நாங்கள் கருதுகின்றோம். இதற்காக இந்தியாவின் ஆதரவை வலுவாக கோருவதுடன், ரணில் விக்கிரமசிங்க கூறியது போன்று, 13வது திருத்தச்சட்டத்தை அவர் முழுமையாக அமுல்ப்படுத்த வேண்டும்.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவான, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தும் விடயத்தில், இந்தியா ஒரு மூன்றாம்தரப்பு மேற்பார்வையாளராக செயலாற்ற வேண்டும். இந்தியா பங்குபற்றும் மூன்றாம் தரப்பொன்றே இலங்கைக்கு பயன்படும். வேறு எந்த நாடுகளது பங்களிப்பும் இந்த விடயத்தில் பயன்படாது. இதனையே தமிழ் மக்கள் கோருகின்றார்கள்.
இதுவே கட்சிகளின் ஒன்றுபட்ட உறுதியான நிலைப்பாடாகும். மோடிக்கு எழுதவுள்ள கடிதத்தில் இந்த விடயங்களை குறிப்பிட வேண்டும். தமிழ் கட்சிகள் தொடர்ந்தும் மதில் மேல் பூனை நிலைப்பாட்டை முன் வைப்பதன் மூலம் இந்தியாவின் ஆதரவை கோர முடியாது. தமிழ் கட்சிகளை ஒன்றாக வாருங்கள் என்னும் ரணிலின் அழைப்பிற்கு, இவ்வாறுதான் தமிழ் கட்சிகள் பதிலளிக்க வேண்டும்”
இதுவே யதீந்திரா ஓட்டிய பிலிம்ஸின் கிளைமாக்ஸ் காட்சி…
ஆக, தமிழ்மக்களும், புலிகளும் அடியோடு நிராகரித்த 13 ஐ மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும், சமஷ்டிக்கு வாக்களியுங்கள் என கோரப்பட்டதற்கு அமைவாக மக்கள் சமஷ்டிக்கு வழங்கிய ஆணைக்கு மாறாக, 13 ஐ ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் வகுப்பெடுக்க முனையும் யதீந்திரா, 1987 / 1988 இலேயே 13 நிராகரிக்கப்பட்டது தவறென்று நிறுவவும் முனைகிறார் எனவும் கொள்ள முடியும். அப்படியாயின், யதீந்திராவுக்கு புரிந்த, 13 இலுள்ள நன்மைகளை மக்களும், புலிகளும் சரியாக புரிந்துகொண்டு அதை அப்போதே ஏற்றுக்கொள்ளாமல் தவறிழைத்துவிட்டார்கள் என, மக்கள் மீதும், புலிகள் மீதும் குற்றம் சாட்டுகிறார் என்றே கொள்ள முடியும்.
ஏனெனில், தமிழ்மக்களும், புலிகளும் அடியோடு நிராகரித்த 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள வேண்டுமென எழுதித்தள்ளும் யதீந்திரா, மாறாக, சமஷ்டி அடிப்படையிலான, எக்காலத்திலும் திரும்பப்பெற முடியாத, தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளும் நியாயமான அதிகாரப்பகிர்வோடு கூடிய தீர்வொன்றுக்கான பேச்சுக்களே வேண்டுமெனவும், அதற்கு இந்திய ஒத்துழைப்பு வேண்டுமென்ற கோரிக்கையோடு அனைத்து தமிழர் தரப்புக்களும் ஒன்றிணைய வேண்டுமென வாய்த்தவறியும் சொல்ல தயாராக இல்லை.
தவிரவும், மூன்றாந்தரப்பாக இந்தியா மட்டுமே இருக்க வேண்டுமென்றும், வேறெந்த நாடுகளும் இடையில் வரக்கூடாதென்றும் யதீந்திரா சன்னதமாடுவதும் எதற்காக என்ற கேள்வியும் எழாமலில்லை. இந்தியா தவிர்த்து வேறெந்த உலகநாடாவது மூன்றாந்தரப்பாக வருகில், உலகநாடுகளில் நடைமுறையிலிருக்கும் அதிகாரப்பகிர்வுகள் பற்றி பேசப்படும் வாய்ப்புக்கள் எழுந்தால், அது இந்திய நலன்களுக்கு பாதிப்பாக அமையலாமென்ற பயம் இந்தியாவுக்கு இருப்பதை விட, யதீந்திராவுக்கு நிறையவே இருக்கிறது.
தமிழர்களுக்கான நியாயமான தீர்வொன்றுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பை யாரும் என்றும் நிராகரிக்கவில்லை. புலிகள் காலத்திலும் சரி, அதற்கு பிற்பட்ட காலத்திலும் சரி, யாரும் இதனை மறுக்கவுமில்லை. இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம்; ஆனால், தமிழர்களுக்கு எது தீர்வாக இருக்கமுடியும் என்பதை இந்தியா தீர்மானிக்க முடியாது என்பதில்தான் முரண்பாடு உள்ளது. இதை, தமிழீழ விடுதலைப்புலிகளும் சரி, முன்னணியும் சரி பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவாகவே சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், மக்களுக்கும் இருந்த / இருக்கும் இந்த தெளிவோடு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி விட்டுக்கொடுப்பில்லாத உறுதியோடு பயணிப்பதையே, முன்னணியின் இந்திய எதிர்ப்பு என முன்னிலைப்படுத்துகிறார் யதீந்திரா. எமக்கான தீர்வு எதுவென்பதை இந்தியா தீர்மானிக்க முடியாது என்பது, இந்திய எதிர்ப்பாகாது என்பதில் யதீந்திராவுக்கு குழப்பங்கள் இருக்கலாம்; ஆனால், மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். நியாயமான தீர்வுக்கு இந்தியா ஒத்திசைவாக இருப்பதை என்றுமே வரவேற்கும் தமிழ் மக்கள், தீர்வு எதுவென முடிவு செய்யும் உரிமை தங்கள் கைகளிலேயே இருக்கிறது என்பதிலும் உறுதியாகவே இருக்கிறார்கள் என்பதை யதீந்திரா புரிந்துகொள்ள வேண்டும்.
ஊடகம் என்பது, மிகப்பெரிய பலம் வாய்ந்தது. தமிழீழ விடுதலைப்போராட்டம் முனைப்பு பெற்றிருந்த காலப்பகுதியில் தமிழ்த்தேசிய ஊடகங்களின் பங்கு எவ்வாறு இருந்தது என்பதை, போராட்டமே வாழ்வியலாக வரித்துக்கொண்டு, களத்திலே வாழ்ந்த மக்களுக்கு நன்கு தெரியும். எக்காலத்திலும் தமிழ்மக்களது உரிமைகளை விட்டுக்கொடுக்காமல், எமக்கான தீர்வை நாங்கள்தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருப்பற்கு தமிழ்த்தேசிய ஊடகங்கள் தலைசிறந்த வழிகாட்டிகளாக பங்காற்றியிருந்தன.
எனினும், துரதிர்ஷ்டவசமாக 2009 இனவழிப்போடு தமிழ்மக்களின் ஆயுதமுனையிலான உரிமைப்போராட்டம் மௌனித்துக்கொண்டதன் பின்னர், ஸ்ரீலங்கா – இந்திய அதிகார வர்க்கங்களின் வேலைத்திட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்ட ஊடகங்களும், புல்லுருவிகளும், இந்த அதிகார வர்க்கங்களுக்கான ஏவல்களாக மாறியுள்ளதோடு, சொந்த மக்களை ஒற்றையாட்சிக்குள் முடக்கி, இலங்கைத்தீவுக்குள் இரண்டாந்தர குடிமக்களாக்கி, அடிமைத்தளையில் சிக்கவைக்கும் வேலைத்திட்டத்துக்கு தெரிந்தே துணை போவதை அவதானித்து, இவ்வாறான தரப்புக்களை புறக்கணித்தும், நிராகரித்தும் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என்பதே எமது வேண்டுதலாக இருக்கிறது.
குகன் யோகராஜா
06.07.2023
எமது இனத்தின் உரிமயை அடகு வைத்து அதிகாரவர்கங்களுக்கு அடிவருடி வேலை பார்க்கும் இந்த கும்பல்களை புறந்தள்ளி தற்போதுள்ள ஒரேயொரு சக்தியான த தே ம முன்னணியை அனைத்து தமிழ்மக்களும் ஒன்றாக இணைந்து அவர்களுக்கு பலம் சேர்ப்பதே நமது கடமை.