காசா மீது தரைப்படை தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையிலான போர் தாக்குதல் கடந்த 7ம் திகதி தொடங்கி 3வது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் அமைப்பினரை முழுவதுமாக அழிக்கும் வரை ஓய மாட்டோம் என சூளுரைத்து காசாவை இஸ்ரேல் நாசமாக்கி வருகிறது, இதற்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஹமாஸ் படையை முழுவதுமாக அழிப்பதற்காக காசா மீது தரைப்படைத் தாக்குதலை நடத்த தயாராகி வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், இஸ்ரேல் தன்னுடைய இருப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
தேசத்தை காப்பாற்றுவதே இஸ்ரேலின் முதல் இலக்கு, அதன்பின் ஹமாஸை அழிப்பதும், பிணைக் கைதிகளை பத்திரமாக மீட்பதுமே இஸ்ரேலின் இரண்டாவது முக்கிய நோக்கம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தற்போது வரையிலான போர் தாக்குதலில் இதுவரை ஆயிரக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது ஆரம்ப கட்டம் மட்டுமே என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஹமாஸ் சமீபத்தில் தெரிவித்துள்ள தகவலில், காசா நகர் மீது இஸ்ரேல் நடத்திய ஷெல் தாக்குதலில் 50 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இதே காரணத்தை குறிப்பிட்டு 21 பிணைக் கைதிகள் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.