திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் தனசிங் (வயது 60). இவர் காங்கிரஸ் கட்சியின் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வந்தார். தொழிலதிபரான ஜெயக்குமார் தனசிங் கடந்த 2 ஆம் தேதி (02.05.2024) வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அதனைத் தொடர்ந்து அவரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எனப் பலரும் பல இடங்களிலும் தேடியும் ஜெயக்குமார் கிடைக்கவில்லை. இதையடுத்து அவருடைய மகன் கருணையா ஜப்ரின் (வயது 28) உவரி காவல் துறையில் இது தொடர்பாக கடந்த 3 ஆம் தேதி (03.05.2024) புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், காணாமல் போன ஜெயக்குமாரை தீவிரமாக தேடி வந்தனர். காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் மாயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இத்தகைய சூழலில் ஜெயக்குமார் கரைச்சுத்து புதூரில் உள்ள வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உடல் பாதி எரிந்த நிலையில் நேற்று முன்தினம் (04.05.2024) சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த 3 தனிப்படைகள் அமைத்து திருநெல்வேலி எஸ்.பி. சிலம்பரசன் உத்தரவிட்டிருந்தார். அத்தோடு ஜெயக்குமார் தனசிங் உடல் மீட்கப்பட்ட இடத்தில் எஸ்.பி. சிலம்பரசன் நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் தனசிங் தனது மருமகனுக்கு கைப்பட கடந்த 27 ஆம் தேதி எழுதிய கடிதம் ஒன்றும் மற்றொரு கடிதம் என இரு கடிதங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மருமகனுக்கு எழுதிய அந்தக் கடிதத்தில் ‘அன்புள்ள மருமகனுக்கு’ எனக் குறிப்பிட்டு, “நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியனிடம் ரூ.5 லட்சம் கொடுத்துவிட்டு. அதற்கு ஈடாக கொடுக்கப்பட்ட காசோலையைத் திரும்பப் பெற வேண்டும். இடிந்தக்கரையை சேர்ந்தவருக்கு ரூ.10 லட்சம் திரும்ப கொடுக்க வேண்டும். தனது பிரச்சனையை மனதில் வைத்து கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை யாரும் பழிவாங்க வேண்டாம். சட்டம் தன் கடமையைச் செய்யும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது தற்கொலையா அல்லது கொலையா என பல்வேறு கேள்விகள் இந்தச் சம்பவத்தில் எழுந்திருந்த நிலையில் ‘இது கொலை தான்’ என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு சந்தேகங்களை காவல்துறை கையில் வைத்துள்ளது. காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் செல்போன் சிக்னல் கடைசியாக தென்பட்ட குட்டம் பகுதிக்கு சென்றுள்ளதும், அதற்கான சிசிடிசி வீடியோவும் கிடைத்துள்ளது. கை, கால்கள் கட்டப்பட்ட ஒருவர் தானாக குப்புற விழ வாய்ப்பில்லை எனும் முடிவுக்கு வந்துள்ள காவல்துறையினர், தற்கொலைக்கு வாய்ப்பில்லை என்ற கோணத்தில் விசாரணையை தற்பொழுது தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதற்காக உயிரிழந்த ஜெயக்குமாரின் உயரம், எடையை கொண்ட நபரை அழைத்து வந்து இரும்பு கம்பியால் கை கால்களை கட்டி குப்புற விழ சொல்லி காவல்துறை சோதனை செய்துள்ளது. அதுபோல ஜெயக்குமார் இறந்து கிடந்த இடத்தில் வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு கிடந்தன ஆனால் அவருடைய செல்போன் கிடைக்கப் பெறவில்லை. இவை காங்கிரஸ் நிர்வாகியின் மரணம் கொலை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போலீசாரின் விசாரணையை நகர்த்தி வருகிறது.
இந்தநிலையில் அவருடைய மரணம் தொடர்பான இந்த வழக்கில் 30 பேருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அவரை சார்ந்த கட்சி நிர்வாகிகள், வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள், தொழிலதிபர்கள், நண்பர்கள் என மொத்தம் 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயக்குமார் எழுதியதாக கூறப்படும் கடிதத்தில் உள்ளவர்களிடமும் நேரில் சென்று தனிப்படை விசாரணை நடத்தி வருகிறது.