புதிய சிறீலங்கா ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு தொடர்பில் கூட்டமைப்பு எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்று பலர் ஊகங்களை வெளிப்படுத்தியிருந்தாலும் இது தொடர்பில் அவர்களுக்கு பலர் ஆலோசனைகளை வழங்கியிருந்தனர். இருந்தும் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் அரசியற்தெளிவின்மை காரணமாக, சுமந்திரன், சாணக்கியனின் சொல்லுக்குத் தலையாட்டும் கோயில் மாடுகள் போன்றவர்கள் என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. தென்னிலங்கையின் அதிகார போட்டியிலிருந்து தமிழ்மக்களும் தமிழ் அரசியல்வாதிகளும் ஒதுக்கியிருக்க வேண்டியது தான் அரசியற் சாணக்கியம் என்பதை பலர் கூறியிருந்தும் கோமாளிகளாக தொடர்ந்தும் பயணிக்க முடிவெடுத்தமை ,இவர்கள் இனியும் தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக இருக்கத் தகுதியில்லாதவர்கள் என்பதை தெளிவாக உணர்த்துகின்றது.
பல ஆய்வாளர்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுத்துரைத்தும் கூட்டமைப்பினர் கருத்தில் கொள்ளவில்லை. சஜித் விலகிய பின்னர், டளஸ் அளகப்பெருமவை ஆதரித்து சனாதிபதியாக்கும் முட்டாள்தனமான முடிவை எடுத்த போதும், அவர்களின் தவறை சுட்டிக்காட்டி விலகியிருக்குமாறு பலர் அறிவுறுத்தியிருந்தும் வழமைபோல் தனக்கு எல்லாம் தெரியுமென்னும் வரட்டுத்தனத்தினடிப்படையிலேயே சம்பந்தன் தனது முடிவுகளை எடுத்திருந்தார்.
சம்பந்தன் எப்போதுமே தமிழினத்தின் நலன்களை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத்ததில்லை. எனினும் திருகோணமலை வாக்காளர்களின் அறியாமையானது, அவரை காப்பாற்றி வந்திருக்கின்றது.
வழமைபோல், இம்முறையும், இந்தியா ஆலோசனை வழங்கியிருப்பதாக ஒரு பொய்யான கதையை சம்பந்தன் கூறியிருந்தார். இறுதியில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளால் வெற்றிபெற்றிருக்கின்றார். இதனை முன் கூட்டியே மதிப்பிட்டுத்தான், நடுநிலை வகிக்குமாறு அனைவராலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. காலத்துக்குக் காலம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இப்படியான முட்டாள்தனமான முடிவையே எடுத்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே .அதற்கு பக்கபலமாக சுமந்திரன் இருந்தார். அன்று ஆதரித்த ரணிலை எதிர்த்து, இன்று டளஸ் அளகப்பெருமவை ஆதரித்து மீண்டும் வரலாற்று தவறிழைத்திருக்கின்றனர்.
இதன் மூலம் ஒன்று தெளிவு. சம்பந்தனால் அரசியலை கையாள முடியாது. கையாளக் கூடிய ஆளுமையும் அவருக்கில்லை.
எனவே, இரா.சம்பந்தன், தொடர்ந்தும் அரசியல் அரங்கிலிருப்பது மேலும் பல மோசமான தவறுகளுக்கே வழிவகுக்கும். சம்பந்தனை இனியும் தவறு செய்யாமல் தடுக்கவேண்டுமாயின், அவரை அரசியலிலிருந்து வெளியேறுமாறு கடுமையான அழுத்தங்களை கொடுப்பதை தவிர வேறு தெரிவுகள் இல்லை.
சுமந்திரன் தலைவராகும் தகுதியை இழந்திருக்கின்றார். ஒரு போட்டிக் களத்தில் மோதும் இரண்டு தரப்புக்களில் எவர் வெற்றிபெறுவாரென்று, தெரியாத போது, போட்டிக்களத்தில் சார்பு நிலையெடுக்கக் கூடாது. அது ஒரு அரசியல் தந்திரமாகும். இந்தத் தந்திரத்தை கடந்த பதின்மூன்று வருடங்களின் சுமந்திரன் கற்றுக்கொள்ளவேயில்லை. அந்த வகையில் சுமந்திரன் போன்ற ஒருவர் தமிழ் அரசியலுக்கு தலைமை தாங்க முடியாது. அவர் தலைமை தாங்க ஆசைப்பட்டால் முதலில் தனது தவறுகளுக்கு பொறுப்பேற்கப் பழக வேண்டும். மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அல்லது அரசியலிலிருந்து ஒதுங்க வேண்டும். எனவே தமிழர்கள் விழிப்படையவேண்டும்.
கூட்டமைப்பில் உள்ளவர்களை வீட்டுக்கு அனுப்பி சரியானவர்களைத் தெரிந்தெடுக்க வேண்டும்.