ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட எம் தமிழினத்தின் வரலாற்று நாயகர்களாக நான் பார்ப்பதும் அகம் மகிழ்வதும் ஐந்தே ஐந்து நபர்களைத்தான்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எம் இனத்தை ஆண்ட கரிகாலன், எல்லாளன். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகத்தின் பாதி நாடுகளை கட்டியாண்ட எங்கள் ராஜராஜன், ராஜேந்திர சோழன். நாங்கள் வாழ்ந்த சமகாலத்தில் வீரத்தோடும் அறத்தோடும் ஆட்சி செய்த என் தாய்க்கும் தாய் மொழிக்கும் சமமான எனது தமிழீழ தேசியத் தலைவர் “மேதகு” பிரபாகரன்.
எம் நிலத்தையும் எமது இனத்தையும் திட்டமிட்டு சிதைத்த “ரத்த காட்டேரி” ராஜபக்சேவை அவரது குடி மக்களே ஒட ஒட அடித்து துரத்தி விட்டு வாழ்வுக்கும் அன்றாட உணவுக்கும் சிங்கள வீதிகளில் தறிகட்டு திரிந்து கொண்டிருந்த நிலையில் “இந்நேரம் பிரபாகரன் இருந்திருந்தால் நாங்கள் பட்டினி கிடந்திருக்க மாட்டோம்” என்று ஒரு சிங்கள இளைஞன் கூக்குரல் எழுப்பியது ஒன்றே எம் தலைவனுக்கு சூட்டிய ஒரு மாபெரும் மணிமகுடம்.
“எதிரியை கூட கொல்லக்கூடாது அவன் மனதை வெல்ல வேண்டும்” என்று போர்க்களத்தில் நின்ற எந்த மன்னனும் அல்லது எந்தவொரு தலைவனும் சொன்னதாக இதுவரை வரலாற்றுக் குறிப்பில் இல்லை. கொத்தோடும் பிஞ்சுகளோடும் எங்கள் தாய்மார்கள், சகோதரிகள், எங்கள் வீட்டு பச்சிளம் குழந்தைகள் மீது ரசாயன குண்டுகளையும் கொத்துக் குண்டுகளையும் வீசி ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவித்துக் கொண்டிருந்த நிலையில் கூட என் வீட்டு பெண்களும் எதிரியின் விட்டு பெண்களும் எங்கள் வீட்டு குழந்தைகளும் எதிரியின் குழந்தைகளும் வேறு வேறு அல்ல ஆகையினால் எதிரியோடு மட்டும் யுத்தம் செய்வோம் எல்லாவற்றுக்கும் காலம் ஒருநாள் பதில் சொல்லுமென்று சலனமின்றி சொல்லிவிட்டு இறுதிவரை உறுதியோடு போராடியவர் எங்கள் அண்ணன் மேதகு பிரபாகரன். அதனால்தான் சிங்கள தாய்மார்களில் சிலர் இன்றும் கூட வல்வெட்டிதுறைக்கே வந்து இது “மாவீரன்” பிறந்த மண் என தலைவர் வீட்டில் மண் எடுத்து செல்வதாக மனம் நெகிழும் நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கிறது.
இந்த உலகம் தோன்றிய காலத்திலிருந்து எங்கள் தலைவனைப் போல இதுவரை ஒருவன் பிறந்ததில்லை. இந்த உலகம் அழியும் காலத்தில் கூட எங்கள் அண்ணனை போன்று இன்னொருவன் பிறக்கப் போவதில்லை. தமிழினம் மட்டுமே கொண்டாடும் எங்கள் அண்ணன் பிரபாகரன் அவர்களை மனிதகுலமே கொண்டாடுகிற காலம் வெகு தூரத்தில் இல்லை.
எங்கள் அண்ணனே! மாவீரனே! உன் பிறந்தநாளில் அகம் மகிழ்ந்து வாழ்த்துகிறேன். மண்ணுள்ளவரை விண்ணுள்ளவரை உன் புகழ் நிலைக்கும். உனது அறம் தழைக்கும்.
பேரன்போடும்
பெரும் பாசத்தோடும்
தம்பி,
வ.கௌதமன்
பொதுச் செயலாளர்
தமிழ்ப் பேரரசு கட்சி
“சோழன் குடில்”
தமிழ்நாடு