தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.!

You are currently viewing தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.!

தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் சிறிலங்கா காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி (சயனைட்) வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் .ஈழப்போராட்ட வரலாற்றில் முதன் முதலில் நஞ்சு அருந்தி உயிர் நீத்தவர் இவரே.

சிங்கள இனவாதத்தால் தமிழ் மக்களுக்கெதிரான கொடுமைகளும் படுகொலைகளும் கட்டவிழ்த்து விடப்பட்டு, தமிழ் மக்களின் சுதந்திர இருப்பு சிதைக்கப்பட்டது. இந்நிலையில் தான் அன்று மாணவனாகவிருந்த தியாகி பொன்.சிவகுமாரன், தமிழ் மக்களின் உரிமைகள் மீட்கப்படுவதற்கும் சுதந்திர இருப்பை உறுதிசெய்வதற்கும் ஆயுதப் போராட்டமே சரியான மார்க்கம் என்பதை உணர்ந்து சிங்கள இனவாதத்திற்கெதிராக ஆயுதமேந்திய போராட்டத்தை முன்னெடுத்தார்.

 

யாழ் மண்ணின் உரும்பிராயில் பிறந்த சிவகுமாரன் அவர்கள் சிறு பராயத்திலிருந்தே அநீதிகளைக் கண்டு கொதித்தெழுகின்ற, அவற்றைத் தட்டிக்கேட்கின்ற இயல்புடையவர்.மக்கள் மீதான சிங்கள ஆட்சியாயர்களின் கொடுமை நிறைந்த ஒடுக்குமுறைக்கெதிராக போராட வேண்டுமென்ற துடிப்புடன் சிவகுமாரனால் மேற்கொள்ளப்பட்ட போராட்டச்செயற்பாடுகள் சரியான அரசியல் அடித்தளத்தைக் கொண்டவை. தொலைநோக்கு அடிப்படையில் அமைந்தவை.

தியாகி பொன்.சிவகுமாரனின் போராட்டச் செயற்பாடுகள் சிலவற்றை மீட்டுப்பார்ப்பதன் மூலம், தமிழ் மக்கள் மனங்களில், குறிப்பாக இளைஞர்கள் மனங்களில் விடுதலைக்கான பேரெழுச்சியை ஏற்படுத்திய அம்மாவீரனின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ள முடியும். அதன் மூலம் தமிழ் மக்களின் விடுதலை வென்றெடுக்கப்பட்டு, அடிமைத் தழைகள் நீங்கிய வாழ்வமைய வேண்டுமென்பதற்காக போராடிய சிவகுமாரனின் இலட்சியத்தாகத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள முடியும்.

தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.! 1

புரட்சியும் எழுச்சியும் இளைஞர் சமூகத்திடமிருந்து தான் தோற்றம் பெறுகின்றது. எனவே, தமிழ் மாணவர்களின் கல்வியைச் சீரழிப்பதன் மூலம் மக்களை எளிதாக அடிமைப்படுத்த முடியும் என்ற மூலோபாயத்தை சிங்கள அரசுகள் திடமாக நம்பி செயற்பட்டு வந்திருக்கின்றன. கல்வியில் பின்னடைவை ஏற்படுத்துவதன் மூலம் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கலாம், போர்க்குணத்தை மழுங்கடிக்கலாம், சுதந்திர உணர்வைச் சிதைக்கலாம் என்ற நோக்கத்தில் காலங்காலமாக அவை செயற்பட்டு வந்திருக்கின்றன. (இன்றைய காலத்தில்கூட பல பாடசாலைகளும் பாடசாலைகளை அண்டிய பகுதிகளும் இராணுவ முகாம்களாக இருப்பதைக் கூற முடியும்.

தமிழ் மாணவர்களின் கல்வி மீது கத்தி வைக்கும் ஆரம்பக்கட்டம் ஆயிரத்துத் தொழாயிரத்து எழுபதுகளில், சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக்காலத்தில் தரப்படுத்தல் அமுல்படுத்தப்பட்டதோடு நிகழ்ந்தது. இது போன்ற அக்கிரமங்களை எதிர்த்துப் போராடும் இலக்கோடு உயர்கல்வி மாணவர்கள் ஒருங்கிணைந்த தமிழ் மாணவர் பேரவை தோற்றம் பெற்றது. 1971ல் தமிழ் மாணவர் பேரவையில் இணைந்த சிவகுமாரன் அவர்கள் சில தோழர்களை ஒருங்கிணைத்து சிங்கள அரசுக்கும் தமிழ்த் தேச விரோத சக்திகளுக்கும் எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார்.

கல்வித் தரப்படுத்தலை அமுல்படுத்திய சிறிமா அரசின் துணை அமைச்சராகவிருந்த சோமவீர சந்திரசிறி பயணம் செய்த வாகனத்திற்கு நேரக்கணிய வெடி வைப்பதோடு ஆரம்பமானது சிவகுமாரனது ஆயுதப்போராட்ட வரலாறு (செப் 1970). இச்சம்பவத்திலிருந்து சிங்கள அமைச்சர் உயிர்தப்பிய போதும், அச்சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டில் கைதான சிவகுமாரன் சிறையில் மோசமான சித்திரை வதைகளுக்குட்படுத்தப்பட்டார்.

தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.! 2

தொடர்ந்து தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தை காட்டிக்கொடுக்கும் துரோகத்தனத்தை புரிந்து வந்த யாழ்-நகரமேயர் அல்பிரட் துரையப்பா மீதும் தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்டார் (பெப் 1971). அம்முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை. துரையப்பா மீதான தாக்குதல் காரணமாக கொலை முயற்சிக் குற்றம் சுமத்தப்பட்டு, 3 ஆண்டுகள் கொடுமையான துன்றுத்தல்களுடன்கூடிய சிறைவாழ்க்கையின் பின்னர், தனது 23வது வயதில் விடுதலையானார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை. மிகவும் உறுதியோடு போராட்டச் செயற்பாடுகளை முன்னெடுத்தார்.

மூன்று ஆண்டுச் சிறை வாழ்க்கையின் பட்டறிவு மூலம் போராட்டம் தொடர்பான பல நடைமுறை யதார்த்தங்களை சிவகுமாரன் உணர்ந்து கொண்டார். போராட்டச் செயற்பாடுகள் தொடர்பான இரகசியங்களை வரவழைப்பதற்காக சிங்களப் படைகளும் சிறிலங்கா காவல்துறையும் போராளிகள் மீது கோரமான சித்திரவதைகளை மேற்கொள்ளும் போது உண்மைகள் வெளிப்பட நேர்ந்தால் போராட்டத்திற்கு உதவுகின்ற மக்கள் இன்னல்களை எதிர்கொள்ள வேண்டிவரும், போராட்டத்தின் இலக்கு பாதிக்கப்பட்டு பின்னடைவு ஏற்படும், அத்தோடு போராட்டம் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டுவிடும் ஆகியனவே சிறை வாழ்க்கை மூலம் சிவகுமாரன் பட்டறிந்த யதார்த்தம். எனவே, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடும் சூழல் ஏற்படின் சயனைற் உட்கொண்டு உயிரைப் போக்கிக்கொள்வதன் மூலமே போராட்டத்தை முன்னகர்த்த முடியுமென்ற முடிவை எடுத்தார்.

போராட்ட முறைமையென்பது கொள்கைகளை முன்னிறுத்தி உரிமைகளை வென்றெடுப்பதற்கான வழியேயன்றி, போராட்ட முறைமையே கொள்கையாக வரித்துக்கொள்ள முடியாதென்பதில் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தார். எனவே,போராட்ட முறைமைகள் காலத்திற்கும் சூழலுக்குமேற்ப மாற்றமடைய வேண்டுமென்பதில் ஆழமானதும் தெளிவானதுமான கருத்தைக் கொண்டிருந்தார். தமிழ் மக்களின் அபிலாசைகளையும் உரிமைகளையும் நிலைநிறுத்தும் பொருட்டு அமைதி வழியில் மேற்கொள்ளப்பட்டு வந்த போராட்டங்களையும் பெரிதும் மதித்து ஏற்றுக்கொண்டார். சிறையில் இருந்த காலங்களில் உணவு மறுப்புப் போராட்டங்களை முன்னெடுத்தார்.

அத்தோடு தமிழ் மக்களுக்கெதிரான சிங்களத்தின் கொடுமைகளுக்கும் அநீதிகளுக்குமாக மட்டும் சிவகுமாரன் போராடவில்லை. தமிழ்ச் சமூகத்திற்குள் புதைந்திருந்த சமூக அடுக்குகளைப் பொசுக்கும் முயற்சிகளிலும் அவர் பின்நிற்கவில்லை. சாதியம், பெண் அடக்குமுறைப்போக்கு, மணக்கொடை போன்ற சமத்துவ வாழ்வுக்குப் புறம்பான போக்குகளையும் துணிந்து நின்று எதிர்த்தார்.

சிறிமா அரசானது, 1974 ஜனவரியில் யாழப்பாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட 4வது உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குழப்பும் கீழ்த்தனமான நோக்கில் பல இடையூறுகளை விளைவித்தது. ஆனாலும் மாநாட்டு ஒழுங்கமைப்பாளர்களின் உறுதியான செயற்பாட்டால் மாநாடு பெரும் மக்கள் எழுச்சியுடன் நடந்தேறியது. இவ் வெற்றியின் பின்னணியில் சிவகுமாரன் மிகவும் உத்வேகத்துடன் செயற்பட்டார் என்பதும் வரலாற்றில் பதிவான ஒன்று.

பின்னர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த வெளிநாட்டுப் பிரமுகர்களுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் மீது சிங்களக் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். சிறிலங்கா காவல்துறையின் இந்த மிலேச்சத்தனமான படுகொலையை நேரில் கண்ட சிவகுமாரன் கொதித்தெழுந்தார். அப்படுகொலைக்கு உடந்தையாகவிருந்த உதவிக் காவல் அதிகாரி சந்திரசேகராவைப் பழிவாங்குவதற்கு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டார்.

தாய்க்கு மட்டும் பிள்ளையில்லை தரணிக்கே பிள்ளையவன்.! 3

சிவகுமாரன் விடுதலை என்ற உன்னத இலட்சியத்திற்காக உண்மையான அர்ப்பணிப்புடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டவர். தமிழ் மக்களின் விடியலுக்காக போராடிய தியாகி பொன்.சிவகுமாரன் அவர்கள் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த தருணத்தில் எதிரிகளால் சுற்றிவளைக்கப்பட்ட போது, எதிரிகளிடம் உயிருடன் பிடிபடக்கூடாது என்ற உயர்ந்த இலட்சியத்தைத் தாங்கி சயனைட் அருந்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தற்கொடையாளனாய் 1974ம் ஆண்டு யூன் 5ம் நாள் தியாகி பொன் சிவகுமாரன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரச்சாவால் தன்னுயிரைத் தியாகம் செய்துவிட்ட அம்மாவீரனின் நாமம் தமிழீழத்திலும் தமிழர்கள் வாழும் உலகப்பரப்பெங்கும் விடியலின் பெயரை உச்சரித்தபடி நின்று நிலைக்கும்.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

பகிர்ந்துகொள்ள

Leave a Reply