தாலிபான்களை அங்கீகரிக்கிறதா மேற்குலகம்…?

You are currently viewing தாலிபான்களை அங்கீகரிக்கிறதா மேற்குலகம்…?

உலக நாடுகளால், குறிப்பாக மேற்குலக நாடுகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டு, அமெரிக்க தலைமையிலான “நேட்டோ” வினால் அழித்தொழிக்க முயற்சிக்கப்பட்ட, ஆப்கானிஸ்தானின் “தலிபான்” அமைப்பு, இப்போது மேற்குலகத்தால் அங்கீகரிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதல்களுக்கு பின்னராக மாறிப்போன உலக ஒழுங்கில், ஆயுதம் தரித்த அத்தனை அமைப்புக்களும் பயங்கரவாத அமைப்புக்களாக பார்க்கப்படுவதற்கு வழிவகை செய்து கொடுத்தது, “ஜோர்ஜ் புஷ்” (ஜூனியர்) தலைமையிலான அன்றைய அமெரிக்க அரசு. இதில் அமெரிக்க அரசின் மிகக்கடுமையான எதிரியாக அக்காலகட்டத்தில் பார்க்கப்பட்டது, அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்டுகொண்டிருந்த “தலிபான்” அமைப்பு.

அமெரிக்க இரட்டைக்கோபுர தாக்குதல்களுக்கு சூத்திரதாரியாக இருந்தார் என்று அமெரிக்க அரசு சொன்ன “ஒஸாமா பின் லாடன்”, மறைந்து கொள்ள இடமளித்ததாக “தலிபான்” மீது போர் தொடுத்தது அமெரிக்க அரசு. பக்க பலமாக “நேட்டோ” கூட்டமைப்பும், அதன் அங்கத்துவ நாடுகளும் களத்தில் இறங்கியதில், படிப்படியாக “தலிபான்” அமைப்பினர் ஒதுக்கப்பட்டு, ஆப்கானிஸ்தானில் மேற்குலக ஆசீர்வாதத்தோடு “தலிபான்” அல்லாத புதிய அரசொன்றும் அமைக்கப்பட்டு இயங்கியது.

தாலிபான்களை அங்கீகரிக்கிறதா மேற்குலகம்...? 1

காரணம் எதுவாக இருந்திருந்தாலும் “தலிபான்” ஓரம்கட்டப்பட்டமை தொடர்பில் யாருக்கும் மாற்றுக்கருத்தேதும் இருக்க முடியாது. ஏனெனில், “தலிபான்” ஆட்சிக்காலத்தில் ஆப்கானிய மக்கள் அனுபவித்தவை கொஞ்ச நஞ்சமல்ல. அதிதீவிர இஸ்லாமிய பழமைவாத கோட்பாடுகளை முன்னிலைப்படுத்துவதாக கூறிக்கொண்ட “தலிபான்”கள், ஒருகாலத்தில் மேற்குலக நாடொன்றைப்போல் ஓரளவுக்கு உயர் நிலையில் இருந்த ஆப்கானிஸ்தானை மீள முடியாத கற்காலத்துக்கு கொண்டு சென்றிருந்தார்கள். ஆணாதிக்க சமுதாயமாக, பெண்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு, நவீன உலகத்திலிருந்து எங்கோ கற்கால நாகரீகத்தைவிடவும் மிக மோசமான நிலைக்கு “தலிபான்”களால் கொண்டு செல்லப்பட்டிருந்தது ஆப்கானிஸ்தான்.

எனினும், இங்கு பழைய வரலாறையும் மறந்துவிடலாகாது. அன்றைய “சோவியத் ஒன்றியம்” ஆதிக்கம் செலுத்தி வந்த, “கலாநிதி. நஜிபுல்லா” தலைமையிலான ஆப்கானிய அரசை வீழ்த்த அமெரிக்க அரசால் வளர்த்தெடுக்கப்பட்டதே “தலிபான்” அமைப்பு. அமெரிக்க அரசு தாராளமாக வழங்கிய ஆயுதபலமும், பொருளாதார பலமும், மிக விரைவிலேயே ஆப்கானிஸ்தானின் ஆட்சியை “தலிபான்”கள் கைப்பற்றிக்கொள்ள வழி செய்தன. அதுவரை காலமும் அமெரிக்காவுக்கு சவாலாக இருந்துவந்த “சோவியத் ஒன்றியம்” சமகாலத்தில் வீழ்ந்தமையும் “தலிபான்”களின் எழுச்சியை விரைவு படுத்தியது. ஆப்கானிஸ்தான் “தலிபான்”களின் கைகளில் வீழ்ந்தபோது, மிகக்கொடுமையாக நடந்துகொண்ட “தலிபான்”கள், அதுவரை ஆப்கானிய அரசத்தலைவராக இருந்த “கலாநிதி. நஜிபுல்லா” வை, ஜீப் வாகனத்தில் கட்டி, தெருத்தெருவாக இழுத்துச்சென்று கொலை செய்தமையானது, “தலிபான்”களின் ஆட்சி எவ்வகையானது என்பதை அன்றே சொல்லி நின்றது. இவற்றுக்கெல்லாம் அமெரிக்காவின் பூரண ஆசீர்வாதம் இருந்தமை எல்லாம் பழைய வரலாறுகள்.

தாலிபான்களை அங்கீகரிக்கிறதா மேற்குலகம்...? 2
கலாநிதி. நஜிபுல்லா

2001 இல் அமெரிக்க இரட்டை கோபுரங்கள் மற்றும் அமெரிக்க படைத்தலைமையகமான “பென்டகன்” மீதான தாக்குதல்கள் பழைய வரலாற்றை புரட்டிப்போட்டன. ஆப்கானிஸ்தானில் இருந்து “சோவியத் ஒன்றியம்” துரத்தப்படுவதற்கு “தலிபான்”களை அமெரிக்கா வளர்த்தெடுத்தது போலவே, மத்தியகிழக்கில் எப்போதும் அமைதியின்மை இருக்கவேண்டுமெனவும், மத்தியகிழக்கு நாடுகளுக்கிடையில் ஒற்றுமையே இருக்கக்கூடாதெனவும், மத்தியகிழக்கு நாடுகளின் எண்ணெய் வர்த்தகத்தை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டுமெனவும் கருதிக்கொண்டு அமெரிக்கா, அதற்காக வளர்த்தெடுத்த அமைப்பு, “அல் – கை தா”.

அமெரிக்கா வளர்த்தெடுத்த அதே “அல் – கை தா” அமைப்பே, மேற்படி அமெரிக்க தாக்குதல்களுக்கு காரணம் என அமெரிக்க அரசு அறிவித்ததோடு, “அல் – கை தா” அமைப்பை வேட்டையாட ஆரம்பித்தது. அதன் தலைவராகவிருந்த “ஒஸாமா பின் லாடன்”, ஆப்கானிஸ்தானில் மறைத்துக்கொள்ள “தலிபான்”கள் இடம் கொடுத்ததாக கூறிய அமெரிக்க அரசு “தலிபான்”களையும் அழித்தொழிக்க படாதபாடு பட்டது. 2001 இலிருந்து 2021 வரை எத்தனையோ ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களையும், பல்லாயிரக்கணக்கான அமெரிக்க மற்றும் “நேட்டோ” படைகளின் இராணுவவீரர்களின் உயிர்களையும் “தலிபான்”களுக்கெதிரான நடவடிக்கைகளில் செலவிட்ட அமெரிக்க அரசு, 2021 இல் ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியோடியது.

தாலிபான்களை அங்கீகரிக்கிறதா மேற்குலகம்...? 3
அமெரிக்க / நேட்டோ படைகளோடு ஒத்துழைத்த ஆப்கானியர்களையும் கூடவே அழைத்துக்கொண்டு தப்பிக்கும் அமெரிக்கா.

“தலிபான்”களை கணிசமாக அழித்து விட்டதாக நம்பிய அமெரிக்கா, அது உண்மையில்லை என்பதை, ஆப்கானிஸ்தானை விட்டு தப்பியோடிய போது தெரிந்து கொண்டது. அமெரிக்கா அங்கிருந்து பெட்டி படுக்கைகளை கட்டிக்கொண்டு புறப்பட்டபோது, அமெரிக்க கணிப்பை பொய்யாக்கி மிக வேகமாக வெளியே வந்த “தலிபான்”கள், அதே வேகத்திலேயே ஆப்கானிஸ்தானை கைக்குள் கொண்டு வந்திருந்தனர். அதுவரை, அங்கு ஆட்சியிலிருந்த அரசின் பிரதிநிதிகள், அமெரிக்க படைகளுக்கு துணையாக இருந்தவர்கள் என்று பலதரப்பட்டவர்களையும் தன்னோடு கூட்டிச்செல்லும் அவலத்துக்கு ஆளானது அமெரிக்கா. வியட்நாமில் அமெரிக்கா தோல்வியுற்று எவ்வாறு தப்பித்து ஓடியதோ, அதற்கு சற்றும் குறைவில்லாத இழிநிலையிலேயே ஆப்கானிஸ்தானிலிருந்தும் அமெரிக்கா தப்பியோடியமைக்கு களநிலை காணொளிகளே பலமான சாட்சிகளாக இருக்கின்றன.

https://twitter.com/i/status/1427202316512514050

“தலிபான்”களை துரத்திவிட்டு அமெரிக்க / மேற்குலக ஆதரவோடு அமைக்கப்பட்ட அரசுக்கு ஆயுள் கெட்டியானது என்று நம்பிய மேற்குலகம், பல பில்லியன்கள் பணத்தை அங்கு முதலீடு செய்திருந்த நிலையில், இப்போது ஆப்கானிஸ்தானை மீண்டும் “தலிபான்”கள் கைப்பற்றியுள்ள நிலையில், அங்கிருந்து அமெரிக்காவும் தப்பியோடியுள்ள நிலையில் இப்போது “தலிபான்”களுடன் சமரசம் செய்துகொள்ள விழைவது போலான தோற்றப்பாடுகள் தெரிகின்றன.

எந்த அமெரிக்காவும், எந்த மேற்குலகமும் “தலிபான்”களை கொடூரமான பயங்கரவாதிகள் என்று சித்தரித்தனவோ, அதே அமெரிக்காவும், அதே மேற்குலகமும் இப்போது அதே கொடூரமான “தலிபான்”களை கைகளை விரித்து வரவேற்கின்றன. 22.01.2022 அன்று, பேச்சு வார்த்தைகளுக்கென நோர்வே மண்ணில் இறக்குவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட “தலிபான்”களின் தூதுக்குழு, அது அழைத்து வரப்பட்ட சூழ்நிலைகள், “தலிபான்”களோடு சமரசமாக இணங்கிப்போவதற்கு மேற்குலகம் தயாராகி விட்டதா என்ற கேள்வியை தோற்றுவித்திருக்கிறது.

சுமார் 3.5 மில்லியன் நோர்வே குறோணர்கள் செலவில் பின்லாந்தின் தனியார் விமானமொன்றை வாடகைக்கு தனது செலவிலேயே அமர்த்திய நோர்வே, மிகப்பாதுகாப்பாக “தலிபான்” தூதுக்குழுவினரை வரவழைத்து, சொகுசு உல்லாசவிடுதியில் தங்க வைத்து பேச்சுவார்த்தைகளை நடத்துகிறது. இப்பேச்சுவார்த்தைகளில், அமெரிக்கா, பிரித்தானியா, ஜெர்மனி, இத்தாலி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவையும் கலந்துகொள்கின்றன. 3 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் இப்பேச்சு வார்த்தைகளில், ஆப்கானிஸ்தான் இப்போது எதிநோக்கியிருக்கும் பொருளாதார சிக்கல், மக்களின் வாழ்வியல் தொடர்பான அவல நிலைமைகள், ஆப்கானிஸ்தானின் மறுசீரமைப்பு உள்ளிட்ட விடயங்கள் பேசப்படும் என அறிவிக்கப்பட்டாலும், 20 வருடங்களாக எதிர்த்து போர் செய்த அதே “தலிபான்”களை வலிந்து மேற்குலக நாடொன்றுக்கு அழைத்து பேச வேண்டிய நிர்ப்பந்தம் இப்போது என்ன என்பதே மில்லியன் டொலர் கேள்வி.

தாலிபான்களை அங்கீகரிக்கிறதா மேற்குலகம்...? 4
நோர்வேயில் தரையிறங்கும் “தலிபான்”தூதுக்குழுவினர்.

நோர்வேயில் தரையிறங்கிய “தலிபான்”கள், சர்வதேசத்தால் தாம் அங்கீகரிக்கப்படுவதற்கான முதல்படியாக மேற்குலகத்தின் இந்த செங்கம்பள விரிப்பை நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

நோர்வே வந்துள்ள “தலிபான்”களின் தூதுக்குழுவில், 2008 ஆம் ஆண்டில் காபூலில் “Serena” விடுதியின்மேல் நடத்தப்பட்ட “தலிபான்”களின் தாக்குதலில் பிரதான பங்காற்றியிருந்த ஒருவரும் உள்ளமை பரபரப்பாக பேசப்படுகிறது. இப்போது, இத்தூதுக்குழுவினர் நோர்வேயில் பேச்சுவார்த்தைகளில் அமர்ந்திருக்கும் அதேவேளையில், “Serena” விடுதி தாக்குதலில் சம்பந்தப்பட்ட “தலிபான்” உறுப்பினரை கைது செய்யும்படி நோர்வே காவல்துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

விடுதியின் மீதான தாக்குதலில் பிரதான பங்காற்றிய “தலிபான்” உறுப்பினரின் வருகை பற்றி தனக்கு அறிவிக்கப்படவில்லை என தெரிவித்திருக்கும் நோர்வே பிரதமர், குறித்த நபர் “தலிபான்” தூதுக்குழுவில் இருப்பதை, ஊடகங்கள் வாயிலாகவே தான் அறிந்து கொண்டதாகவும், “தலிபான்” தூதுக்குழுவின் பட்டியலை தான் முன்கூட்டியே அங்கீகரிக்கவில்லையெனவும் சொல்லியிருப்பதும், எனினும், குறித்த நபரது வருகை பற்றி ஒரு வார காலத்துக்கு முன்னதாகவே தான் அறிந்திருந்ததாக நோர்வே வெளியுறவு அமைச்சகம் கூறியிருப்பதும் உச்சக்கட்ட நகைச்சுவைகள்.

தாலிபான்களை அங்கீகரிக்கிறதா மேற்குலகம்...? 5
3.5 மில்லியன் நோர்வே குறோணர்கள் செலவில் அமர்த்தப்பட்ட வாடகை விமானத்தில் “தலிபான்”கள்.

எது எப்படியாயினும், “தலிபான்”களோடு சமரசம் செய்துகொள்ள மேற்குலகம் முனையுமானால் அதற்கான நியாயமான காரணங்களாக மேற்குலகத்துக்கு இருக்கக்கூடியவை, ஆப்கானிஸ்தானில் கொட்டப்பட்டுள்ள மில்லியன் கணக்கிலான பொருளாதாரம் என்பதை விடவும், மாறிவரும் தென்னாசிய பூகோள அரசியலில் விஸ்வரூபமெடுக்கும் சீனா பற்றிய பயமே முதன்மையாக இருக்கும். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா தப்பியோடி வந்த உடனேயே, “தலிபான்”களுடன் சீனா கைகோர்த்ததும், ஆப்கானிஸ்தானின் ஆதிக்க எல்லைக்குட்பட்ட இடங்களில் சீனாவின் இருப்புக்கான அடித்தளங்கள் இடப்பட்டிருப்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டியவை.

எல்லாம் சரியாக முடிந்தால், நாளை அமெரிக்க அதிபரும், “தலிபான்” தலைவரும் ஒரே கோப்பையில் தேநீர் அருந்தலாம்….

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments