துனிசியாவில் ஆப்பிரிக்க மக்கள் மீது கொடூர தாக்குதல்!

You are currently viewing துனிசியாவில் ஆப்பிரிக்க  மக்கள் மீது கொடூர தாக்குதல்!

துனிசியாவில் ஆப்பிரிக்க புலம்பெயர் மக்கள் மீது முன்னெடுக்கப்பட்ட கொடூர தாக்குதலில் பெண்கள், சிறார்கள் என டசின் கணக்கானோர் காயமடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பலர் பால்கனிகளில் இருந்து தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் வாள்களால் தாக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. துனிசியாவின் Sfax பகுதியில் நடந்த இந்த கொலைவெறி தாக்குதலில், பெண்கள் சிறார்கள் என 30ல் இருந்து 40 புலம்பெயர் மக்கள் காயமடைந்துள்ளதாக உள்ளூர் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

41 வயதான துனிசிய நபர், மூன்று கேமரூனிய புலம்பெயர் மக்களுடன் ஏற்பட்ட தகராறில், திங்களன்று கத்தியால் குத்தி கொல்லப்பட்டார். குறித்த நபரின் இறுதிச்சடங்குகளுக்கு பின்னரே, பழி தீர்க்கும் பொருட்டு, உள்ளூர் மக்கள் ஆப்பிரிக்க புலம்பெயர் மக்க மீது தாக்குதலை முன்னெடுத்ததாக கூறுகின்றனர்.

குறித்த கொலை சம்பவம் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, ​​நூற்றுக்கணக்கான துனிசியர்கள் தெருக்களில் கூடி, டயர்களை எரித்து தெருக்களை முற்றுகையிட்டனர், அதே நேரத்தில் அனைத்து சட்டவிரோத புலம்பெயர் மக்களையும் உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தனர்.

ஆனால், புலம்பெயர் மக்கள் மீதான இந்த தாக்குதல், மனிதத்தன்மையற்ற கொடூர செயல் என சமூக ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். சுமார் 40 புலம்பெயர் மக்கள் காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிசார் சில புலம்பெயர் மக்களை கைது செய்து, சுமார் 200 மைல்கள் தொலைவில், லிபியா எல்லைக்கு நாடுகடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வட ஆப்பிரிக்க நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான Sfax, பெரும்பாலான புலம்பெயர் மக்களால் கடல் மார்க்கம் இத்தாலியை சென்றடைய புறப்படும் பகுதியாக பயன்படுத்தப்படுகிறது. 12 மில்லியன் மக்கள் தொகை கொண்ட துனிசியாவில் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து சுமார் 21,000 புலம்பெயர் மக்கள் தஞ்சம் கோரியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply