துருக்கி – சிரிய எல்லையில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன் பலம் ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் கடந்த 6ஆம் திகதி ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் 48,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இரண்டு புதிய நிலநடுக்கங்களில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 213 பேர் காயமடைந்துள்ளதாகவும், மூன்று இடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் துருக்கி உள்துறை அமைச்சர் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
முன்னதாக நேற்று இரவு 8.04 மணிக்கு ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் (6.4 ரிக்டர் அளவுகோல்) 16.7 கிலோமீட்டர் (10.4 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது, இரண்டாவது நிலநடுக்கம் (5.8 ரிக்டர் அளவுகோல்) 7 கிமீ (4.3 மைல்) ஆழத்தில் இருந்தது. இரண்டுமே சுற்றியுள்ள பகுதிகளில் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோரப் பகுதிகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சேதமடைந்த கட்டிடங்களிலிருந்து விலகி இருக்குமாறும் பிராந்தியத்தில் உள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறைந்தது 48,000 பேரை துருக்கி மற்றும் சிரியா நாடுகள் இழந்த வேதனையிலிருந்து இன்னும் மீளாதநிலையில், மற்றொரு நிலநடுக்கம் அந்நாட்டைத் தாக்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.