தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி: இன்று ஆரம்பம்.

  • Post author:
You are currently viewing தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி: இன்று ஆரம்பம்.

தென்ஆப்பிரிக்காவுக்கு சென்றுள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு வெற்றிக்கு 30 புள்ளிகளும், டிராவுக்கு தலா 10 புள்ளிகளும் வழங்கப்படும். இந்தியாவுக்கு எதிரான மூன்று டெஸ்டுகளிலும் தோற்ற தென்ஆப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவில்லை. இங்கிலாந்து அணி 56 புள்ளிகளுடன் 6-வது இடத்தில் உள்ளன.

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, புதிய தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர், பேட்டிங் ஆலோசகர் காலிஸ் ஆகியோர் பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் போட்டி இதுவாகும். உள்ளூர் சூழல் தென்ஆப்பிரிக்காவுக்கு சாதகமானது என்றாலும் டிவில்லியர்ஸ், அம்லா, ஸ்டெயின், மோர்னே மோர்கல் உள்ளிட்டோரின் ஓய்வுக்கு பிறகு இன்னும் தடுமாறி கொண்டு தான் இருக்கிறது. காயம் காரணமாக துணை கேப்டன் பவுமாவும் ஆடவில்லை.

கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், குயின்டான் டி காக், டீன் எல்கர், மார்க்ராம் ஆகியோர் பேட்டிங்கில் பொறுப்புடன் ஆடுவதை பொறுத்து தான் அந்த அணியின் ஸ்கோர் அமையும். பந்து வீச்சில் தனது கடைசி தொடரில் ஆடும் வெரோன் பிலாண்டர், காஜிசோ ரபடா, சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், ஆலிவர் போப், சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் ஆகியோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜானி பேர்ஸ்டோ ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

தென்ஆப்பிரிக்கா : டீன் எல்கர், எய்டன் மார்க்ராம், ஜூபைர் ஹம்சா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), வான்டெர் துஸ்சென், குயின்டான் டி காக், வெய்ன் பிரிட்டோரியஸ், பிலாண்டர், கேஷவ் மகராஜ், ரபடா, அன்ரிஜ் நார்ஜே.

இங்கிலாந்து : ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி, ஜோ டென்லி, ஜோ ரூட் (இங்கிலாந்து), பென் ஸ்டோக்ஸ், ஆலிவர் போப் அல்லது ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட்.

பகிர்ந்துகொள்ள