தென்ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது தொடர் துடுப்பாட்ட போட்டி கேப்டவுனில் நடந்து வருகிறது. இதில் முதல் சுற்றில் முறையே இங்கிலாந்து அணி 269 ஓட்டங்களும், தென்ஆப்பிரிக்க அணி 223 ஓட்டங்களும் எடுத்தன. 46 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது சுற்றை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 4 இலக்குகள் இழப்புக்கு 218 ஓட்டங்கள் எடுத்து இருந்தது.
டாம் சிப்லி 85 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் பேட்டிங்கை தொடர்ந்தனர். நிலைத்து நின்று ஆடிய டாம் சிப்லி 269 பந்துகளில் சதத்தை எட்டினார். 4-வது டெஸ்டில் ஆடும் டாம் சிப்லி அடித்த முதல் சதம் இதுவாகும். அதிரடியாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 47 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 72 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கேசவ் மகராஜ் பந்து வீச்சில் வான்டெர் துஸ்செனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணி 2-வது சுற்றில் 8 இலக்குகள் இழப்புக்கு 391 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டாம் சிப்லி 133 ரன்னுடனும், ஸ்டூவர்ட் பிராட் 8 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். பின்னர் 438 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் 2-வது சுற்றை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 2 இலக்குகள் இழப்புக்கு 126 ஓட்டங்கள் எடுத்தது. டீன் எல்கர் 34 ஓட்டங்களுடனும், சுபாய் ஹம்சா 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். பீட்டர் மாலன் 63 ஓட்டங்களுடனும், கேசவ் மகராஜ் 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.